This article is from Sep 30, 2018

6000 ஆண்டுகள் பழமையான ஸ்ரீராமர் சிற்பம் ஈராக்கில் கண்டெடுக்கப்பட்டதா ?

பரவிய செய்தி

6000 ஆண்டுகளுக்கு பழமையான ஸ்ரீராமர் மற்றும் ஹனுமனின் சிற்பம் ஈராக் நாட்டில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. 3 ஆண்டுகளுக்கு முன்பே கண்டுபிடித்தும் ஏன் வெளிச்சத்துக்கு வரவில்லை. யோசிங்க மக்களே..!

மதிப்பீடு

விளக்கம்

ஈராக் நாட்டின் Sulaymaniyah என்ற நகருக்கு தென்மேற்கு பகுதியில் Darbandikhan என்ற ஏரி அமைந்துள்ளது. இதன் தென்மேற்கு பகுதியில் செல்கையில் அங்கு உள்ள அனைத்துக் கிராமத்தினருக்கும் Belula Pass என்ற மலைப்பகுதியை பற்றி நன்கு தெரியும்.

Darband-i-Belula மலைப் பகுதி ஈராக் மற்றும் ஈரான் நாட்டின் எல்லைப்பகுதியில் அமைந்துள்ளது. அம்மலையில் பாறைகள் மட்டுமே நிறைத்த இடத்தில் குறிப்பிட உயரத்தில் மலையில் வடிவமைக்கப்பட்ட சிற்பத்தை காண முடிகிறது.

” மலையில் வடிவமைக்கப்பட்ட சிற்பத்தில் கம்பீரமாக உடல் அமைப்புடன் கையில் வில்லினை ஏந்தி நிற்பது போன்று ஒருவரும், அவருக்கு அருகில் இருவர் இருப்பது நன்றாகப் புலப்படுகிறது. கம்பீரமாக நிற்கும் மனிதரின் காலடியில் ஒருவரும், அவருக்கு அருகில் மற்றொருவரும் உள்ளனர். வீரர் ஒருவர் எதிரிகளை தாக்குவது போன்று சிற்பம் வடிவமைக்கப்பட்டுள்ளது. 4000 ஆண்டுகளுக்கு முன் செதுக்கபட்ட உருவங்களில் வெற்றிப்பெற்ற போர் வீரனும் தோல்வி அடைந்த இரு நபர்களும் உள்ளனர். கையில் வில்லினை வைத்திருக்கும் வீரனின் காலடியில் இருவரும் இருக்கின்றனர். போர் வீரனின் தலையில் இருக்கும் கவசம் ‘URR iii அரசர்கள்’ பயன்படுத்துவது போன்று இருக்கிறது “.

வலதுப் பக்க மனிதற்கு அருகில் நான்கு கட்டங்களாக பிரிக்கப்பட்ட செவ்வக வடிவில் செதுக்கி, அதில் பழமையான மொழியின் எழுத்துக்கள் இடம்பெற்றுள்ளன. அதில் உள்ள 46 எழுத்துக்கள் அனைத்தும் அக்கேடியன் மொழியைச் சேர்ந்தவை என்று அடையாளம் கண்டுள்ளனர்.

அதை அடிப்படையாகக் கொண்டு ஆராய்ச்சியாளர்கள் மொழி பெயர்வு செய்ததில் அரசன் மற்றும் அவரின் தந்தை பெயராக இருக்கும் என்றும், அரசரின் பெயர் “ Tar…dunni “ அவரின் தந்தையின் பெயர் ilkki என்று இடம்பெற்றுள்ளது எனக் குறிப்பிட்டுள்ளனர். சிலவற்றை மொழி பெயர்க்க முடியவில்லை என்று கூறியுள்ளனர். இவை 4000 ஆண்டுகளுக்கு முன்பானது என்றும், அக்கேடியன் காலம் கி.மு 22 நூற்றாண்டை சேர்ந்தவையாக இருக்கலாம் என்று தெரிவிக்கின்றனர்.

மலையில் வடிவமைக்கப்பட்ட சிற்பத்தின் புகைப்படத்தை Sulaymaniyah மியூசியத்தில் வைத்து அதில் ஆங்கிலம் மற்றும் குர்திஷ் மொழியில் அக்கேடியன் சிற்பம் என்று குறிப்பிட்டுள்ளனர். 2015-ல் இந்த சிற்பம் பற்றிய கட்டுரை ஒன்று வெளியாகியுள்ளது.

ஈராக் மலைப்பகுதியில் அக்கேடியன் காலத்தைச் சேர்ந்த சிற்பத்தை ஸ்ரீராமர் மற்றும் ஹனுமான் சிற்பம் என்று தவறான தகவலை வெளியிட்டுள்ளனர். சிற்பத்தின் புகைப்படம் மற்றும் ஓவியத்தில் இருப்பதை தெளிவாக கண்டு அந்த வீரர் ஸ்ரீராமர் இல்லை என்பதை புரிந்து கொள்வீராக..

Please complete the required fields.




ஆதாரம்

Back to top button
loader