2001ல் கலைஞரை கைது செய்த போது மு.க.ஸ்டாலின் தலைமறைவாக இருந்ததாக சவுக்கு சங்கர் பரப்பிய பொய் !

பரவிய செய்தி
2001ல் தனது தந்தை கலைஞர் கைது செய்யபட்டபோது ஆந்திரா நல்லூரில் பதுங்கிய ஸ்டாலின் இன்று செந்தில் பாலாஜி கைது செய்யும்போது துடித்துபோய் மருத்துவமனைக்கு ஓடுகிறார்.. நான் கலைஞரின் வாரிசுன்னு இனி ஸ்டாலின் பேச எந்த யோக்கிதையும் கிடையாது.Twitter link | Archive link
மதிப்பீடு
விளக்கம்
அமைச்சர் செந்தில் பாலாஜியின் சென்னையில் உள்ள அரசு வீடு, கரூர் வீடு மற்றும் அவரது அலுவலகத்தைக் கடந்த 13ம் தேதி அமலாக்கத்துறை சோதனை செய்தனர். இதனைத் தொடர்ந்து அமலாக்கத்துறை அவரை கைது செய்த நிலையில், வரும் 28ம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்கச் சென்னை முதன்மை நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில் அவர் நெஞ்சுவலியின் காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
2001ல் தனது தந்தை கலைஞர் கைது செய்யபட்டபோது ஆந்திரா நல்லூரில் பதுங்கிய ஸ்டாலின் இன்று #பத்துருபாய் செந்தில் பாலாஜி கைது செய்யம்பொது துடித்துபோய் மருத்துவமனைக்கு ஓடுகிறார்… நான் கலைஞரின் வாரிசுன்னு இனி ஸ்டாலின் பேச எந்த யோக்கிதையும் கிடையாது 😂 pic.twitter.com/U0YdBTkPvn
— namasivayam (@namasivaya24042) June 16, 2023
செந்தில் பாலாஜியைக் கைது செய்ததும் முதலமைச்சர் ஸ்டாலின் நேரில் சென்று அவரை பார்த்தார். ஆனால், 2001ம் ஆண்டு கலைஞரைக் கைது செய்தபோது ஸ்டாலின் ஆந்திரா நல்லூரில் தலைமறைவாக இருந்ததாக சமூக வலைத்தளங்களில் பரப்பி வருகின்றனர்.
உண்மை என்ன ?
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இரண்டாவது முறையாகத் தமிழ்நாடு முதலமைச்சராக ஆட்சி பொறுப்பேற்ற 2001ம் ஆண்டு ஜூன் மாத இறுதியில், அவருக்கு முன்னர் முதலமைச்சராக இருந்த கலைஞர் கருணாநிதி கைது செய்யப்பட்டார். அவர் கைது செய்யப்பட்டது குறித்தும், அப்போது ஸ்டாலின் எங்கு இருந்தார் என்பது குறித்தும் இணையத்தில் தேடினோம்.
கலைஞர் கைது செய்தது பற்றி தி ஹிந்துவின் ‘Front Line’ இணையதளத்தில் 2001 ஜூலை 7ம் தேதியன்று கட்டுரை ஒன்று பதிவிடப்பட்டுள்ளது. அதில், ஜூன் 30ம் தேதியே சென்னை முதன்மை அமர்வு நீதிபதி எஸ்.அசோக்குமார் முன்பு ஸ்டாலின் சரணடைந்தார் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஸ்டாலின் சரணடைந்ததைத் தொடர்ந்து அவரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. முதலில் சென்னை மத்தியச் சிறையில் அடைக்கப்பட்டவர், பின்னர் மதுரை மத்தியச் சிறைக்கு மாற்றப்பட்டார்.
ஜூன் 29ம் தேதி நள்ளிரவு கலைஞரின் வீட்டையும், முரசொலி மாறன் வீட்டையும் காவல் துறையினர் சுற்றி வளைத்துள்ளனர். அதே நேரத்தில் வேளச்சேரியிலிருந்த ஸ்டாலின் வீட்டையும் காவல்துறையினர் சூழ்ந்துள்ளனர். ஆனால், இதற்கு முன்னதாகவே ஸ்டாலின் அவரது உறவினரை சந்திக்க பெங்களூர் சென்றுள்ளார். கலைஞரின் கைதையடுத்து ஜூன் 30ம் தேதியே அவரும் நீதிபதி முன்னிலையில் சரணடைந்துள்ளார்.
இது தொடர்பாக ‘Tribune’ இணையதளத்தில் புகைப்படத்துடன் செய்தி வெளியிடப்பட்டுள்ளது. அதில், கலைஞர் கைது செய்யப்பட்டதையடுத்து சிறைக்கு வெளியே அமர்ந்திருக்கும் படம் மற்றும் சென்னை மேயர் ஸ்டாலின் முதன்மை அமர்வு நீதிபதி வீட்டில் சரணடையச் சென்ற போது எடுக்கப்பட்ட படங்கள் பதிவிடப்பட்டுள்ளது.
எந்த ஒரு முன்னறிவிப்புமின்றி தான் கலைஞர் நள்ளிரவில் கைது செய்யப்பட்டுள்ளார். அவ்வாறு இருக்கையில் அவரது மகனும், சென்னை மாநகராட்சியின் மேயருமான ஸ்டாலின் மட்டும் எப்படி முன்கூட்டியே தலைமறைவாகி இருக்க முடியும். அது மட்டுமின்றி கலைஞரைக் கைது செய்ததும் ஸ்டாலினும் சரணடைந்துள்ளார். மேற்கொண்டு மதுரை மத்தியச் சிறையில் நீதிமன்ற காவலிலும் வைத்துள்ளனர். அவர் ஆந்திராவில் தலைமறைவாக இருந்தார் எனக் கூறுவது பொய்.
முடிவு :
நம் தேடலில், 2001ம் ஆண்டு கலைஞரைக் கைது செய்தபோது மு.க.ஸ்டாலின் ஆந்திராவில் தலைமறைவாக இருந்தார் எனப் பரவக் கூடிய தகவல் உண்மை அல்ல. கலைஞரைக் கைது செய்த ஜூன் 30ம் தேதியே ஸ்டாலினும் சரணடைந்துள்ளார் என்பதைக் காண முடிகிறது.
கூடுதல் தகவல் :
2001ம் ஆண்டு கலைஞரைக் கைது செய்தபோது மு.க.ஸ்டாலின் பெங்களூருக்கு தப்பிச் சென்றதாக சவுக்கு சங்கர் பேசிய வீடியோ ஒன்றையும் பரப்பி வருகின்றனர். அதில், கைதுக்கு பயந்து ஸ்டாலின் சாலை மார்க்கமாக பெங்களூருக்கு தப்பிச் சென்றதாக பேசி இருக்கிறார்.
ஜூன் 30 , 2001 ஊழல் வழக்கில் கருணாநிதி கைது செய்யப்பட்ட போது..
பெங்களூரு தப்பி சென்ற ஸ்டாலின்..!@SavukkuOfficial pic.twitter.com/SBfGsf0Vtx
— கலையரசி பாண்டியன் (@LadyBossK2K) July 1, 2023
சவுக்கு சங்கரின் இப்போட்டி 2023 பிப்ரவரி ராவணா யூடியூப் சேனலில் வெளியான வீடியோவில் இடம்பெற்று இருக்கிறது.
ஆனால், கலைஞர் கைதின் போது சென்னை மேயராக இருந்த மு.க.ஸ்டாலின் பெங்களூரில் இருந்துள்ளார். கலைஞர் கைதான ஜூன் 30ம் தேதியே ஸ்டாலின் நீதிமன்றத்தில் சரணடைந்தார். ஆனால் தப்பி ஓடி தலைமறைவாக இருந்ததாக தவறான தகவலை சவுக்கு சங்கர் பேசி இருக்கிறார்.