இயேசு கடவுள் இல்லை | 1500 ஆண்டுகள் பழமையான பைபிள் துருக்கியில் கண்டுபிடிக்கப்பட்டதா ?

பரவிய செய்தி
இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்படவில்லை, இயேசு இறைவனின் மகனே அல்ல. இவர் மதகுரு மட்டுமே. இந்த விவரம் 1500-2000 ஆண்டுகளுக்கு முந்தைய இயேசுவின் சீடர் பர்ணபாஸ் எழுதிய பழைய பைபிளில் துருக்கியில் கண்டறியப்பட்டுள்ளது. இந்த உண்மை வெளி வந்துள்ளதால் இத்தாலி வாடிகன் மிக கவலையில் உள்ளது.
மதிப்பீடு
சுருக்கம்
1500 ஆண்டுகள் பழமையான பைபிள் என துருக்கி செய்திகளில் 2012 ஆம் ஆண்டில் வெளியாகியதற்கு, புத்தகம் குறித்த தவறான புரிதலை Vatican Insider செய்தியில் 2012-லேயே விளக்கப்பட்டுள்ளது. துருக்கி நாட்டு அமைச்சரும் இதுகுறித்த விளக்கத்தை அளித்துள்ளார்.
விளக்கம்
இயேசு கிறிஸ்து பற்றி உண்மையான விவரங்களை அளிக்கும் 1500-2000 ஆண்டுகள் பழமையான பைபிள் துருக்கியில் கிடைத்து இருப்பதாக தமிழில் சமூக வலைதளத்தில் பதிவிட்ட இப்பதிவுக்கு ஆயிரக்கணக்கான ஷேர்கள், லைக்கள் கிடைத்தன.
தங்க நிறத்தில் எழுதப்பட்டு இருக்கும் வரிகளை கொண்ட கருப்பு நிறத்தில் இருக்கும் இப்புத்தகத்தைப் பற்றிய செய்திகள் The National Turk இணையதளத்தில் 2012 பிப்ரவரி 23-ம் தேதி வெளியாகி இருக்கிறது. அதில், இப்புத்தகம் “ பழமையான பைபிள் “ என குறிப்பிட்டுள்ளனர்.
ஆனால், இப்புத்தகம் பழமையான பைபிள் இல்லை என்பதே உண்மையானத் தகவல். ஏனெனில், துருக்கி செய்திகளில் 1500 ஆண்டுகள் பழமையானது என்கிறார்கள், தமிழில் 1500-2000 ஆண்டுகள் பழமையானது என்று பதிவிட்டுள்ளனர்.
கருப்பு புத்தகம் :
1985 ஆம் ஆண்டு கடத்தல்காரர்களுக்கு எதிரான தாக்குதலின் போது முதன் முதலில் இப்புத்தகம் கண்டுபிடிக்கப்பட்டது. எனினும், சில ஆண்டுகள் காணாமல் போன இப்புத்தகம் 2000 ஆண்டு மீண்டும் கண்டுபிடிக்கப்பட்டது. இப்புத்தகம் பழமையான பைபிள் என்ற செய்திகள் 2012-ல் அதிகம் பரவியது.
இதனை சோதித்த துருக்கி அதிகாரிகள் செய்திகளில் பரவுவது போன்று இப்புத்தகம் “ Gospel of Barnabas “ இல்லை. ஆனால், பைபிளில் கூறிய சில வாசகங்கள் மற்றும் அவற்றை மேற்கோள்காட்டி எழுதப்பட்டு இருப்பதாக குறிப்பிட்டுள்ளனர்.
இப்புத்தகத்தின் தவறுகள் குறித்த பல்வேறு விளக்கங்கள் கொண்ட கட்டுரையை 2012 மார்ச் மாதத்தில் “ Vatican Insider “ இணையதளத்தில், “ Gospel of Barnabas “ எனக் கூறும் புத்தகம் Aramaic அல்லது syriacs மொழியில் எழுதப்படவில்லை, ஆனால் தற்போது பேசக்கூடிய மார்டன் Assyrian மொழியை அறிந்தவர்கள் அதில் உள்ள வாக்கியங்களை எளிதாகவே வாசிக்க முடிகிறது எனக் குறிப்பிட்டுள்ளனர்.
“ இஸ்லாமிய நம்பிக்கையுடன் வரிகள் கொண்ட “ Gospel of Barnabas “ இயேசுவை சாதாரண மனிதன் மற்றும் கடவுள் இல்லை என்கிறது. கடவுளின் அவதாரம் என்ற கருத்தை நிராகரிக்கிறது மற்றும் இயேசுவை முகம்மதுவின் தீர்க்கதரிசி எனக் கணிப்பதாக வெளிப்படுத்துகிறது “ என துருக்கியின் கலச்சாரம் மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் Ertugrul Gunay-வின் அறிக்கை Al bawaba-ல் வெளியாகி இருக்கிறது.
துருக்கி அரசும் இந்த கருப்பு புத்தகத்தை 1500 ஆண்டுகள் பழமையான பைபிள் என அதிகாரப்பூர்வமாக எங்கும் குறிப்பிடவில்லை. கிடைத்த தகவலின் அடிப்படையில் இயேசு பற்றியும், பைபிள் என்றும் கூறிய இப்பதிவு தவறான வதந்தி என்ற முடிவுக்கு வர முடிகிறது.