கிண்டலுக்குள்ளாகும் சாதுக்கள் புகைப்படம் 2021 கும்பமேளாவில் எடுக்கப்பட்டதா ?

பரவிய செய்தி
மதிப்பீடு
விளக்கம்
இந்தியாவில் கொரோனா பெரும் தொற்றின் இரண்டாம் அலை வீசத் துவங்கி பாதிக்கப்பட்டவர்களின் மற்றும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை பன்மடங்கு உயர்ந்து கொண்டே செல்வது அச்சுறுத்தலை ஏற்படுத்தி உள்ளது.
இத்தகைய அச்சுறுத்தலுக்கு இடையே ஹரித்வாரில் நடைபெற்ற கும்பமேளாவில் கலந்து கொண்டவர்களில் பல ஆயிரக்கணக்கான பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டது இந்திய அளவில் விவாதமாகி இருக்கிறது.
இதற்கிடையில், 2021 ஹரித்வார் கும்பமேளாவில் கலந்து கொண்டவர்கள் மாஸ்க்கை கீழே அணிந்து இருப்பதாக கோமணத்துடன் நீராடும் பக்தர்கள் கூட்டத்தின் புகைப்படத்தை விமர்சித்து சமூக வலைதளங்களில் வைரல் செய்து வருகிறது.
” கும்பமேளாவில் மாஸ்க் எவ்வளவு கீழே இறங்கி உள்ளது என்பதை பார்த்து சர்வதேச ஊடகங்கள் வியந்து போயின ” என்று சியட் டயர் நிறுவனத்தின் சிஇஓ ஹர்ஷ் கோயென்கா வெளியிட்ட சர்ச்சை ட்வீட் வைரலாகி செய்தி தளங்களிலும் வெளியாகியது.
ஜீ ஹிந்துஸ்தான் தமிழ் முகநூல் பக்கத்தில் வெளியான இந்த நியூஸ் கார்டும் அதிகம் பகிரப்பட்டு வருகின்றது. இதையடுத்து, இப்புகைப்படத்தை வைத்து ட்ரோல் மீம்கள் அதிகம் வெளியிட்டு வருகிறார்கள்.
உண்மை என்ன ?
ஆனால், முகத்தில் அணிய வேண்டிய மாஸ்க்கை கீழே அணிந்து இருப்பதாக ட்ரோல் செய்யப்படும் புகைப்படம் 2021 கும்பமேளாவில் எடுக்கப்பட்ட புகைப்படமே இல்லை.
அப்புகைப்படத்தை ரிவர்ஸ் இமேஜ் சேர்ச் செய்கையில், jaytindall.asia எனும் இணையதளத்தில் 2013-ம் ஆண்டு உத்தரப் பிரதேசத்தின் அலகாபாத்(தற்போதைய பிரயாக்ராஜ்) நகரில் நடைபெற்ற கும்பமேளா விழாவின் போது எடுக்கப்பட்ட புகைப்படத் தொகுப்பில் இப்புகைப்படமும் வெளியாகி இருக்கிறது.
மேலும் படிக்க : அயோத்தியில் பூமி பூஜைக்காக கூடிய சாமியார்கள் கூட்டம் என வதந்தி !
இதே கூட்டத்தின் மற்றொரு புகைப்படத்தை, கொரோனா ஊரடங்கிற்கு இடையே அயோத்தியில் ராமர் கோவில் பூமி பூஜைக்கு கூடிய கூட்டமென தவறாக பரப்பினர்.
மேலும் படிக்க : 2021 கும்பமேளாவிற்கு ஹரித்வாரில் கூடிய பக்தர்களின் கூட்டமா ?

முடிவு :
நம் தேடலில், கொரோனா தொற்று பரவலுக்கு இடையே ஹரித்வாரில் கூடிய கும்பமேளா கூட்டத்தில் மாஸ்க்கை கீழே அணிந்து உள்ளதாக ட்ரோல் மற்றும் வைரல் செய்யப்படும் புகைப்படம் 2013ம் ஆண்டு கும்பமேளாவின் போது எடுக்கப்பட்டது என அறிய முடிகிறது.