‘பருப்பு விலை’ குறைத்த மோடி என பொய்யான விளம்பரம்| உண்மை என்ன?

பரவிய செய்தி
சராசரி விலை 2014 துவரம் பருப்பு 210ரூ, கடலை பருப்பு 125ரூ, பாசி பருப்பு 180ரூ, உளுத்தம் பருப்பு 178ரூ , சர்க்கரை 48ரூபாயாகவும், அதே 2021-ல் துவரம் பருப்பு 94ரூ,கடலை பருப்பு 64ரூ, பாசி பருப்பு 110ரூ, உளுத்தம் பருப்பு 115ரூ , சர்க்கரை 35ரூபாயாகவும் உள்ளது.
மதிப்பீடு
விளக்கம்
கோவை வந்த பிரதமர் நரேந்திர மோடியை வரவேற்று செய்தித்தாள் ஒன்றில் கோவை மாநகர் மாவட்ட பிரச்சாரப் பிரிவு துணைத் தலைவர் அளித்த விளம்பரத்தில், 2014-2021ம் ஆண்டில் பருப்புகளின் விலையை ஒப்பிட்டு இருக்கிறார்கள்.
இதை பலரும் கிண்டல் செய்து சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகிறார்கள். இதற்கு காரணம், காங்கிரஸ் ஆட்சியில் பருப்புகளின் விலை ரூ.200ஐ தொட்டதாகக் குறிப்பிட்டு இருக்கிறார்கள்.
உண்மை என்ன ?
காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் மற்றும் பாஜக ஆட்சியில் அத்தியாவசிய பொருட்களின் விலை ஒப்பீடு என கடந்த சில ஆண்டுகளாகவே பருப்பு விலை குறித்து தவறான தகவல்களை பரப்பி வருகிறார்கள். 2019-ம் ஆண்டிலேயே காங்கிரஸ்-பாஜக ஆட்சியில் பருப்பு விலை வேறுபாடு குறித்து பரவிய ஒப்பீட்டில் குறிப்பிட்ட விலைகள் தவறானது என நாம் கட்டுரை வெளியிட்டு இருந்தோம்.
மேலும் படிக்க : மோடி ஆட்சியில் பருப்பு விலை குறைவா ?| து.பருப்பு ரூ.180-ஐ தொட்டது தெரியுமா !
2014 ஏப்ரல் மாதத்தில், தமிழகத்தில் பாசிப் பருப்பு மட்டுமே 100-102ரூ வரை விலை உயர்ந்தது. துவரம் பருப்பு 75ரூ(முதல் ரகம்), உளுத்தம் பருப்பு 76ரூ ஆக இருந்தது, சர்க்கரை 37ரூ ஆக இருந்தது. 2021-ம் ஆண்டில் பாசி பருப்பு 108ரூ, துவரம் பருப்பு 106ரூ, உளுத்தம் பருப்பு 116ரூ, சர்க்கரை 38ரூ ஆக உள்ளது.
2015ம் ஆண்டு அக்டோபர் மாதம் துவரம் பருப்பு விலை 180ரூ வரை உயர்ந்தது. அதேபோல், மற்ற பருப்புகளின் விலையும் உயர்வை கண்டன. ஆனால், காங்கிரஸ் ஆட்சியில் துவரம் பருப்பு விலை 200ரூ கடந்து விற்பனை செய்ததாகவும், பாஜக ஆட்சியில் விலை ஏற்றமே இல்லை என்பது போல் பரப்பி வருகிறார்கள்.
அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் அந்தந்த ஆண்டுகளில் உள்ள பணவீக்க விகிதத்தைப் பொறுத்தது. 2013-2014 பருப்புகளின் விலை உயர்வை கண்டாலும் பாஜகவினர் கூறி வரும் விலையில் விற்பனையாகவில்லை. பரப்பப்படும் தகவலில் உள்ள விலையானது அப்போது இருந்த விலையை விட அதிகரித்து காண்பித்து தவறாக பரப்பி வருகிறார்கள்.
மேலும் படிக்க : பாஜக ஆளும் மாநிலங்களில் பெட்ரோல் விலை குறைவா ?
முடிவு :
நம் தேடலில், காங்கிரஸ் ஆட்சியில் 2014 ஆண்டில் இருந்த் பருப்பு, சர்க்கரை விலை என செய்தித்தாள் விளம்பரத்தில் பாஜகவினர் அளித்த தகவல் தவறானது என அறிய முடிகிறது.