This article is from Feb 22, 2020

உத்தரப் பிரதேசத்தில் 3,500 டன் தங்கம் கிடைக்கப் போகிறதா ?| உண்மை என்ன ?

பரவிய செய்தி

உத்தரப் பிரதேசத்தின் சோன்பத்ரா பகுதியில் 3500 டன் தங்கம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது தற்போது இந்தியாவிடம் இருப்பில் உள்ள தங்கத்தை விட ஐந்து மடங்கு அதிகம்.

மதிப்பீடு

விளக்கம்

உத்தரப் பிரதேச மாநிலத்தின் சோன்பத்ரா மாவட்டத்தில் 3,500 டன் தங்கம் கொண்ட சுரங்கத்தை இந்திய புவியியல் ஆய்வு நிறுவனம் கண்டறிந்துள்ளதாக வெளியான செய்தி இந்திய அளவில் மிகப்பெரிய எதிர்பார்ப்பையும், ஆச்சரியத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது.

இந்திய புவியியல் ஆய்வு நிறுவனத்தால் சுமார் 20 ஆண்டுகளுக்கு மேலாக மேற்கொண்டு வந்த சோதனையில் தங்கம் மற்றும் இரும்பு தாதுக்கள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. சோன்பத்ரா மாவட்டத்தின் சோன்பஹாடி மற்றும் ஹார்டி ஆகிய இரு பகுதிகளில் உள்ள சுரங்கத்தில் 3000 மற்றும் 600 டன் தங்கம் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

இவற்றின் மதிப்பு 12 லட்சம் கோடி எனக் கூறப்படுகிறது. இதற்காக இரண்டு பகுதிகளையும் இ-டெண்டரிங் மூலம் ஏலம் விடும் பணி விரைவில் தொடங்கும். இ-டெண்டரிங் மூலம் அப்பகுதிகள் ஏலம் விட 7 பேர் கொண்ட குழுவை மாநில அரசு நியமித்து உள்ளதாகவும் செய்திகள் வெளியாகின. மாவட்ட சுரங்கத்துறை அதிகாரிகள் அளித்த தகவலின் அடிப்படையில் செய்திகள் பரவியது.

ஆனால், மாவட்ட சுரங்கத்துறை அதிகாரிகள் கூறியது போன்று உத்தரப் பிரதேச மாநிலத்தின் சோன்பத்ரா மாவட்டத்தில் சுமார் 3000 டன் மதிப்பிடப்பட்ட தங்க இருப்பு கண்டுபிடிக்கப்படவில்லை என்று இந்திய புவியியல் ஆய்வு மையம் (ஜிஎஸ்ஐ) பிப்ரவரி 22-ம் தேதி தெரிவித்து உள்ளது.

பிப்ரவரி 22-ம் தேதி ஜி.எஸ்.ஐ வெளியிட்ட அறிக்கையில், ” இதுபோன்ற தரவுகளை ஜி.எஸ்.ஐயைச் சேர்ந்த எவரும் வழங்கவில்லை. சோன்பத்ரா மாவட்டத்தில் இருக்கும் பரந்த அளவிலான தங்க இருப்பை ஜி.எஸ்.ஐ மதிப்பிடவில்லை. சோன் பஹாடி பகுதியில் சப்-பிளாக்-எச் 170 மீட்டர் நீளம் கொண்ட பகுதியில் 52,806.25 டன் தாதுவில் இருந்து ஒரு டன்னிற்கு 3.03 கிராம் தங்கம் கிடைக்கும் என ஜி.எஸ்.ஐ மதிப்பிட்டுள்ளது. கனிமமயமாக்கப்பட்ட மண்டத்தில் ஒரு டன்னிற்கு சராசரியாக 3.03 கிராம் தங்கம் கிடைக்கும் மற்றும் 52,806.25 டன் மொத்த தாதுவில் இருந்து எடுக்கக்கூடிய மொத்த தங்கம் சுமார் 160 கிலோ. ஊடகங்களில் குறிப்பிட்டுள்ளபடி 3,350 டன் அல்ல ” கூறப்பட்டுள்ளது.

ஊடகங்களில் 3500 டன் மதிப்பிற்கு தங்கம் கிடைக்கும் என வெளியான தகவலை ஜி.எஸ்.ஐ இயக்குனர் ஸ்ரீதர் கொல்கத்தாவில் பிடிஐ-க்கு அளித்த தகவலில் மறுத்ததோடு ஜிஎஸ்ஐ  தரப்பில் அதிகாரப்பூர்வ அறிக்கையும் வெளியாகி இருக்கிறது. மாவட்ட சுரங்க அதிகாரிகள் அளித்த தகவலின் அடிப்படையில் 3,500 டன் தங்கம் அள்ள அள்ள கிடைக்கப் போவதாக வெளியான செய்தியே இந்திய அளவில் மக்களை ஆச்சரியத்திற்கு உள்ளாக்கியது.

உத்தரப் பிரதேச மாநில சோன்பத்ரா மாவட்ட தங்க சுரங்கம் குறித்து அதிகாரப்பூர்வ தகவலோ அல்லது மதிப்பீடோ வெளியிடவில்லை என ஜி.எஸ்.ஐ மறுத்து உள்ளது.

Please complete the required fields.




Back to top button
loader