This article is from Jan 20, 2018

2700 ஆண்டுகள் பழமையான உலகின் முதல் கண்ணாடி பாட்டிலா ?

பரவிய செய்தி

கி.மு 700-ல் உருவாக்கப்பட்ட உலகின் முதல் கண்ணாடி பாட்டில் இன்னும் அழியவில்லை. பாட்டில் உடையாமல் முழுமையாக அழிய 10 லட்சம் வருடங்கள் ஆகும்.

மதிப்பீடு

சுருக்கம்

படத்தில் காண்பிக்கப்பட்ட பாட்டில் உலகின் முதல் பாட்டில் இல்லை. இவை கி.பி 325 ஆம் ஆண்டை சேர்ந்த பழமையான ஒயின் பாட்டில் ஆகும். இது தற்போது ஜெர்மனியின் palatinate நகரில் உள்ள மியூசியத்தில் காட்சிக்காக வைக்கப்பட்டுள்ளது.

விளக்கம்

மனித கண்டுபிடிப்புகளுள் மிகவும் வியக்கத்தக்க மற்றும் சுவாரசியமான கண்டுபிடிப்பு கண்ணாடி ஆகும். முதன் முதலில் கண்ணாடிகள் கி.மு 7000 ஆண்டுகளிலேயே கண்டுபிடிக்கப்பட்டது. குறிப்பாக, இயற்கை பொருட்கள், ராக் கிறிஸ்டல்ஸ் மற்றும் ஓனிக்ஸ், இரத்தின கற்களை கொண்டு கண்ணாடிகளை உருவாக்கியுள்ளனர்.

எகிப்து நாட்டில் கி.மு1500-ம் கால கட்டத்திலேயே செயற்கையாக கண்ணாடி பாட்டில்கள் தயாரித்துள்ளதாக வரலாற்று ஆசிரியர்கள் கூறியுள்ளனர். குறிப்பாக, எகிப்து நாட்டின் மன்னர் மூன்றாம் பாரோ தாவ்ட்மோஸ்(கி.மு1504-1450) உருவம் பொறித்த கண்ணாடி பாட்டில்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. எனவே, கண்ணாடி பாட்டில்களை கி.மு1500க்கு முன்பாகவே தயாரிக்க தொடங்கி இருக்கலாம் என்பதை அறிய முடிகிறது.

1867 ஜெர்மனியின் speyer நகரில் நடைபெற்ற அகழ்வாராய்ச்சியில் கல்லறைக் குழிகளில் இருந்த கொள்கலனில் மிகவும் பழமையான ஒயின் பாட்டில்கள் கிடைத்தன. ­­இவை கி.பி 325 ஆம் ஆண்டை சேர்ந்தவை ஆகும். 4-ம் நூற்றாண்டை சேர்ந்த இந்த பாட்டில்களில் இன்னும் பழமையான ஒயின் பானம் இருப்பதாகக் கூறுகின்றனர்.  இவை உருளை வடிவில் பச்சை மஞ்சள் கலந்த நிறத்தில் உள்ளது. மேலும், இதில் டால்பின் வடிவில் இருபுற கைபிடிகள் உள்ளன. இந்த பாட்டிலில் மூன்றில் இரு பங்கு ஒயின் உள்ளது. ஆகையால், இது ஒயின் நாகரீகத்தில் ஜெர்மனியின் மிகப்பெரிய பொக்கிஷமாக கருதுகின்றனர். 

இத்தகைய சிறப்புவாய்ந்த மற்றும் பழமையான ஒயின் பாட்டில் ஜெர்மனியின் palatinate நகரில் உள்ள (Historical Museum of The Platinate)   மியூசியத்தில் காட்சிக்காக வைக்கப்பட்டுள்ளது.  எனினும், Georgia நாட்டில் கிடைத்த 8000 ஆண்டுகள் பழமையான மட்பாண்ட குடுவையில் ஒயின் இருந்ததற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

பல ஆயிரமாண்டுகளுக்கு முன்பே செயற்கையான முறையில் கண்ணடி பாட்டில்கள் உருவாக்கப்பட்டாலும், 1903 ஆம் ஆண்டில் அமெரிக்காவை சேர்ந்த மைக்கேல் ஜோசப் ஓவன் என்பர் கண்ணாடி தயாரிக்கும் இயந்திரத்தை உருவக்கினார். அதன் மூலம் நிமிடத்திற்கு 250 கண்ணாடி பாட்டில்களை தயாரிக்கபட்டது. இதன் பின்னரே கண்ணாடி பாட்டில்களின் உபயோகம் அதிகரிக்க தொடங்கியது.

படத்தில் இருக்கும் பாட்டில் கி.பி 4-ம் நூற்றாண்டில் ஜெர்மனியில் கண்டெடுக்கப்பட்ட ஒயின் பாட்டில் என்பதனால், கி.மு 7-ம் நூற்றாண்டில் தயாரிக்கப்பட்ட உலகின் முதல் கண்ணாடி பாட்டில் என்று கூறியது தவறானது என்பதை தெளிவாக அறிய முடிகிறது.

Please complete the required fields.




ஆதாரம்

Back to top button
loader