5000 ஆண்டுகள் பழமையான கற்கோடாரிகள் கண்டுபிடிப்பு.

பரவிய செய்தி
இராமநாதபுரம் அருகே போகலூரில் 5000 வருடங்கள் பழமையான கற்கோடாரிகளும், சங்க காலத்தைச் சேர்ந்த ‘த‘ என்னும் தமிழ் பிராமி எழுத்துக்கள் மற்றும் திரிசூலக் குறியீடுகளை கொண்ட பானை ஓடுகள் போன்ற பொருள்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மதிப்பீடு
சுருக்கம்
புதிய கற்காலக் கருவிகள் சமயநல்லூர், கீழடி உள்ளிட்ட ஒரு சில இடங்களில் மட்டுமே கிடைத்து வரும் வேளையில் இராமநாதபுரத்தில் சங்க காலப் பொருட்கள் கிடைத்திருப்பது ஆச்சிரியத்தை அளிக்கிறது.
விளக்கம்
தமிழர்களின் பழமையான நாகரிகத்தைப் பற்றி சங்ககால இலக்கிய பாடல்களில் மட்டுமே நாம் அறிந்து வந்தோம். ஆனால் தற்போது தமிழகத்தில் நடைபெற்ற ஆதிச்சநல்லூர், சமயநல்லூர், கீழடி போன்ற அகழாய்வுகளில் தமிழர்களின் சங்ககால நாகரீகத்தைநிரூபிக்கும் வகையில் பல பழமையான பொருள்கள் கண்டுபிடிக்கப்பட்டன. குறிப்பாக கீழடியில் கண்டெடுக்கப்பட்ட பொருள்களின் மாதிரிகளின் பரிசோதனையில் அவை 2200 ஆண்டுகள் பழமையானவை என்று தெரியவந்தது.
இந்நிலையில், கீழடியில் கண்டுபிடிக்கப்பட்ட பொருள்களை விட மிகவும் பழமையான பொருள்கள் இராமநாதபுரம் அருகில் உள்ள போகலூரில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இராமநாதபுரம் மாவட்டம் போகலூர் கண்மாயின் வடக்கே முல்லைக்கோட்டை முனீஸ்வரர் கோவில் உள்ளது. அங்கு சுமார் 40 ஏக்கர் பரப்பளவில் பானை ஓடுகள் சிதறிக்கிடந்ததாகப் அப்பகுதியை சேர்ந்தவர்கள் அளித்தத் தகவலை அடுத்து இராமநாதபுரம் தொல்லியல் துறை நிறுவனத்தின் தலைவர் ராஜகுரு தலைமையில் ஆய்வுகள் நடைபெற்றன.
வைகை ஆற்றிலிருந்து 2 கி.மீ தொலைவில் உள்ள இப்பகுதி காத்தான் ஓடையின் மூலம் ஆற்றுடன் இணைக்கப்பட்டுள்ளது. இப்பகுதியில் கற்காலக் கற்கோடாரிகள், அரவைக்கற்கள், கவண்கல், குறியீடுகள் உள்ள பானைகள், கருப்பு மற்றும் சிவப்பு வண்ணப் பானை ஓடுகள், தக்களி, இரும்புக்கத்தியின் முனைபகுதி போன்ற பல பொருள்கள் கிடைத்துள்ளன. புதிய கற்காலமானது 5000 ஆண்டுகளுக்கு மேல் பழமையானது ஆகும். எனவே தற்போது போகலூரில் கிடைத்த கற்கோடாரிகள் புதிய கற்காலத்தை சேர்ந்தவை என்பதால் அவை 5000 ஆண்டுகள் பழமையானதாக இருக்கும். மேலும் இப்பகுதியில் ஒரு சிகப்பு கருப்பு வண்ணப் பானை ஓடுகளில் ‘ த ‘ என்னும் தமிழ் பிராமிய எழுத்துக் குறியீடுகளும், மற்றொன்டில் திரிசூலக் குறியீடுகளும் காணப்படுகின்றன. இவை அனைத்தும் 2000 ஆண்டுகள் பழமையானவை. மேலும் மிக அரிதானப் பொருள்கள் கிடைப்பதால் இவ்விடத்தின் பழமையைப் பற்றி அறிந்து கொள்ள முழுமையான அகழாய்வு நடைபெற வேண்டும் என்று தொல்லியல் துறை ஆய்வாளர் ராஜகுரு கூறியள்ளார்.
இப்பகுதியில் புதிய கற்காலக் கருவிகளுடன் இரும்புப்பொருட்கள் மற்றும் சங்க காலப் பானை ஓடுகள் கிடைத்திருப்பது, கற்காலம் முதல் சங்க காலம் வரை பல ஆயிரம் ஆண்டுகளாக மக்கள் குடியிருப்புப் பகுதியாக இவ்விடங்கள் இருந்திருப்பதை அறியலாம்.