சைக்கிளை கண்டுபிடித்தது தமிழனா ? கல்வெட்டு ஆதாரம் நம்பலாமா ?

பரவிய செய்தி
1300 ஆண்டுகள் பழமையான திருச்சி பஞ்சவர்ணேஸ்வரர் கோவிலில் உள்ள தூணில் ஒருவர் சைக்கிள் ஓட்டுவது போன்ற உருவம் செதுக்கப்பட்டுள்ளது. உலகிலேயே முதன் முதலில் மிதிவண்டியை கண்டுபிடித்தது தமிழன் தான் என்று நம்பி பலரும் செய்தி பரப்புகிறார்கள் .
மதிப்பீடு
சுருக்கம்
ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் கோவிலின் சீரமைப்பு பணிகள் நடைபெற்றுள்ளது. அந்த காலக்கட்டத்தில் மிதிவண்டியின் சிற்பம் செதுக்கப்பட்டது என்று கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளனர்.அதனால் சைக்கிள் கண்டுபிடித்தது தமிழர்கள் என்ற வதந்தியை நம்ப வேண்டாம் .
விளக்கம்
1300 ஆண்டுகளுக்கு முன்பே கட்டப்பட்ட திருச்சி பஞ்சவர்ணேஸ்வரர் கோவிலில் உள்ள தூணில் மிதிவண்டியின் சிற்பம் ஒன்று செதுக்கப்பட்டுள்ளது. ஆக, மிதிவண்டியைக் கண்டுபிடித்தது தமிழர்கள் தானோ என்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.
பஞ்சவர்ணேஸ்வரர் கோவில் உருவானக் கதை:
முற்காலச் சோழர்களின் தலைநகராக விளங்கியது தான் திருச்சி உறையூர். உறையூரை ஆண்ட சோழ அரசர் ஒருவர் தனக்கு கிடைத்த சிவலிங்கத்தைக் கொண்டு அங்கு பஞ்சவர்ணேஸ்வரர் என்ற பெயரில் ஓர் கோவிலை எழுப்பியுள்ளார். இக்கோவில், உதங்க முனிவருக்கு இறைவன் ஐந்து காலங்களிலும் ஐந்து வண்ணங்களில் காட்சியளித்த தலம் என்று ஒரு கதையும் கூறிகின்றனர்.
மிதிவண்டி சிற்பம்:
உறையூர் பஞ்சவர்ணேஸ்வரர் ஆலயம் பல்வேறு சிற்பக் கலை வேலைபாடுகளோடு நிரம்பியுள்ளன. அவற்றில், மிதிவண்டியின் மீது ஒருவர் அமர்ந்து இருப்பது போன்ற சிற்பம் பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால், அன்றைய காலக்கட்டத்திலேயே மிதிவண்டியை தமிழன் கண்டுபிடித்திருக்கலாம் என்ற கருத்து நிலவுகிறது.
எனினும், “ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் நகரத்தாரால் கோவிலில் சீரமைப்பு பணிகள் நடைபெற்றதாகவும், அந்த சீரமைப்பு பணியின் போது மிதிவண்டியின் சிற்பம் செதுக்கப்பட்டதாகவும் கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளனர்”.
இதைக்குறித்து டாக்டர் கலைக்கோவன் “நான் பிரார்த்தனை செய்தப்பிறகு சுற்றிப்பார்த்து கொண்டிருந்த போது அம்மன் கோவில் பின்புறம் ஒரு தூணில் மிதிவண்டி செதுக்கப்பட்டிருப்பதை பார்த்தேன். பழைய காலத்து கோவிலில் மிதிவண்டி படத்தை பார்க்கையில் வேடிக்கையாகவும் புதிராகவும் இருந்தது. எந்த அதிகாரிகளும் அறிஞர்களும் இது எப்படி வந்தது என்ற வரலாற்றை விளக்கி எழுதவில்லை. உண்மையை ஆராய்ச்சி செய்யத் தொடங்கினேன்” என்றார்.
1920-ஆம் ஆண்டு இந்த கோயில் புதுப்பிக்கப்பட்ட போது செதுக்கப்பட்டிருக்க வாய்ப்பிருக்கிறது. “யாரோ ஒருவர் மிதிவண்டியில் செல்வதை பார்த்து ஈர்க்கப்பட்டு கல்லில் நிரந்தரமாக செதுக்கி இருக்கிறார் ” என்கிறார் கலைக்கோவன்.
உண்மை எதுவென்று அறியாமல் தவறான செய்திகளைப் பகிர்வதற்கு பதிலாக தமிழகத்தில் கண்டுகொள்ளப்படாத, சிதைவடையும் நிலையில் உள்ள அரிய சிற்பங்கள் பற்றிய தகவல்களை மக்கள் தெரிந்து கொள்ள முயற்சிக்கலாம் .
YouTurn உண்மையை சொல்லும் பணி முக்கியம் என நினைக்கின்றீர்களா? நன்கொடை அளித்து நீங்களே மக்கள் பத்திரிகையாக இயங்க வழி செய்யுங்கள்.