2022-ல் உலகத்தின் நிலையை கணித்து 1962-ல் வெளியிட்ட புகைப்படமா ?

பரவிய செய்தி
2022-ல் உலகம் பார்ப்பதற்கு எப்படி இருக்கும் என்பதை 1962-ல் இத்தாலி பத்திரிகை புகைப்படத்துடன் கூடிய கதையை வெளியிட்டது.
மதிப்பீடு
விளக்கம்
கோவிட்-19 நோய்த்தொற்றால் இனி பல நாட்கள், மாதங்களுக்கு சமூக இடைவெளியை கடைப்பிடித்து வாழும் சூழ்நிலைக்கு மாறியுள்ளோம். அப்படி 2022-ல் உலக மக்களின் வாழ்க்கை எப்படி இருக்கும் என்பதை இத்தாலி செய்தித்தாள் ஒன்று 1962-லேயே வெளியிட்ட புகைப்படமென மேற்காணும் மீம் பதிவு பரவி வருகிறது.
ஓவியத்தின் புகைப்படத்தில், ஒருவர் மட்டுமே செல்லக்கூடிய சிறியரக மூடிய வாகனத்தில் பலரும் தனித்தனியான செல்லும் காட்சி வரையப்பட்டு உள்ளது. இதை 50 ஆண்டுகளுக்கு முன்பே இன்றைய நிலைக் குறித்து வரையப்பட்ட முன்கணிப்பாக குறிப்பிட்டு பகிர்ந்து வருகிறார்கள்.
உண்மை என்ன ?
இத்தாலி நாட்டில் வாரந்தோறும் வெளியாகும் பத்திரிகையான La Domenica Del corriere-ல் 1962-ம் ஆண்டு டிசம்பர் 16-ம் தேதி வெளியான செய்தித்தாளின் பின்பக்கத்தில் மக்கள் தனித்தனி வாகனத்தில் பயணிக்கும் ஓவியத்தின் புகைப்படம் இடம்பெற்றது. இந்த செய்தித்தாள் நிறுவனம் 1899 முதல் 1989-வரை இயங்கியது.
அந்த புகைப்படத்தின் கீழே புகைப்படம் தொடர்பாக கூற வரும் தகவல் அந்நாட்டு மொழியில் இடம்பெற்று உள்ளது. இப்புகைப்படத்தை ரிவர்ஸ் இமேஜ் சேர்ச் செய்கையில் weirduniverse எனும் தளத்தில் அந்த பத்திரிகையில் வெளியான இரு ஓவியப் புகைப்படங்கள் இடம்பெற்று உள்ளன.
அதில் வைரலாகும் புகைப்படத்திற்கு கீழே, ” நகரங்கள் இப்படி இருக்குமா ? ஒருவேளை முழுமையாக தீர்க்கப்படாவிட்டால், நகரங்களில் போக்குவரத்தின் சிக்கலை எவ்வாறு குறைக்க முடியும் என்பதை இங்கே காணலாம். சிறிய பகுதியை ஆக்கிரமிக்கும் சிறிய ஒற்றை இருக்கைக் கொண்ட கார்கள் ” என இடம்பெற்று இருக்கிறது.
ஆக, இப்புகைபடம் நகரங்களில் இருக்கும் போக்குவரத்து சிக்கலை குறிப்பிட்டு மாறாக சிறியரக ஒற்றை இருக்கை கொண்ட கார்களை எதிர்காலத்தில் பயன்படுத்தலாம் என தெரிவித்து வெளியிடப்பட்டது மட்டுமே. இப்புகைப்படம் எதிர்காலத்தில் நகரங்களில் இருக்கும் போக்குவரத்தை மையப்படுத்தி மட்டுமே வெளியிடப்பட்டது, கோவிட்-19 தொற்றால் உலகம் எப்படி இருக்கும் அல்லது 2022-ல் உலகம் எப்படி இருக்கும் என்ற தொலைநோக்கு பார்வையில் அல்ல.
மேலும் படிக்க : 1981-ல் வெளியான நாவலில் “வுஹான் 400” என கொரோனா வைரஸ் கணிக்கப்பட்டதா ?
கோவிட்-19 நோய்த்தொற்று உலகளாவிய அச்சுறுத்தலாக உருவெடுத்தப் பிறகு கொரோனா வைரஸ் மீதான பல்வேறு கதைகள் மற்றும் ஆதாரமில்லா தகவல்கள் உலக அளவில் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டன. பல ஆண்டுகளுக்கு முன்பாக இடம்பெற்ற முன்கணிப்புகள் என பல தகவல்கள் உலாவி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க : கோவிட்-19 வைரசை நாஸ்டர்டாமஸ் முன்பே கணித்தாரா ?
நம் தேடலில், 2022-ல் உலகம் எப்படி இருக்கும் என்ற தொலைநோக்கு பார்வையில் 1962-ல் இத்தாலி பத்திரிகையில் வெளியிட்டது என பகிரப்படும் புகைப்படம் போக்குவரத்து சிக்கலையும், எதிர்காலத்தில் ஒற்றை இருக்கை கொண்ட சிறியரக வாகனத்தின் பயன்பாட்டை மையப்படுத்தி வெளியிடப்பட்டவையே என அறிய முடிகிறது.