1963-ம் ஆண்டில் ‘ தி ஓமைக்ரான் வேரியண்ட்’ திரைப்படம் வெளியானதா ?

பரவிய செய்தி

மதிப்பீடு

விளக்கம்

உலகையே அச்சுறுத்தி வரும் ஓமிக்ரான்/ஓமைக்ரான் வகை கொரோனா வைரஸ் இதுவரை 29 நாடுகளை பாதித்த நிலையில் இந்தியாவிலும் நுழைந்து விட்டது. ஓமைக்ரான் தொடர்பான பரபரப்பான சூழலுக்கு இடையே, 1963-ம் ஆண்டிலேயே ” ஓமைக்ரான் வேரியண்ட் ” எனும் திரைப்படம் வெளியாகி இருப்பதாக போஸ்டர் ஒன்று உலக அளவில் வைரலாகி வருகிறது.

திரைப்பட இயக்குனர் ராம் கோபால் வர்மா ஓமைக்ரான் வேரியண்ட் திரைப்படத்தின் போஸ்டர் ஒன்றை ட்விட்டரில் பதிவிட்டு இருக்கிறார். 12 ஆயிரம் பேரால் பகிரப்பட்ட இப்பதிவு தற்போது தமிழகத்திலும் சுற்றி வருகிறது. இதன் உண்மைத்தன்மை குறித்து பதிவிடுமாறு வாசகர்கள் தரப்பில் கேட்கப்பட்டு வருகிறது.

உண்மை என்ன ?

Twitter link | Archive link 

2021 நவம்பர் 28-ம் தேதி பெக்கி சேட்டலே எனும் ஐரிஷ் இயக்குநர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், ” தி ஓமைக்ரான் வேரியண்ட் ” என்பதை 70களின் அறிவியல் புனைக்கதை திரைப்பட போஸ்டரில் ஃபோட்டோஷாப் செய்ததாக ” 3 புகைப்படங்களை பதிவிட்டு இருக்கிறார்.

Twitter link | Archive link  

மேலும், டிசம்பர் 1-ம் தேதி ஸ்பானிஷ் மொழி ட்விட்டரில் தன்னுடைய போஸ்டர் ஒன்று கோவிட் புரளிக்கு ” ஆதாரம் ” எனக் கூறி பரவி வருவதாக ட்விட்டரில் மீண்டும் பதிவிட்டு இருக்கிறார்.

1974-ம் ஆண்டு ஸ்பானிஷ் மொழியில் வெளியான ” Sucesos En La IV Fase ” எனும் திரைப்படத்தின் போஸ்டரில் ஓமைக்ரான் வேரியண்ட் என ஃபோட்டோஷாப் செய்யப்பட்ட புகைப்படம் தவறாக வைரலாகி வருகிறது.

ஓமைக்ரான் வேரியண்ட் வைரஸ் பேசுப் பொருளாக மாறியதால் அந்த பெயரில் வெளியான திரைப்படங்களின் போஸ்டர்கள் என சில சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 1963-ம் ஆண்டு வெளியான ” ஓமைக்ரான் ” எனும் இத்தாலிப் பட போஸ்டரை ஆனந்த் மகேந்திரா ட்விட்டரில் பகிர்ந்து இருந்தார்.

Twitter link | Archive link  

ஆனால், 1963-ல் வெளியான ஓமைக்ரான் இத்தாலித் திரைப்படம் ஆனது ஒரு தொற்றுநோயை ஏற்படுத்தும் வைரஸ் தொடர்பானது அல்ல. உண்மையில், தொழிற்சாலையில் இறந்த தொழிலாளியின் உடலை ஒரு வேற்றுக்கிரகவாசி எடுத்துக் கொண்டு, மீண்டும் உயிர் பெறுவதைப் பற்றிய படம்.

மக்கள் புரிந்து கொள்ளும் வகையில் கொரோனா வேரியண்ட்களுக்கு கிரேக்க எழுத்துக்களின் அடிப்படையில் உலக சுகாதார மையம் பெயர் வைத்து வருகிறது. தற்போதைய ஓமைக்ரான் கிரேக்க எழுத்துக்களில் 15 ஆவதாக வரும் எழுத்தைக் குறிக்கிறது.

முடிவு : 

நம் தேடலில், 1963-ம் ஆண்டில் தி ஓமைக்ரான் வேரியண்ட் எனும் திரைப்படம் வெளியானதாக வைரலாகும் போஸ்டர் உண்மையானது அல்ல, அது ஃபோட்டோஷாப் செய்யப்பட்டது என அறிய முடிகிறது.

Please complete the required fields.




Back to top button
loader