‘குடியுரிமை தக்கவைப்பு வரி’ அமல்படுத்தப்படும் என நிர்மலா சீதாராமன் அறிவித்ததாகப் பரவும் போலி செய்தி !

பரவிய செய்தி
வருடத்தில் குறைந்தது ஒருமுறை வெளிநாட்டு பயணம் செய்திருந்தால் “குடியுரிமை தக்கவைப்பு வரி” 2024ம் ஆண்டு முதல் அமல் – நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்
மதிப்பீடு
விளக்கம்
வருடத்தில் குறைந்தது ஒருமுறை வெளிநாட்டு பயணம் செய்திருந்தால் “குடியுரிமை தக்கவைப்பு வரி” 2024ம் ஆண்டு முதல் அமல் என்று ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியதாக பொதிகை செய்தியின் நியூஸ் கார்டு ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.
குடியுரிமை தக்கவைப்பு வரி 2024ம் ஆண்டு முதல் அமல்…..
மார்க் மை வேர்டஸ்
2024 நாடாளுமன்ற தேர்தலில் பெரும்பான்மை பெற்று காங்கிரஸ் ஆட்சி அமைக்கும் …….
கர்நாடக வெற்றிக்கு பிறகு இது ஆல்வா மாதிரி கிடச்சி இருக்கு….. @DKShivakumar @arivalayam@INCIndia @INCTamilNadu pic.twitter.com/LBAkZKJIRT
— #தமிழ்நாடு D Stock (@ThalapathyDh) May 19, 2023
என்ன இது ? எனக்கு புரியல. இந்திய குடியுரிமை தக்கவைக்க வரியா ? உங்களுக்கு புரியுதா ? pic.twitter.com/sfx9tOZ8vB
— ☕ டீ கடை அரசியல் (@ArasiyalKadai) May 19, 2023
உண்மை என்ன ?
பரவி வரும் நியூஸ் கார்டு குறித்து, பொதிகை செய்தியின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கமான DD Podhigai News மற்றும் முகநூல் பக்கமான Podhigai News போன்ற பக்கங்களில் தேடியதில், குடியுரிமை தக்கவைப்பு வரி 2024-ஆம் ஆண்டிலிருந்து அமல்படுத்தப்படுவது குறித்து எந்த செய்தியும் அவர்கள் பக்கத்தில் பதிவிடப்படவில்லை என்பதை அறிய முடிந்தது.
மேலும் அவர்கள் இறுதியாக கடந்த மே 13 அன்று தான் நியூஸ் கார்டு பதிவிட்டு உள்ளனர் என்பதையும் (மேலே உள்ள படத்தில் இருப்பது), பரவிவரும் பதிவுகளில் உள்ளது போன்று மே 18 அன்று அவர்கள் எந்தவொரு நியூஸ்கார்டும் பதிவிடவில்லை என்பதையும் உறுதி செய்ய முடிந்தது.
இது குறித்து ஒன்றிய நிதியமைச்சகத்திடம் இருந்து ஏதாவது செய்திகள் வெளியிடப்பட்டுள்ளதா என ஆய்வு செய்து பார்த்ததில், Press Information Bureau (PIB) பக்கத்திலும், Ministry of Finance பக்கத்திலும், குடியுரிமை தக்கவைப்பு வரி குறித்து எந்த செய்திகளும் வெளியிடப்படவில்லை என்பதை கீழே உள்ள படத்தின் மூலம் அறிய முடிந்தது.
சமீபத்தில், நிதியமைச்சகம் சர்வதேச கிரேடிட் கார்டு பயன்பாட்டில் 20% TCS-ஐ (Tax Collection at Source) அதிகரித்துள்ளது. இது மக்களிடையே பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது என்பது குறித்து இந்தியா டுடே தன்னுடைய பக்கத்தில் மே 18 அன்று செய்தி வெளியிட்டுள்ளது.
அதில் “இந்த அறிவிப்பு, இந்தியாவிற்கு வெளியே உள்ள கிரெடிட் கார்டுகள் மூலம் மேற்கொள்ளப்படும் பரிவர்த்தனைகளை LRSன் வரம்பிற்குள் கொண்டு வருகிறது, இது ஜூலை 1 முதல் 2022-23 ஆம் ஆண்டிற்கான பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டபடி செயல்படுத்தப்படும்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
இது தவிர நிதியமைச்சகத்திடமிருந்து வேறு செய்திகள் சமீபமாக வரவில்லை என்பதையும், பொதிகை செய்தியின் பக்கங்களில் சமூக வலைதளங்களில் பரவி வருவது போன்ற நியூஸ்கார்டு எதுவும் வெளியிடப்படவில்லை என்பதையும் உறுதிபடுத்த முடிகிறது.
முடிவு:
நம் தேடலில், குடியுரிமை தக்கவைப்பு வரி 2024ம் ஆண்டு முதல் அமல்படுத்தப்படும் என்று ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியதாக சமூகவலைதளங்களில் பரவி வரும் பொதிகை செய்தியின் நியூஸ்கார்டு போலியானது என்பதை அறிய முடிகிறது.