பாகிஸ்தானைச் சேர்ந்த 210 வயதான உலகின் அதிக வயதுடைய பெண்ணா ?

பரவிய செய்தி
210 பிறந்தநாளை காணும் பாட்டி. பெண்ணினத்திற்கே சாதனையை படைத்த இந்த அம்மாவுக்கு ஒரு பிறந்தநாள் வாழ்த்து சொல்லலாமே
மதிப்பீடு
விளக்கம்
பாகிஸ்தானைச் சேர்ந்த 210 வயதான பாட்டிக்கு அந்நாட்டு மக்கள் பிறந்தநாள் கொண்டாடியதாகக் கூறி மிக வயதான தோற்றத்தில் இருக்கும் ஒரு பாட்டியின் புகைப்படங்கள் கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் வைரல் செய்யப்பட்டு வருகிறது.
உண்மை என்ன ?
வைரல் செய்யப்படும் பாகிஸ்தானின் 210 வயதான பெண் குறித்து தேடுகையில், 2021 செப்டம்பரில் அவரின் வீடியோ யூடியூப் சேனல் ஒன்றில் வெளியாகி இருக்கிறது. பாகிஸ்தானைச் சேர்ந்த இவருக்கு 300 வயது என தலைப்பிட்டு இருக்கிறார்கள்.
வீடியோவில் இருக்கும் பாட்டி வயது முதிர்வால் தோல் சுருங்கிய தோற்றத்தில் இருக்கிறார். அதற்காக இப்படி 200, 300 வயது எனக் கூறுவதெல்லாம் நம்பக்கூடியதாக இல்லை. மேலும், வயதான பாட்டியின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் மட்டுமே வைரலாகி இருக்கிறது. இவர் பற்றி செய்திகளோ, அதிகாரப்பூர்வ தகவல்களோ ஏதும் இல்லை.
உலகில் வாழும் அதிக வயதுடைய பெண் என்கிற கின்னஸ் சாதனையை ஜப்பானைச் சேர்ந்த கேன் டனாகா தக்க வைத்துள்ளார். இவருக்கு 118 வயது ஆகிறது.
முடிவு :
நம் தேடலில், 210 வயதான பெண் பாகிஸ்தான் நாட்டில் வாழ்வதாகவும், அவருக்கு 210வது பிறந்தநாள் கொண்டாடப்பட்டதாக பரவும் தகவல் தவறானது. ஜப்பானைச் சேர்ந்த 118 வயதான கேன் டனாகா என்பவரே உலகில் வாழும் அதிக வயதுடைய பெண் என்கிற கின்னஸ் சாதனையை படித்து இருக்கிறார். வயதான பாட்டியை வைத்து வைரல் செய்யப்படும் தகவலில் நம்பகத்தன்மை மற்றும் அதிகாரப்பூர்வ ஆதாரங்கள் இல்லை என அறிய முடிகிறது.