2021-ல் தேர்ச்சி பெற்ற பட்டதாரிகளை வேலைக்கு எடுக்க எச்.டி.எப்.சி மறுத்ததா ?

பரவிய செய்தி

மதிப்பீடு
விளக்கம்
2020-ல் இருந்து கொரோனா பாதிப்பு காரணமாக பள்ளிகள், கல்லூரிகள் சரியாக இயங்காமல், இயல்பான வகுப்புகள், தேர்வுகள் இல்லாமல் ஆண்டுகள் முடிந்து செல்கிறது. இதனால் படிப்பை முடித்து விட்டு வெளியே வரும் இளைஞர்களை கொரோனா பேட்ச் என கிண்டல் செய்யும் மீம்ஸ் சமூக வலைதளங்களில் வைரலாகின. அவர்களுக்கு வேலைவாய்ப்பு குறித்தும் கேள்விகள் எழுப்பப்பட்டன.
இந்நிலையில், எச்.டி.எப்.சி வங்கியின் மதுரை கிளையின் பணியிடத்திற்கு ஆகஸ்ட் 3-ம் தேதி நடைபெறும் நேர்காணலுக்காக நாளிதழ் ஒன்றில் வெளியிட்ட விளம்பரத்தில் 2021-ம் ஆண்டில் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கத் தகுதியில்லை என குறிப்பிட்டது சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. இதை சமூக வலைதளங்களில் பகிர்ந்தும் வருகின்றனர்.
Hi Gayathri, this is a typo and we regret the error. Graduates can apply irrespective of the year of passing as long as they meet the age criteria. We have already issued the correct advertisement shared here. -Zubin
— HDFC Bank Cares (@HDFCBank_Cares) August 3, 2021
ஆகஸ்ட் 2-ம் தேதி காயத்திரி ஸ்ரீகாந்த் என்பவர் இந்த விளம்பரத்தை தன் ட்விட்டரில் பதிவிட்டு எச்.டி.எப்.சி-ஐ டக் செய்து இருந்தார். அதற்கு எச்.டி.எப்.சி பேங்க் கேர், ” இது ஒரு எழுத்துப்பிழை மற்றும் பிழைக்கு வருந்துகிறோம். பட்டதாரிகள் வயது வரம்பை பூர்த்தி செய்யும் வரை தேர்ச்சி பெற்ற ஆண்டைப் பொருட்படுத்தாமல் விண்ணப்பிக்கலாம். சரியான விளம்பரத்தை நாங்கள் ஏற்கனவே வெளியிட்டுள்ளோம் ” என பதில் அளிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக வங்கியின் மேலாளர் கூறுகையில், ” இது டைப் செய்த போது ஏற்பட்ட பிழை. முதல் விளம்பரத்தில் கொடுக்கப்பட்ட “not ” எனும் வார்த்தைக்கு பதிலாக ” also” என மாற்றப்பட்டது. 2021ல் தேர்ச்சி பெற்றவர்களும் தகுதி உடையவர்கள் என மாற்றப்பட்ட புதிய விளம்பரம் செவ்வாய் அன்றே வெளியிடப்பட்டது ” என டைம்ஸ் ஆப் இந்தியா செய்திக்கு கூறியதாக வெளியாகி இருக்கிறது.
முடிவு :
நம் தேடலில், எச்.டி.எப்.சியின் பணியிடம் தொடர்பாக கொடுக்கப்பட்ட விளம்பரத்தில் 2021-ல் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியில்லை எனக் குறிப்பிட்டதாக வைரலாகும் நாளிதழ் விளம்பரம் உண்மையானதே. எடிட் செய்யப்பட்டது அல்ல.
ஆனால், அது எழுத்து பிழையால் நிகழ்ந்தது என வங்கியின் ட்விட்டர் பக்கம் மூலம் பதில் அளிக்கப்பட்டு இருக்கிறது. 2021-ல் தேர்ச்சி பெற்றவர்களும் வேலைக்கு விண்ணப்பிக்கலாம் என்றும், மாற்றப்பட்ட புதிய விளம்பரம் வெளியிடப்பட்டதாகவும் வங்கி மேலாளர் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது என அறிய முடிகிறது.
YouTurn உண்மையை சொல்லும் பணி முக்கியம் என நினைக்கின்றீர்களா? நன்கொடை அளித்து நீங்களே மக்கள் பத்திரிகையாக இயங்க வழி செய்யுங்கள்.