2000 ரூபாய் நோட்டு: கடந்து வந்த பாதைகள் மற்றும் பரவும் வதந்திகள்..!!

பரவிய செய்தி
54 ஆயிரம் கோடி மதிப்புள்ள 2000 நோட்டுக்கள் கணக்கில் வரவில்லை, என்று ரிசர்வ் வங்கி இந்த நடவடிக்கை எடுத்து உள்ளது, அதை தமிழக ஊடகங்கள் கூற வில்லை, வட இந்திய செய்திகளில் ஒளிபரப்புகிறார்கள்..
மதிப்பீடு
விளக்கம்
இந்திய ரிசர்வ் வங்கியானது 2000 ரூபாய் நோட்டுகளை திரும்ப பெறுவதாகவும், அனைத்து வங்கிகளும் இனி ₹2000 ரூபாய் நோட்டுகளை வெளியிடுவதை உடனடியாக நிறுத்த வேண்டும் எனவும் நேற்று அறிவிப்பு வெளியிட்டது. அதன்படி பொதுமக்களின் சிரமத்தைக் குறைப்பதற்கும், செயல்பாட்டு வசதியை உறுதி செய்வதற்கும் வரும் மே 23-ஆம் தேதி முதல் பொதுமக்கள் தங்களுக்கு அருகிலுள்ள வங்கிகள் மூலமாக பணத்தை மாற்றி கொள்ளலாம் என அறிவித்துள்ளது.
அதே நேரத்தில் வங்கிக் கிளைகளின் வழக்கமான செயல்பாடுகளுக்கு இடையூறு ஏற்படுவதைத் தவிர்ப்பதற்கு சில வரம்புகளையும் நிர்ணயித்துள்ளது. அதன்படி ஒரு தனிநபர் 2000 ரூபாய் நோட்டுகளை நாள் ஒன்றுக்கு 20,000/- ரூபாய் வரை மட்டுமே மாற்றிக் கொள்ள முடியும் எனவும், இவ்வாறு மாற்றிக் கொள்ள செப்டம்பர் 30 வரையும் அவகாசம் வழங்கியுள்ளது.
இந்நிலையில் தற்போது, நான்கு ஆண்டுகள் அச்சடிப்பதை நிறுத்தியும் 54 ஆயிரம் கோடி மதிப்புள்ள 2000 நோட்டுகள் கணக்கில் வரவில்லை என்பதால் தான் RBI இந்த நடவடிக்கைகளை எடுத்துள்ளது என்றும், இது குறித்து வட இந்திய ஊடகங்கள் தான் செய்தி வெளியிடுகின்றனவே தவிர தமிழ் ஊடகங்கள் இது குறித்து எந்த செய்தியும் வெளியிடவில்லை என்றும் சமூக வலைதளங்களில் பரவலாக செய்திகள் பரவி வருகின்றன.
54 ஆயிரம் கோடிமதிப்புள்ள 2000 நோட்டுக்கள் கணக்கில் வரவில்லை, என்று ரிசர்வ் வங்கி இந்த நடவடிக்கை எடுத்து உள்ளது,
அதை தமிழக ஊடகங்கள் கூற வில்லை, வட இந்திய செய்திகளில் ஒளிபரப்புகிறார்கள் 🇮🇳 pic.twitter.com/WXEwPycgKq
— Kavitha Suresh District Secretary Tirupattur (BJP) (@suravitha) May 19, 2023
உண்மை என்ன?
பரவி வரும் செய்திகள் குறித்து இந்திய ரிசர்வ் வங்கியின் அதிகாரப்பூர்வமான பக்கங்களில் தேடியதில், 2000 ரூபாய் நோட்டுகளில் கணக்கில் வராத பணமதிப்பு குறித்து எந்த செய்திகளும் வெளியிடவில்லை என்பதை அறிய முடிந்தது. எனவே இதனை மேலும் ஆய்வு செய்து பார்க்க, 2000 ரூபாய் நோட்டுகள் அச்சடிக்கப்பட்டதில் இருந்து தற்போது முடிவுக்கு வந்தது வரையிலான அதன் முழுமையான பார்வையை பார்க்க வேண்டியது இங்கு அவசியமாகிறது.
2000 ரூபாய் நோட்டுகள் 2016-இல் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டது ஏன்?
ஒன்றிய அரசு கருப்பு பணத்தை ஒழிப்பதாக சொல்லி, கடந்த 2016 நவம்பர் 08 அன்று பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் இனி செல்லாது என்று பணமதிப்பிழப்பு நடவடிக்கையை அறிவித்தது. இந்த முடிவுக்கு பின்னர் 2016 நவம்பர் 12 அன்று முதல் புதிய 2000 ரூபாய் நோட்டுகள் மக்கள் புழக்கத்திற்கு வர ஆரம்பித்தன.
அப்போது இந்திய பொருளாதாரத்தில் 86 சதவீத புழக்கத்திலிருந்த 500, 1000 ரூபாய் நோட்டுகளை ஒன்றிய அரசு பண மதிப்பிழப்பு செய்த நிலையில், மீண்டும் புதிய 500, 1000 ரூபாய் நோட்டுகளாக அச்சிட்டு பொதுமக்கள் புழக்கத்திற்கு கொண்டு வருவதற்கு மாத கணக்கில் ஆகும் என்ற காரணத்தினால், புதிய தோற்றம் கொண்ட 2,000 ரூபாய் நோட்டுகளை வெளியிட்டது.
அச்சடிக்கப்பட்ட மற்றும் புழக்கத்தில் இருக்கும் 2000 ரூபாய் நோட்டுகளின் தற்போதைய நிலை என்ன?
இந்திய ரூபாய் நோட்டுகளை அச்சடிக்க ஆகும் செலவுகள் குறித்து இந்திய ரிசர்வ் வங்கியிடமிருந்து RTI பெற்ற India Today ஊடகம், இது குறித்து கடந்த 2018 ஆகஸ்ட் 31 அன்று கட்டுரை வெளியிட்டுள்ளது. அதன்படி, “இந்திய அரசு ஒவ்வொரு 2000 ரூபாய் நோட்டுக்கும் 4.18 ரூபாயும், ஒவ்வொரு 500 ரூபாய் நோட்டுக்கும் ரூ.2.57 ஆகவும், ஒவ்வொரு 100 ரூ நோட்டுக்கும் 1.51 ரூபாயும் செலவு செய்கிறது” என்பதை அறிய முடிந்தது.
மேலும் ஒவ்வொரு ஆண்டும் அச்சடிக்கப்பட்ட 2000 ரூபாய் நோட்டுகள் குறித்தும், அதன் பணமதிப்புகள் குறித்தும் இந்திய ரிசர்வ் வங்கியால் வெளியிடப்படும் ஆண்டு அறிக்கையை ஆராய்ந்து பார்த்ததில் பின்வரும் தரவுகள் கிடைத்தன:
2016-17 நிதியாண்டு – 2000 ரூபாய் நோட்டுகள் அறிமுகப்படுத்தப்பட்ட 2016-17 நிதியாண்டில் ரிசர்வ் வங்கியானது 350 கோடி எண்ணிக்கையில் 2000 ரூபாய் நோட்டுகளை அச்சிட்டுள்ளது. அப்போது பணப்புழக்கத்தில் இருந்த 2000 ரூபாய் நோட்டுகளின் எண்ணிக்கை 328.5 கோடி (Count of 2000 Notes) ஆகும். இதன் மூலம் புழக்கத்தில் இருந்த 2000 ரூபாய் பணமதிப்பு அப்போதைய நிதியாண்டில் 6,57,100 கோடியாக இருந்துள்ளது.
2017-18 நிதியாண்டு – முந்தைய நிதியாண்டை கணக்கிடுகையில், ரிசர்வ் வங்கியானது 2017-18 நிதியாண்டில் 151 கோடியாக அதன் அச்சிடும் எண்ணிக்கையை குறைத்துள்ளது. அப்போது பணப்புழக்கத்தில் இருந்த 2000 ரூபாய் நோட்டுகளின் எண்ணிக்கை 336.3 கோடியாகவும், பணப்புழக்கத்தில் ரூபாய் மதிப்பு 6,72,642 கோடியாக இருந்துள்ளது. இது இதுவரை பணப்புழக்கத்தில் இருந்துள்ள மதிப்புகளிலேயே, உச்சபட்ச மதிப்பாக பார்க்கப்படுகிறது.
2018-19 நிதியாண்டு – இந்த நிதியாண்டில் ரிசர்வ் வங்கியானது கடந்த ஆண்டின் எண்ணிக்கையான 151 கோடியிலிருந்து குறைத்து, 5 கோடிகள் எண்ணிக்கையில் மட்டும் 2000 ரூபாய் நோட்டுகளை அச்சடித்துள்ளது. அப்போது பணப்புழக்கத்தில் இருந்த 2000 ரூபாய் நோட்டுகளின் எண்ணிக்கை 329.1 கோடியாகவும், பணப்புழக்கத்தில் ரூபாய் மதிப்பு 6,58,199 கோடியாகவும் இருந்துள்ளது.
2019-20 நிதியாண்டு – இந்த நிதியாண்டிலிருந்து இந்திய ரிசர்வ் வங்கியானது அதிகாரப்பூர்வமாக 2000 ரூபாய் நோட்டுகளை அச்சடிப்பதை நிறுத்தியுள்ளது. அப்போது பணப்புழக்கத்தில் இருந்த 2000 ரூபாய் நோட்டுகளின் எண்ணிக்கை 273.9 கோடியாகவும், பணப்புழக்கத்தில் ரூபாய் மதிப்பு 5,47,952 கோடியாக இருந்துள்ளது.
2020-21 நிதியாண்டு – இந்த நிதியாண்டில் மக்களிடம் பணப்புழக்கத்தில் இருந்த 2000 ரூபாய் நோட்டுகளின் எண்ணிக்கை 245.1 கோடியாகவும், பணப்புழக்கத்தில் ரூபாய் மதிப்பு 4,90,195 கோடியாக இருந்துள்ளது.
2021-22 நிதியாண்டு – இந்த நிதியாண்டில் மக்களிடம் பணப்புழக்கத்தில் இருந்த 2000 ரூபாய் நோட்டுகளின் எண்ணிக்கை 214.2 கோடியாகவும், பணப்புழக்கத்தில் ரூபாய் மதிப்பு 4,28,394 கோடியாக இருந்துள்ளது.
இந்திய ரிசர்வ் வங்கி அளித்துள்ள தரவுகளின் படி, நடப்பாண்டில் (2023-இல்) 181 கோடி ரூபாய் நோட்டுகள் ( 10.8 சதவீதம்) மட்டுமே புழக்கத்தில் உள்ளன. மேலும் தற்போது புழக்கத்தில் உள்ள 2000 ரூபாய் நோட்டுகளின் மதிப்பு 3.62 லட்சம் கோடி ஆகும். இது மார்ச் 31, 2018 அன்று உச்சத்தை எட்டிய 2000 ரூபாய் நோட்டுகளின் மதிப்பான ரூ.6.73 லட்சம் கோடியிலிருந்து பாதியாக குறைந்துள்ளதை தெளிவாகக் காட்டுகிறது.
2000 ரூபாய் நோட்டுகளை அரசு திரும்ப பெறுவதன் காரணம் என்ன?
‘Clean Note Policy‘ கொள்கை அடிப்படையில் ரிசர்வ் வங்கி நேற்று வெளியிட்ட அறிக்கையில் “ரூ.2000 மதிப்பிலான ரூபாய் நோட்டுகளில் சுமார் 89% மார்ச் 2017 க்கு முன் வெளியிடப்பட்டது மற்றும் அவற்றின் ஆயுட்காலம் 4-5 ஆண்டுகள் எனவும் மதிப்பிடப்பட்டது. அதன்படி புழக்கத்தில் உள்ள இந்த ரூபாய் நோட்டுகளின் மொத்த மதிப்பு, உச்சத்தில் இருந்த ₹6.73 லட்சம் கோடியிலிருந்து ₹3.62 லட்சம் கோடியாகக் குறைந்துள்ளது, இது மொத்த சதவீதத்தில் 10.8% மட்டுமே. இந்த மதிப்பையும் பொதுமக்கள் பண பரிவர்த்தனைகளுக்கு பயன்படுத்துவதில்லை. மேலும், பொதுமக்களின் பணத் தேவையைப் பூர்த்தி செய்ய மற்ற வகை ரூபாய் நோட்டுகளின் இருப்பு தற்போது தொடர்ந்து போதுமானதாக உள்ளது.
எனவே வரும் மே 23-ஆம் தேதி முதல் பொதுமக்கள் தங்களுக்கு அருகிலுள்ள வங்கிகள் மூலமாக பணத்தை மாற்றி கொள்ளலாம். அதே நேரத்தில் வங்கிக் கிளைகளின் வழக்கமான செயல்பாடுகளுக்கு இடையூறு ஏற்படுவதைத் தவிர்ப்பதற்கு சில வரம்புகளையும் நிர்ணயித்துள்ளோம். அதன்படி ஒரு தனிநபர் 2000 ரூபாய் நோட்டுகளை நாள் ஒன்றுக்கு 20,000/- ரூபாய் வரை மட்டுமே மாற்றிக் கொள்ள முடியும், இவ்வாறு மாற்றிக் கொள்ள செப்டம்பர் 30 வரை அவகாசம் வழங்கியுள்ளோம்.” என்று தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
2000 ரூபாய் நோட்டுகளை திரும்பப் பெறுவதால் இந்திய பொருளாதரத்தில் இழப்பு ஏற்படுமா?
கடந்த 2016 பணமிழப்பு நடவடிக்கையையுடன் ஒப்பிடும் போது, இந்த நடவடிக்கை குறைவான இடையூறுகளையே ஏற்படுத்தும் என்று ஆய்வாளர்கள் மற்றும் பொருளாதார வல்லுநர்களால் எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில் 2000 நோட்டுகளை திரும்ப பெறுவதற்கான கால அவகாசம் இந்த முறை அரசால் நீண்ட கால இடைவெளிகளுடன் கொடுக்கப்பட்டுள்ளது.
மேலும் கடந்த நான்கு ஆண்டுகளாகவே 2000 ரூபாய் நோட்டுகளை அச்சிடுவதை இந்திய ரிசர்வ் வங்கி நிறுத்தியுள்ளது. இந்த நோட்டுகளை திரும்பப் பெறுவதற்கான முடிவை விளக்குகையில், இதன் மூலம் பொதுவான பரிவர்த்தனைகளுக்கு இவை பயன்படுத்தப்படுவதில்லை என்பதை அறிய முடிகிறது.
மேலும் இது குறித்து ICRA ரேட்டிங்ஸின் நிதித்துறையின் மூத்த துணைத் தலைவர் கார்த்திக் சீனிவாசன் கூறுகையில், “வங்கிகளைப் பொறுத்தவரை, இந்த நடவடிக்கை நேர்மறையானதாகவே பார்க்கப்படுகிறது. 2000 நோட்டுகளை திரும்ப பெறுவதன் மூலம் வங்கிகளின் வைப்புத்தொகை மேம்படும் என்றும், இது டெபாசிட் விகித உயர்வு மீதான அழுத்தத்தைக் குறைக்கும் என்றும் சொல்லப்படுகிறது. மற்றும் குறுகிய கால வட்டி விகிதங்களில் மிதமான நிலைக்கும் இது வழிவகுக்கும்,” என்கிறார். மேலும் தி எகனாமிக் டைம்ஸ் இது குறித்து “What India’s decision to scrap its Rs 2000 note means for its economy” என்னும் தலைப்பில் கட்டுரையாக வெளியிட்டுள்ளது.
ஆனால் வங்கிகளுக்கு இந்த நடவடிக்கை சாதகமாக தெரிந்தாலும், இதுவரை அச்சடிக்கப்பட்டுள்ள மொத்த 2000 ரூ நோட்டுகளின் எண்ணிக்கை 506 கோடி நோட்டுகளாக உள்ளது என்பதையும், ஒவ்வொரு 2000 ரூபாய் நோட்டுக்கும் 4.18 ரூபாயும் என்று செலவாகும் பட்சத்தில், இதுவரை பணத்தை அச்சடிக்க மட்டுமே அரசுக்கு 2,115.08 கோடி ரூபாய் (தோராயமாக) செலவாகியுள்ளது என்பதையும், இந்த ரூபாய் நோட்டுகளின் மொத்த பண மதிப்பு 10,12,000 கோடி ரூ என்பதையும் அறிய முடிகிறது. இதன் மூலம் இதுவரை அச்சடிக்கப்பட்டுள்ள 506 கோடி 2000 ரூ நோட்டுகளின் நிலை கேள்விக்குறியாகவே உள்ளது.
2000 ரூபாய் நோட்டுகளை திரும்ப பெறுவது குறித்து பரவி வரும் வதந்திகள்:
தற்போது, நான்கு ஆண்டுகள் அச்சடிப்பதை நிறுத்தியும் 54 ஆயிரம் கோடி மதிப்புள்ள 2000 நோட்டுகள் கணக்கில் வரவில்லை என்பதால் தான் RBI இந்த நடவடிக்கைகளை எடுத்துள்ளது என்று சமூக வலைதளங்களில் பரவலாக செய்திகள் பரவி வருகின்றன. இது குறித்து தெளிவாக ஆய்வு செய்து பார்த்ததில், இந்திய ரிசர்வ் வங்கியானது கணக்கில் வராத பணமதிப்புகள் குறித்து எந்த அறிக்கையும் வெளியிடவில்லை என்பதை உறுதி செய்ய முடிந்தது.
மேலும் இது குறித்து மேலும் தேடியதில், வங்கிகள் தங்களுடைய திவால்நிலையை மீட்பதன் மூலம் ரூ.54,000 கோடி பணமதிப்பில் ஊக்கத்தை பெற முடியும் என்று 2000 ரூபாய் பணக்கட்டுகளின் புகைப்படத்துடன் Times of india வெளியிட்டுள்ள செய்தியை காண முடிந்ததே தவிர, சமூக வலைதளங்ககளில் தற்போது பரவி வருவது போல ரூ.54,000 கோடி மதிப்புள்ள 2000 நோட்டுகள் கணக்கில் வராதது குறித்து எந்த செய்திகளும் ஊடகத்தால் வெளியிடப்படவில்லை என்பதையையும் அறிய முடிந்தது.
முடிவு: