2ஜி வழக்கில் சி.பி.ஐ குற்றத்தை நிரூபிக்கத் தவறிவிட்டது: நீதிபதி

பரவிய செய்தி
2ஜி அலைக்கற்றை முறைகேடு வழக்கில் அரசு தரப்பானது குற்றத்தை நிரூபிக்கத் தவறிவிட்டது. குற்றத்தை நிரூபிப்பதில் அக்கறை காட்டவில்லை. தகுந்த ஆதாரம் இல்லாத காரணத்தினால் வழக்கில் இருந்து அனைவரும் விடுதலை என்று வழக்கை விசாரித்த நீதிபதி கூறியுள்ளார்.
மதிப்பீடு
சுருக்கம்
நாடே எதிர்பார்த்திருந்த 2ஜி வழக்கின் குற்றச்சாட்டுகளை சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்க சி.பி.ஐ தவறிவிட்டது என்று தெரிவித்துள்ள நீதிபதி ஓ.பி.சைனீ, 2ஜி அலைக்கற்றை முறைகேடு வழக்கில் குற்றம்சுமத்தப்பட்டிருந்த ராசா, கனிமொழி மற்றும் 3 பெரும் நிறுவனங்கள் உள்பட அனைவரையும் விடுவித்து தீர்ப்பளித்துள்ளார்.
விளக்கம்
காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் அரசு 2004 முதல் 2014-ம் ஆண்டுகள் வரை மத்திய ஆட்சியில் இருந்தது. இத்தகைய ஆட்சி காலத்தில் ” 2ஜி அலைக்கற்றை ” ஒதுக்கீட்டில் முறைகேடுகள் நடந்ததாகப் புகார்கள் எழுந்தன. இதைத் தொடர்ந்து உச்சநீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் சி.பி.ஐ விசாரணை நடத்தியது.
விசாரணையைத் தொடர்ந்து மத்திய தொலைத்தொடர்புத்துறை அமைச்சர் ஆ.ராசா, திமுக மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி உள்ளிட்ட 13 பேர் மற்றும் கலைஞர் டிவி உள்பட மூன்று பெரும் நிறுவனங்களின் மீது 2011-ல் சி.பி.ஐ வழக்கு பதிவு செய்தது. இதேபோல் மத்திய அமலாக்கத் துறையும் தனியாக வழக்கு தொடுத்தது. இதன் விளைவாக ஆ.ராசா, கனிமொழி ஆகியோர் திகார் சிறைச் சாலைக்கு சென்றனர்.
இத்தகைய வழக்குகளின் விசாரணை டெல்லி சி.பி.ஐ நீதிமன்ற சிறப்பு நீதிபதி ஓ.பி.சைனீ முன்னிலையில் நடைபெற்று வந்தது. ஆறு ஆண்டுகளுக்கு மேலாக நடைபெற்று வந்த 2ஜி அலைகற்றை வழக்கில் தெரிந்து கொள்ள வேண்டி முக்கியமானவை,
- இந்திய சுதந்திரத்திற்கு பிறகு நாட்டில் நடைபெற்ற ஊழல்களில் மிகப்பெரிய முறைகேடாக அனைவராலும் பார்க்கப்பட்டது.
- கனிமொழி, ஆ.ராசா, கலைஞரின் மனைவி தயாளு அம்மாள், முன்னாள் தொலைத்தொடர்புத் துறையின் செயலாளர் சித்தார் பெஹீரா, ஸ்வான் டெலிகாம், ரிலைன்ஸ் டெலிகாம், யுனிடெக் வயர்லெஸ் நிறுவனங்கள் உள்பட பல முக்கிய நபர்கள் குற்றம்சாட்டப்பட்டனர்.
- 2ஜி அலைகற்றையின் முறைகேடான ஒதுக்கீட்டால் அரசுக்கு ரூ.30,984 கோடி அளவுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டது என்று சி.பி.ஐ குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
- சி.பி.ஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்த ஆறு ஆண்டுகளுக்கு பிறகு வழக்கின் தீர்ப்பு வெளியாகியுள்ளது.
டிசம்பர் 21, 2017 அன்று தீர்ப்பை வசித்த சி.பி.ஐ நீதிமன்ற சிறப்பு நீதிபதி ஓ.பி.சைனீ, ” வழக்கில் சம்பந்தப்பட்ட அனைவரும் விடுதலை என்று ஒரே வரியில் தீர்ப்பளித்தார். தீர்ப்பிற்கு பிறகு நீதிபதி சைனீ, 2ஜி வழக்கில் சி.பி.ஐ தரப்பானது தகுந்த ஆதாரங்களை சமர்பிக்கவில்லை. சி.பி.ஐ குற்றத்தை நிரூபிக்கத் தவறிவிட்டது. கடந்த இத்தனை வருடங்களாக வழக்கு தொடர்பாக தகுந்த ஆதாரம் கிடைக்கும் என்று எதிர்பார்த்து இருந்ததாகவும் கூறியுள்ளார் “.
2ஜி வழக்கால் இத்தனை வருடத்தில் மத்தியிலும், தமிழகத்திலும் ஆட்சி மாற்றங்கள், திரைபடங்களில் அரசியல் வசனங்கள், சமூக வலைதளங்களில் கேளிக்கை கருத்துக்கள் பகிரப்பட்டது மட்டும் தான் மிச்சம்.