சிவலிங்கத்தை அகற்றிய திமுக அரசு எனப் பரவும் 2018-ன் வீடியோ !

பரவிய செய்தி
தமிழ்நாட்டில் ஸ்டாலினும் அவரது கட்சியினரும் சனாதான தர்மத்தை அழிப்போம் என்று கூறியதை அர்த்தப்படுத்தினர். ஒரு காலத்தில் தர்மத்தை காப்பாற்ற அந்நிய படையெடுப்புகளை எதிர்த்து போரிடும் வீரத்திற்கு பெயர் பெற்ற தமிழ் இந்துக்கள் தங்களுடைய வாக்குகளை ₹500 மற்றும் மதுவிற்கு விற்றுள்ளனர்.
மதிப்பீடு
விளக்கம்
தமிழ்நாட்டில் முதலமைச்சர் ஸ்டாலினும் அவரது கட்சியினரும் சனாதான தர்மத்தை அழிப்போம் என்று கூறியதை தற்போது அர்த்தப்படுத்தியுள்ளனர் என்று கூறி சாலையின் நடுவே உள்ள சிவலிங்கத்தை காவல்துறையினர் அப்புறப்படுத்த வந்தபோது பொதுமக்கள் தடுப்பது போன்ற 1:12 நிமிடங்கள் கொண்ட வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வலதுசாரிகளால் வைரலாகப் பரப்பப்பட்டு வருகிறது.
#திமுககேடுதரும் திமுக ஒழிப்பே தமிழினத்தின் நிஜ விடியல்.. #இந்துஆலயம்காப்போம்_தேசம்காப்போம் pic.twitter.com/wgWbbuPKY7
— Sreedhar_HM (@SShivajisreeram) November 6, 2023
உண்மை என்ன?
பரவிவரும் வீடியோவின் கீபிரேம்களை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் செர்ச் மூலம் ஆய்வு செய்து பார்த்ததில், இந்த வீடியோ தற்போது எடுக்கப்பட்டதல்ல என்பதை அறிய முடிந்தது.
இது குறித்து இந்தியா டுடே ஊடகம் கடந்த 2018 செப்டம்பர் 17 அன்று செய்தி வெளியிட்டிருந்தது. அதில் பரவி வரும் இந்த வீடியோ கேரளாவைச் சேர்ந்தது என்று சமூக ஊடகங்களில் பலரும் பரப்பி வருகின்றனர். ஆனால் இந்த வீடியோ தமிழ்நாட்டைச் சேர்ந்தது என்று அதில் குறிப்பிட்டிருந்தனர்.
மேலும் வீடியோவின் 47-வது வினாடியில் போராட்டக்காரர்களை கூட்டிச் செல்ல பயன்படுத்திய வண்டியில் ‘VKT Highway Patrol (NH45C)’ என்று குறிப்பிடப்பட்டிருப்பதைக் காண முடிந்தது. VKT என்பது பொதுவாக விக்கிரவாண்டி, கும்பகோணம் மற்றும் தஞ்சாவூர் ஆகியவற்றை இணைக்கும் நெடுஞ்சாலையைக் குறிக்க பயன்படுத்தப்படுகிறது. இதன் மூலம் இது நெடுஞ்சாலைகளில் ரோந்து வரும் வேன் என்பதை அறிய முடிந்தது.
இதன் மூலம் சமூக ஊடகங்களில் 2018-ல் எடுக்கப்பட்ட பழைய வீடியோ தற்போது எடுக்கப்பட்டது என்று கூறி தவறாக பரவி வருகிறது என்பதை அறிய முடிகிறது.
மேலும் படிக்க: திமுக ஆட்சியில் கயிற்றால் கட்டப்பட்ட அரசு பேருந்து எனப் பரப்பப்படும் பழைய புகைப்படம் !
இதற்கு முன்பும் திமுக ஆட்சியில் நடந்தவை என்று கூறி பழைய வீடியோக்கள் சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வந்தன. அதனையும் ஆய்வு செய்து நம் பக்கத்தில் கட்டுரைகள் வெளியிட்டிருக்கிறோம்.
மேலும் படிக்க: திமுக ஆட்சியில் போடப்பட்ட ஆபத்தான சாலை எனப் பரப்பப்படும் 2015ல் பரவிய பழைய வீடியோ !
முடிவு:
நம் தேடலில், சிவலிங்கத்தை அகற்றிய திமுக அரசு எனப் பரவி வரும் வீடியோ தற்போது எடுக்கப்பட்டதல்ல என்பதையும், இது கடந்த 2018-ல் நெடுஞ்சாலை விரிவுபடுத்துதல் பணியின் போது எடுக்கப்பட்ட பழைய வீடியோ என்பதையும் அறிய முடிகிறது.