1983ல் இந்திரா காந்தி தலைமையில் நடந்த G20 மாநாடு எனப் பரவும் தவறான தகவல் !

பரவிய செய்தி

மதிப்பீடு
விளக்கம்
2023ம் ஆண்டிற்கான G20 உச்சிமாநாட்டின் 18வது கூட்டம் இந்தியாவின் தலைநகரான புது தில்லியில் கடந்த செப்டம்பர் 9-10 அன்று நடைபெற்றது. இந்தியாவில் நடைபெறும் முதல் G20 உச்சிமாநாடு இது என சொல்லப்பட்டு வந்த நிலையில், கடந்த 1983லேயே முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி தலைமையில் G20 மாநாடு நடத்தப்பட்டுள்ளது என்று கூறி வீடியோ ஒன்று தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வருகிறது.
மேலும் அந்த வீடியோவில் மற்ற நாடுகளின் தலைவர்களை இந்திரா காந்தி வரவேற்பது போல காட்சிகள் இடம்பெற்று உள்ளன.
40 ஆண்டுகளுக்கு முன்பு திருமதி இந்திரா காந்தி இந்தியப் பிரதமராக இருந்தபோது, நூற்றுக்கும் மேற்பட்ட தலைவர்கள் மாநாட்டில் கலந்துகொண்டபோது, G20 நாடுகளின் தலைவர்கள் கூட்டம்.. இந்தியாவில் முதல் முறையாக நடைபெறுகிறது என்று நினைப்பவர்கள் கவனிக்கவும். … உலகின் பாதி நாடுகள் pic.twitter.com/SOzEeEfbzV
— Kathiravan Vino (@kathiravan_vino) September 12, 2023
40 ஆண்டுகளுக்கு முன்பு திருமதி இந்திரா காந்தி இந்தியப் பிரதமராக இருந்தபோது, நூற்றுக்கும் மேற்பட்ட தலைவர்கள் மாநாட்டில் கலந்து கொண்டபோது, G20 நாடுகளின் தலைவர்கள் கூட்டம்…
கடைசி க்ளிப்பில் திரு.பிடல் காஸ்ட்ரோவால் கட்டிப்பிடிக்கப்பட்டதைக் கவனிக்கவும். pic.twitter.com/GOMWfT9DSN— Dr.P.Poornimadevi.,BDS., (@Dr_Poornima_BDS) September 19, 2023
உண்மை என்ன ?
பரவி வரும் வீடியோவின் கீபிரேம்களை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் சேர்ச் மூலம் ஆய்வு செய்து பார்த்ததில், ‘Har Haagh Shakti’ என்ற முகநூல் பக்கத்தில் சமூக ஊடகங்களில் பரவி வரும் வீடியோவின் முழு தொகுப்பு கடந்த செப்டம்பர் 07 அன்று பதிவு செய்யப்பட்டிருந்ததைக் காண முடிந்தது.
மேலும் அதில் “7வது குழுவின் முழுமையான உச்சிமாநாட்டிற்கு இந்தியா தலைமை தாங்கியது (1983). மாநாட்டில் 100க்கும் மேற்பட்ட நாடுகள் கலந்து கொண்டன. நாட்டின் மதிப்பும் மரியாதையும் அதிகரித்தது. இது G20 ஐ விட பெரிய நிகழ்வு.” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால் இதில் G20 மாநாட்டோடு தொடர்புடையது என்று எங்கும் குறிப்பிடப்படவில்லை.
மேலும் இதே போன்று AP Archive என்ற யூடியூப் சேனலிலும், வைரல் வீடியோவில் பொருத்தும் காட்சிகளைக் கொண்ட ஒரு வீடியோவைக் கண்டோம். அதில் வீடியோவின் தலைப்பு, “GS 07 03 1983 அணிசேரா நாடுகளின் மாநாடு புதுதில்லியில் தொடங்குகிறது” என்றும், வீடியோவின் விளக்கப் பகுதியில் “16 மார்ச் 1983 அணிசேரா நாடுகளின் 7வது உச்சி மாநாட்டில், இந்தியப் பிரதமர் இந்திரா காந்தி தொடக்க உரையை நிகழ்த்தி வருகிறார். அப்போது அவர் உரையை முடித்து வெளியேறும் போது கியூபா நாட்டின் ஜனாதிபதியான ஃபிடல் காஸ்ட்ரோ, சுத்தியலை அவரிடம் ஒப்படைத்தார்.” என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனை, 1983 மார்ச் 31 தேதியிடப்பட்ட இந்தியா டுடே செய்தியிலும் காண முடிந்தது. அதில் 60 நாட்டுத் தலைவர்கள் அல்லது அரசாங்கத் தலைவர்கள் உட்பட 101 நாடுகளின் பிரதிநிதிகள் இருந்தனர். இந்த நிகழ்வு 1983 மார்ச் 7-12 வரை இந்தியாவின் புது டெல்லியில் நடைபெற்றது என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

முடிவு :
நம் தேடலில், கடந்த 1983ல் இந்திராகாந்தி தலைமையில் G20 உச்சி மாநாடு நடைப்பெற்றதாகப் பரவி வரும் வீடியோ அணி சேரா மாநாட்டோடு தொடர்புடையது. இது G20 உச்சி மாநாட்டோடு தொடர்புபடுத்தி தவறாகப் பரவி வருகிறது என்பதை உறுதிப்படுத்த முடிகிறது.