உபி-யில் பாஜக வேட்பாளரை மக்கள் விரட்டி அடிக்கும் வீடியோவா ?

பரவிய செய்தி
உ.பி பாஜக வேட்பாளரை காவல் அதிகாரிகள் பத்திரமாக அழைத்து வரும் காட்சி வேட்பாளர்களை மக்கள் விரட்டி விரட்டி அடிக்கிறார்கள் பா.ஜ.க.வுக்கு கிடைத்திருக்கும் வெகுமதி 2022 தேர்தல் நிலைமை.
மதிப்பீடு
விளக்கம்
5 மாநிலங்களுக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டதால் அம்மாநிலங்களில் அரசியல் பரபரப்பு உருவாகி இருக்கிறது. இந்நிலையில், உத்தரப் பிரதேசம் மாநிலத்தில் பாஜக வேட்பாளரை மக்கள் விரட்டி அடிக்கும் போது காவல் அதிகாரிகள் அவரை பத்திரமாக அழைத்து செல்லும் காட்சி என 40 நொடிகள் கொண்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
உ.பி 🤣பாஜக வேட்பாளரை காவல் அதிகாரிகள் பத்திரமாக அழைத்து வரும் காட்சி
வேட்பாளர்களை மக்கள் விரட்டி விரட்டி அடிக்கிறார்கள்
பா.ஜ.க.வுக்கு கிடைத்திருக்கும் வெகுமதி 2022 தேர்தல் நிலைமை😂😂😂
pic.twitter.com/nP15CaqK6I— ஜெயசந்திரன் திமுக 🖤♥️ (@jaya2016maha) January 24, 2022
உண்மை என்ன ?
உத்தரப் பிரதேசத்தில் பாஜகவினரை மக்கள் விரட்டி அடித்த சம்பவம் குறித்து தேடுகையில், 2022 ஜனவரி 20-ம் தேதி உத்தரப் பிரதேசத்தின் கடவுளி தொகுதி பாஜக எம்எல்ஏ விக்ரம் சைனி என்பவர் முன்னாவர்பூர் கிராமத்தில் வாக்கு சேகரிக்க சென்ற போது கிராம மக்களால் விரட்டப்பட்டதாகச் செய்திகளில் வீடியோ உடன் வெளியாகி இருக்கிறது.
ஆனால், பாஜக எம்எல்ஏ விரட்டப்பட்ட வீடியோவும், வைரல் செய்யப்படும் வீடியோவும் வெவ்வேறாக உள்ளது. ஆகையால், பாஜக தலைவர் மக்களால் விரட்டப்பட்ட சம்பவம் குறித்து தேடுகையில், வைரல் செய்யப்படும் வீடியோ 2021 பஞ்சாப் மாநிலத்தில் எடுக்கப்பட்டது என அறிய முடிந்தது.
Punjab BJP leader Bhupesh Aggarwal and other local leaders of the party were allegedly attacked by farmers earlier today in Patiala district’s Rajpura. The leader alleges that the attack was carried out at the behest of the state Police. pic.twitter.com/niJVdFRXtL
— ANI (@ANI) July 11, 2021
” பஞ்சாப் மாநிலத்தின் பாட்டியாலா மாவட்டத்தில் உள்ள ராஜ்புராவில் பாஜக தலைவர் பூபேஷ் அகர்வால் மற்றும் அக்கட்சியின் மற்ற தலைவர்கள் விவசாயிகளால் தாக்கப்பட்டதாக கூறப்படுகிறது ” என 2021 ஜூலை 11-ம் தேதி ஏஎன்ஐ செய்தி முகமை வைரல் வீடியோவின் புகைப்படங்களுடன் பதிவிட்டு இருக்கிறது.
பஞ்சாப் மாநிலத்தில் பாஜக தலைவர் பூபேஷ் அகர்வால் போராட்டக்காரர்களால் துரத்தப்படும் 1 நிமிடம் கொண்ட மற்றொரு வீடியோ ஒன்று 2021 ஜூலை 11-ம் தேதி யூடியூப் சேனல் ஒன்றில் பதிவாகி இருக்கிறது.
முடிவு :
நம் தேடலில், உ.பி பாஜக வேட்பாளரை காவல் அதிகாரிகள் பத்திரமாக அழைத்து வரும் காட்சி, வேட்பாளர்களை மக்கள் விரட்டி விரட்டி அடிக்கிறார்கள் எனப் பரவும் வீடியோ தவறானது. அந்த வீடியோ 2021 பஞ்சாப் மாநிலத்தில் பாஜக தலைவர் பூபேஷ் அகர்வாலை போராட்டக்காரர்கள் விரட்டி அடிக்கும் காட்சி என அறிய முடிகிறது.