This article is from Dec 04, 2020

2020 டிசம்பரில் 6 நாட்கள் உலகம் இருளில் மூழ்கப் போகிறதா ?

பரவிய செய்தி

சூரியனில் பயங்கர புயல் வீசப் போவதால் டிசம்பரில், 6 நாட்கள் உலகம் இருளில் மூழ்கும் – நாசா விஞ்ஞானிகள் தகவல்.

மதிப்பீடு

விளக்கம்

அக்டோபர் 31-ம் தேதி அன்று வெளியான தமிழ் நாளிதழில், ” சூரிய மண்டலத்தில் அடிக்கடி புயல் வீசுவது உண்டு. சுட்டெரித்து சாம்பலாக்கி விடும் இந்த பயங்கர புயல்களால் மற்ற கிரகங்களில் பாதிப்பு ஏற்படும்.

பெரும்பாலான சூரிய புயல்களால் பூமியில் இருந்து ஏவப்படும் செயற்கை கோள்களுக்கு பாதிப்பு ஏற்பட்டு இருக்கிறது. அத்தகைய பயங்கர சூரிய மண்டல புயல் ஒன்று டிசம்பர் மாதம் வீச உள்ளது. டிசம்பர் 16-ம் தேதி அந்த புயல் வீசத் தொடங்கும். 22-ம் தேதி வரை 6 நாட்களுக்கு புயலின் தாக்கம் நீடிக்கும் என்று நாசா விஞ்ஞானிகள் கணித்துள்ளனர்.

கடந்த 250 ஆண்டுகள் கால வரலாற்றில் இல்லாத அளவுக்கு இந்த சூரிய மண்டலா புயல் மிகப்பெரியது என்று தெரிய வந்துள்ளது. சூரிய மண்டலத்தில் புயல் வீசும் 6 நாட்களும் வான்வெளியில் தூசிகள், துகள்கள் சுழன்றடிக்கப்பட்டு நிரம்பி விடும். தூசிகள் நிரம்பும் போது வானில் மாற்றங்கள் ஏற்படும். குறிப்பாக சூரிய ஒளிக்கதிர்கள் பூமிக்கு வர முடியாதபடி, அந்த தூசிகள், துகள்கள் மறைத்து விடும். இதன் காரணமாக டிசம்பர் 16-ம் தேதி முதல் 22-ம் தேதி வரை இந்த உலகமே இருளில் மூழ்கும் என்று நாசா விஞ்ஞானிகள்  எச்சரித்துள்ளனர் ” எனக் கூறப்பட்டுள்ளது.

இந்த செய்தித்தாளின் தலைப்பு செய்தியை வைத்து 2020-ம் ஆண்டின் அடுத்த ஆட்டம் என கிண்டல் மீம்ஸ், பதிவுகள் வைரலாகி வருகிறது. இதன் உண்மைத்தன்மை குறித்து ஃபாலோயர்கள் தரப்பிலும் கேட்கப்பட்டு வருகிறது.

உண்மை என்ன ?  

சூரியனில் பயங்கர புயல் டிசம்பரில் 6 நாட்கள் உலகம் இருளில் மூழ்கும் என கீவார்த்தைகளை கொண்டு தேடிய போது, கடந்த 2014-ம் ஆண்டில் இதே செய்தி முகநூல் மற்றும் சில இணையதளங்களில் வெளியாகி இருந்தது என அறிய முடிந்தது. ஆனால், இவ்வாறான அறிவிப்பை நாசா வெளியிடவில்லை. மாறாக, இப்படி பரவும் தகவல் முற்றிலும் வதந்தியே என நாசா அறிவித்து இருந்தது.

Archive link 

2014-ம் ஆண்டு அக்டோபர் 30-ம் தேதி நாசா எர்த் முகநூல் பக்கத்தில், ” தற்போதுவரை இதைப் பற்றி ஃபேஸ்புக் மெயில்களை பெற்று வருவதால், உங்கள் அனைவருக்கும் இங்கே பதில் அளிக்கிறோம். சூரிய புயல் காரணமாக டிசம்பர் மாதத்தில் 3(அல்லது 6) நாட்கள் இருள் சூழ்ந்து இருக்கும் என்பது குறித்து எந்தவொரு அறிக்கையையும் நாசா வெளியிடவில்லை. இந்த வதந்திகள் அனைத்தும் முற்றிலும் தவறானவை ” எனக் கூறப்பட்டுள்ளது.

சூரியனில் வீசும் புயலால் உலகம் இருளில் மூழ்கப்போவதை நாசா அறிவித்ததாக கடந்த 2014-ம் ஆண்டில் இருந்து பலமுறை வதந்திகள் பரவி வருகின்றன. 2017-ம் ஆண்டு நவம்பர் மாதம் 15 நாட்கள் பூமி இருளில் மூழ்கும் என வதந்திகள் பரவின. அப்போதும், நாசா அதை மறுத்து இருந்தது.

மேலும் படிக்க : 2020 ஜூன் 21-ம் தேதி உலகம் அழியப்போகிறதா ? மீண்டும் பரவும் சதிக் கோட்பாடு !

நாசா கூறியதாகவும், நாசாவின் பெயரை வைத்தும் தொடர்ந்து பல வதந்திகள் சமூக வலைதளங்களில், இணையத்தில் வைரலாக்கப்படுகின்றன.

மேலும் படிக்க : #நாசா_வியந்தது என வைரலாகும் மீனாட்சி அம்மன் கோவில் பதிவு|உண்மை என்ன ?

Please complete the required fields.




Back to top button
loader