1917-ல் ஒரு ரூபாய் மதிப்பு 13 டாலருக்கு சமமாக இருந்ததா ?

பரவிய செய்தி
இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முன்பாக 1917-ல் ஒரு ரூபாய் மதிப்பு 13 டாலருக்கு சமமாக இருந்தது. ஆனால், 2014-ல் ஒரு டாலரின் மதிப்பு 63 ரூபாய் அளவிற்கு உயர்ந்து உள்ளது. இந்தியாவின் மீது பற்று இருந்தால் இந்த தகவலை பகிரவும்.
மதிப்பீடு
சுருக்கம்
இந்திய ரூபாயில் “ பரிமாற்ற விலை “ ஆனது 1947 ஆம் ஆண்டிற்கு பிறகே தொடங்கியது. 1917 ஆம் ஆண்டில் ஒரு ரூபாயின் மதிப்பு 13 டாலருக்கு நிகராக இருக்கவில்லை.
விளக்கம்
நீண்ட காலமாக ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் 1917 ஆம் ஆண்டில் ரூபாயின் டாலருக்கு நிகரான மதிப்பு பற்றிய படங்கள், தகவல்கள் பரவி வருகிறது. இத்தகவல்கள் உண்மையா ? பொய்யா ? என்ற ஆதாரப்பூர்வமாக யாரும் நிரூபிக்கவில்லை.
1917 ஆம் ஆண்டில் ” ஒரு ரூபாயின் மதிப்பு 13 அமெரிக்க டாலருக்கு “ சமம். ஆனால், 2014 ஆம் ஆண்டில் ஒரு டாலரின் மதிப்பு 63 ரூபாய்க்கு அளவிற்கு உயர்ந்துள்ளது என்பது பரவும் தகவல். 2018-ல் டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 71-ஐ கடந்து தொடர்ந்து சரிந்து வருகிறது. இவை இந்தியாவின் பொருளாதார வீழ்ச்சியை எடுத்துரைக்கிறது என்று கருதப்படுகிறது.
ஆரம்பத்தில் “ பரிமாற்ற விலை “ என ஏதும் அதிகாரப்பூர்வமாக நிர்ணயிக்கப்படவில்லை. பதிலாக, தங்கத்தை நிலையான பண மதிப்பிற்கு பயன்படுத்தப்பட்டது. அன்றைய காலத்தில் பிரிட்டிஷ் பவுண்ட் இல் இருந்து டாலருக்கு மாற்ற, பிரிட்டனில் தங்கம் வாங்கி அதனை அமெரிக்காவிற்கு எடுத்து சென்று அங்குள்ள டாலருக்கு விற்று விடுவர். 1915 ஆம் ஆண்டில் நிலையாக இருந்த பவுண்ட்ஸ் மற்றும் டாலர் மதிப்பு 1919-ல் 1 பவுண்ட்= $4.70 ஆக மாறியது.
இந்திய ரூபாயில் “ பரிமாற்ற விலை “ ஆனது 1947 ஆம் ஆண்டிற்கு பிறகே தொடங்கியது. 1917 ஆம் ஆண்டில் ஒரு ரூபாயின் மதிப்பு 13 டாலருக்கு நிகராக இருக்கவில்லை.
ஒரு பவுண்ட் = 15 ரூபாய்,
ஒரு பவுண்ட்= 4.70 டாலர். எனில், 15 ரூபாய் = 4.70 டாலருக்கு சமமாக இருந்துள்ளது. ஒரு டாலர் தோராயமாக 3 ரூபாய்க்கு நிகராக இருந்து உள்ளது. ஆக, இந்திய ரூபாய் மதிப்பு அதிகமாக இருக்கவில்லை.
” 1947 ஆகஸ்ட் 15-ம் தேதிக்கு பிறகு குறைந்தபட்சம் இந்திய ரூபாய் மற்றும் அமெரிக்காவின் டாலர் மதிப்பு சமநிலையிலேயே இருந்துள்ளது. இந்திய சுதந்திரத்திற்கு பிறகு மேற்கொண்ட ஐந்தாண்டு திட்டங்கள், வளர்ச்சி பணிகள் என இந்திய ரூபாயின் மதிப்பை சரிய விடாமல் வைத்து இருந்தது. 1948-1966 வரையிலான காலக்கட்டத்தில் டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 4.79 ஆக இருந்து உள்ளது ”
ஆனால், இந்திய அண்டை நாடுகளான சீனா மற்றும் பாகிஸ்தான் உடன் சந்தித்த இரு தொடர்ச்சியான போரால் பொருளாதார ரீதியாக பாதிப்பை கண்டது. இதையடுத்து, 1971 ஆம் ஆண்டில் பிரிட்டன் உடனான இந்திய ரூபாய் இணைப்பு துண்டிக்கப்பட்டு நேரடியாக அமெரிக்க டாலருடன் இணைக்கப்பட்டது.
1917 ஆம் ஆண்டில் இந்தியா மற்றும் அமெரிக்க டாலருக்கான நேரடி மதிப்பு முறை இல்லை. பிரிட்டன் பவுண்ட் மதிப்பை வைத்து பார்க்கையில் ரூபாயின் மதிப்பு அமெரிக்க டாலருடன் குறைவாகவே இருந்து உள்ளது. ஆக, 1 ரூபாய் = 13 டாலர் என்பது முற்றிலும் தவறான தகவலே..!!