This article is from Feb 13, 2021

வைரலாகும் 2014-2020 வரையிலான பெட்ரோல், டீசல் விலை பட்டியல் !

பரவிய செய்தி

2014-ம் ஆண்டு மே மாதம் கச்சா எண்ணெய் ஒரு பேரல் $105.71 அமெரிக்க டாலர்களாக இருந்த போது, இந்தியாவில் பெட்ரோல் ரூ71.41 மற்றும் டீசல் ரூ56.71 ஆகவும் இருந்தது. அதே 2020 டிசம்பரில் கச்சா எண்ணெய் ஒரு பேரல் $47.58 டாலர்களாக இருக்கும் போது இந்தியாவில் பெட்ரோல் ரூ90.34 மற்றும் ரூ.80.51 ஆக உயர்ந்து இருக்கிறது.

மதிப்பீடு

விளக்கம்

இன்று இந்திய மக்களின் பெரும் தலைவலியாக மாறி இருப்பது பெட்ரோல் மற்றும் டீசல் உள்ளிட்டவையின் விலை உயர்வே. எந்த கட்சி ஆட்சியில் இருந்தாலும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வால் பாதிக்கப்படுவது சாமானிய மக்களே. ஆகையால், பெட்ரோல், டீசல் விலை உயர்வின் போது அரசியல் கட்சிகள் கூட கண்டனங்களும், போராட்டங்களும் நடத்துவதுண்டு.

மத்தியில் ஆளும் இதே பாஜக அரசு கூட காங்கிரஸ் ஆட்சியில் பெட்ரோல் விலை உயர்வின் போது பல போராட்டங்களை நடத்தியது. ஆனால், தற்போதைய ஆட்சியில் வரிகள் அதிகரித்து பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்த்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில், 2014-ம் ஆண்டு மே மாதம் முதல் 2020 டிசம்பர் மாதம் வரையில் இருந்த கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் விலை தொடர்பான பட்டியல் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. கடந்த ஜனவரி மாதமே இப்பட்டியல் ட்விட்டர் உள்ளிட்டவையில் பகிரப்பட்டு இருந்துள்ளது.

2015 மார்ச் மாதம், பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் 2009 மற்றும் 2014-ம் ஆண்டில் காங்கிரஸ் ஆட்சியில் கச்சா எண்ணெய் விலை மற்றும் பெட்ரோல், டீசல் விலை தொடர்பான தரவுகளை எழுத்துப்பூர்வமாக அளித்த தகவல் pib.gov.in வெளியிட்டு இருக்கிறது. 2014-ம் ஆண்டில் உலக அளவில் கச்சா எண்ணெய் விலை உயர்வை கண்டது. அதன்பின், பெரும் வீழ்ச்சியை சந்தித்தது.

2017 ஜூன் மாதம், ஒரு பேரல் கச்சா எண்ணெய் $46.37 டாலர்கள் ஆக விற்பனை செய்யப்பட்டது. அப்போது, தலைநகர் டெல்லியில் பெட்ரோல் ரூ.63.55 மற்றும் டீசல் ரூ.53.53 ஆக விற்பனை செய்யப்பட்டது. அதிகபட்சமாக, மும்பையில் ரூ74.30 மற்றும் ரூ58.76 ஆக இருந்தது.

2020 டிசம்பரில், அதிகபட்சமாக ஒரு பேரல் கச்சா எண்ணெய் $49 ஆக இருந்தது. ஒரு லிட்டர் பெட்ரோல் மற்றும் டீசல் டெல்லியில் ரூ.83.71, ரூ73.87 ஆகவும், அதிகபட்சமாக மும்பையில் ரூ90.34, ரூ80.51 ஆகவும் விற்பனை செய்யப்பட்டு உள்ளது. 2020 கொரோனா காலத்தில் மத்திய அரசின் கலால் வரி உயர்த்தப்பட்டதே கச்சா எண்ணெய் குறைந்தும் பெட்ரோல் விலை கூடுவதற்கான காரணமாகும்.

மேலும் படிக்க : இந்தியாவில் பெட்ரோல், டீசல் மீதான உண்மையான வரி விதிப்பு எவ்வளவு ?

இந்தியாவில் கச்சா எண்ணெய் போக்குவரத்து, சுத்திகரிப்பில் தொடங்கி மக்களுக்கு விற்பனை செய்யப்படுவது வரை இடையில் உள்ள வரி (கலால் + வாட்), டீலர் உள்ளிட்ட பிற கட்டணம் குறித்து விரிவாக கடந்த ஆண்டு ஜூலையில் நாம் கட்டுரை வெளியிட்டு இருந்தோம்.

சமீபத்தில் மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையில் கூட, பெட்ரோல், டீசல் மீது வேளாண் செஸ் வரியை சேர்த்து உள்ளதாக அறிவித்து இருந்தனர். 2021 பிப்ரவரி மாதம், இந்தியாவில் பெட்ரோல் விலை புதிய உச்சத்திற்கு சென்றுள்ளது.

2021 பிப்ரவரி 4-ம் தேதி நிலவரப்படி, ஒரு பேரல் கச்சா எண்ணெய் 59 டாலர்களாக உள்ள போது தலைநகர் டெல்லியில் பெட்ரோல் விலை ரூ86.65 மற்றும் அதிகபட்சமாக மும்பையில் 93.20 ஆக உள்ளது. டெல்லி விலையின் படி, ஒரு லிட்டருக்கு 32.98 ரூபாய் மத்திய அரசின் கலால் வரியும், 19.55 ரூபாய் மாநில அரசின் வாட் வரியும் உள்ளதாக மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் எழுத்துப்பூர்வமாக ராஜ்யசபாவில் தெரிவித்து இருக்கிறார்.

2014-ம் ஆண்டு மே மாதம் ஒரு அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய மதிப்பு 60.22 ரூபாயாகும். அன்றைய மதிப்பில், ஒரு பேரல் கச்சா எண்ணெய் இந்திய மதிப்பில் ரூ.6,383.32 ஆக இருந்துள்ளது (ஒரு பேரல் $106 X 60.22ரூ = 6,383.32). 2020 டிசம்பரில் ஒரு அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய மதிப்பு 73 ரூபாயாகும். 2020 டிசம்பர் மதிப்பில், ஒரு பேரல் கச்சா எண்ணெய் இந்திய மதிப்பில் ரூ.3,577 ஆக இருந்துள்ளது (ஒரு பேரல் $49 X 73ரூ = 3,577).

சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் குறைந்தாலும் கூட அது இந்தியாவில் விலை குறைவு மாற்றத்தையும் ஏற்படுத்துவதில்லை. மாறாக, விலை உயர்வோ அல்லது வரியை அதிகப்படுத்தி விலையை சரியாக உள்ளதாக காண்பிக்கும் முயற்சியே நடக்கிறது.  இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் மீதான அதிகப்படியான வரிகளுக்கு சாமானிய மக்கள் கடும் எதிர்ப்புகளைத் தெரிவித்து வருகின்றனர்.

Please complete the required fields.




ஆதாரம்

Back to top button
loader