2500 ஆண்டுகள் பழமையானக் கோட்டை கண்டுபிடிப்பு.

பரவிய செய்தி
திண்டுக்கல் அருகே சங்க காலக் கோட்டை ஒன்று கண்டுபிடிப்பு. அவை 2500 ஆண்டுகள் பழமையானவை என்று கூறியுள்ளனர்.
மதிப்பீடு
சுருக்கம்
சுமார் 2500 ஆண்டுகள் பழமையான சங்க காலக் கோட்டையை திண்டுக்கல் பாடியூரில் கண்டுபிடித்துள்ளனர். இங்கு அகழ்வாராய்ச்சிகளை மேற்கொண்டால் சங்க கால மக்கள் வாழ்ந்ததற்கான பல ஆதாரங்கள் கிடைக்க வாய்ப்புள்ளதாகத் தொல்லியல் ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.
விளக்கம்
திண்டுக்கல் அருகே உள்ள பாடியூரில், அப்பகுதியைச் சேர்ந்த பழனியாண்டவர் கலைக் கல்லூரியின் பண்பாட்டுத்துறை பேராசிரியர்கள் மற்றும் தொல்லியல் ஆய்வாளர்கள் இணைந்து ஆய்வை மேற்கொண்டனர். இந்த ஆய்வில் 30 அடி உயரமுள்ள பழமையான சங்க காலக் கோட்டையைக் கண்டுபிடித்துள்ளனர். அக்கோட்டையானது அதிகளவில் மண் மேடுகளால் மூடிய நிலையில் இருந்துள்ளது. இம்மண்மேடு அமைத்துள்ளப் பகுதியை மக்கள் கோட்டைமேடு என்று அழைகின்றனர்.
இந்த அகழ்வாராச்சி குறித்து ஆய்வாளர்கள் கூறுகையில், பாடியூரில் அமைந்துள்ள கோட்டைமேடு பகுதியில் 3 கட்டங்களாகப் பரப்பாய்வுககளை மேற்கொண்டோம். இதில் 2500 ஆண்டுகள் பழமையானக் கோட்டையைக் கண்டுபிடித்துள்ளோம். இக்கோட்டை சங்க காலத்தைச் சேர்ந்தவை ஆகும். 3 ஏக்கர் பரப்பளவில் பாறைக்கற்களால் பல வேலைபாடுகளுடன் இக்கோட்டையானது எழுப்பப்பட்டுள்ளது.
கோட்டைமேடு பகுதியில் மேற்கொண்ட முதல் கட்ட ஆய்வில், சங்க கால மக்கள் பயன்படுத்திய மண்பாண்டங்கள், மண்ணால் உருவாக்கப்பட்ட சமையல் உபகரணங்கள், சுடுமண் பொம்மைகள், அகல் விளக்குகள் உள்ளிட்ட பல பொருட்கள் கண்டறியப்பட்டுள்ளது. மேலும், முதுமக்களின் தாழிகள், கருப்பு சிகப்பு பானை ஓடுகள், எலும்புகள் போன்றவை கிடைத்துள்ளன. படைவீரர்கள் முகாமிட்ட இப்பகுதிகளில் பண்டையக் காலத்தில் போர்கள் நடைபெற்று இருக்கலாம் என்று அறியப்படுகிறது.
மத்திய, மாநில அரசுகள் இணைந்து இப்பகுதியில் அகழ்வாராச்சிகளை மேற்கொண்டால் பல வியக்கதக்க வரலாற்று தகவல்கள் கிடைக்க வாய்ப்புள்ளது என்று ஆய்வார்கள் கூறியுள்ளனர்.
இராமநாதபுரத்தின் போகலூரில் 5000 ஆண்டுகள் பழமையான கற்கோடாரிகள் போன்ற பல பொருட்கள் கிடைத்து வியப்பை எற்படுத்தியதையடுத்து திண்டுக்கல் அருகில் பழமையான கோட்டை கண்டுபிடித்திருப்பது ஆச்சரியத்திற்கு மேல் ஆச்சரியமாக உள்ளது. முழுமையான ஆய்வுகள் மேற்கொள்ளுவதன் மூலம் சங்க கால மக்கள் வாழ்ந்ததற்கான பல ஆதாரங்கள் கிடைக்கும். ஆனால், கீழடியில் மேற்கொண்ட ஆய்வுகளே தீவிரமாக நடைபெறாத நிலையில் இப்பகுதிகளில் அரசு ஆய்வுகள் மேற்கொள்ளுமா என்பது கேள்விக்குறியே.