600 கோடி வாக்காளர்கள் பிஜேபி-க்கு வாக்களித்ததாகக் கூறிய பிரதமர் மோடி.

பரவிய செய்தி
2014 ஆம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் 600 கோடி வாக்காளர்கள் தமக்கு வாக்களித்தார்கள் என்றுக் கூறிய பிரதமர் மோடி.
மதிப்பீடு
சுருக்கம்
உலக பொருளாதார மாநாட்டில் பேசிய இந்திய பிரதமர் நரேந்திர மோடி, இந்திய வாக்களர்களின் எண்ணிக்கையை 600 கோடி என்று தவறாகக் குறிப்பிட்டுள்ளார்.
விளக்கம்
டாவோஸில் நடைபெற்று வரும் 48-வது உலக பொருளாதார மாநாட்டில் பல்வேறு நாட்டு தலைவர்கள் கலந்து கொண்டனர். நான்கு நாட்கள் நடைபெற்ற உலக பொருளாதார மாநாட்டில் இந்திய பிரதமர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
உலக பொருளாதார மாநாட்டில் பேசிய பிரதமர் மோடி, உலகின் பருவநிலை மாற்றம், தீவிரவாதம் மற்றும் பாதுகாப்பு கொள்கை பற்றி விரிவாக பேசினார். அதில், நல்ல தீவிரவாதம் மற்றும் தீய பயங்கரவாதம் என்று ஏதும் இல்லை. தீவிரவாதம் என்பதே ஆபத்தானது என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்திய வாக்காளர்கள்:
இந்தியாவில் உள்ள 600 கோடி வாக்காளர்கள் கடந்த 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் வாக்களித்து மத்தியில் ஆளும் தங்களது கட்சிக்கு பெரும்பான்மையை வழங்கியதாக் கூறினார். அதாவது இந்தியாவில் 6 பில்லியனுக்கும் அதிகமான வாக்காளர்கள் இருப்பதாக தவறாக குறிப்பிட்டுள்ளார்.
மேலும், 20 ஆண்டுகளுக்கு முன்பாக முதல் முறையாக இந்திய பிரதமர் தேவ கௌடா 1997-ம் ஆண்டில் டாவோஸில் நடைபெற்ற மாநாட்டில் பங்கேற்றார் என்றும் கூறியிருந்தார்.
இந்திய தேர்தல் ஆணையத்தின் கணக்கெடுப்பின் படி, 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் இந்தியாவில் 814.5 மில்லியன்(81.45 கோடி) வாக்காளர்கள் மட்டுமே இருந்ததாகக் கூறப்படுகிறது. மேலும், இந்தியாவின் மக்கள் தொகை 134 கோடி மட்டுமே.
இந்திய வாக்காளர்கள் குறித்து பிரதமர் மோடியின் ட்விட்டர் பக்கத்திலும் 6 பில்லியன் வாக்காளர்கள் என்றே குறிப்பிடப்பட்டிருந்தது. எனினும், இத்தவறான கருத்து அதிகம் பரவுவதற்குள், சிலமணி நேரத்தில் அப்பக்கத்தில் இருந்து நீக்கப்பட்டது.