30 நாட்களில் பணத்தை திருப்பி அளிக்குமா அமேசான் நிறுவனம் ?
பரவிய செய்தி
அமேசான் ஆன்லைன் வர்த்தகத்தில் ஏதேனும் ஒரு பொருளை வாங்கிய பின் அப்பொருளின் விலையானது 30 நாட்களுக்குள் குறைந்திருந்தால் அதை பற்றி அந்நிறுவனத்திற்கு மெயில் அனுப்பவும். அதன் பிறகு பொருளின் விலை எவ்வளவு குறைந்ததோ அந்த பணம் வாடிக்கையாளருக்கு திருப்பி வழங்கப்படும்.
மதிப்பீடு
சுருக்கம்
அமேசானில் பொருள்கள் வாங்கியப் பின் அப்பொருளின் விலையானது குறைந்தால் பணம் திருப்பி வழங்கப்படும் சலுகைகள் எதுவும் இல்லையென்று அந்நிறுவனம் கூறியுள்ளது.
விளக்கம்
அமெரிக்காவை தலைமையிடமாகக் கொண்ட அமேசான் நிறுவனம் உலகின் பல நாடுகளில் தனது ஆன்லைன் வணிகத்தை விரிவுபடுத்தி வருகிறது. கடந்த சில ஆண்டுகளாக இந்தியாவின் ஆன்லைன் வர்த்தகத்தில் அமேசான் நிறுவனம் தன்னை அதிகளவில் ஈடுபடுத்த அதிக முதலீடுகளை செய்து வருகிறது. இந்தியாவில் flipkart, snapdeal போன்ற ஆன்லைன் வணிக நிறுவனங்களுக்கு மிகப்பெரிய சவாலாக அமேசான் நிறுவனம் திகழ்கிறது.
எனினும், அமேசான் ஆன்லைன் வர்த்தகம் பற்றி சில தவறானச் செய்திகள் பரவி வருகிறது. அதாவது, அமேசான் ஆன்லைன் வணிகத்தில் ஒரு பொருளை வாங்கியப் பின் 30 நாட்களுக்குள் அப்பொருளின் விலையானது குறைந்தால், பொருளின் விலை குறைவு பற்றி நிறுவனத்திற்கு மெயில் அனுப்ப வேண்டும். அவ்வாறு செய்தால் பொருளின் விலை எவ்வளவு குறைந்ததோ அந்த பணம் வாடிக்கையாளர்களுக்கு திருப்பி வழங்கப்படும் என்ற செய்தி வலைதளங்களில் அதிகமாக பேசப்படுகிறது.
” இது தொடர்பாக அமேசான் ஆன்லைன் வணிகத்தின் வாடிக்கையாளர்கள் சேவை மையத்தை தொடர்புக் கொண்ட போது, இது போன்ற சலுகைகள் எதுவும் வழங்கப்படவில்லை என்றும், தவறான செய்திகள் பரவி வருகின்றன என்றும் கூறியுள்ளனர். மேலும், நியாயமான தவறுகள் இருந்தால் மட்டுமே பணமானது திருப்பி வழங்கப்படும் முறை உள்ளது என்று அமேசான் நிறுவனம் அனுப்பியுள்ள மெயிலில் கூறப்பட்டுள்ளது “.
இதன் மூலம் ஆன்லைன் வர்த்தகங்களில் பொருள்களின் விலை குறைந்தால் பணத்தை திரும்பி வழங்கும் முறை இல்லையென்று தெளிவாக தெரிகிறது. மேலும் இந்தியாவில் மட்டுமே இது போன்ற எந்தவொரு சலுகைகளும் இல்லை. ஆனால், அமெரிக்கா போன்ற நாடுகளில் பணத்தை திரும்பி வழங்கும் சலுகைகள் இருப்பதாக கூறுகிறார்கள். இருப்பினும், இந்தியாவின் ஆன்லைன் வர்த்தகத்தில் அமேசான் அதிகளவில் முதலீடுகள் செய்ய தொடங்கியுள்ளது.