மேற்கு வங்கத்தில் இருந்து மகாராஷ்டிராவிற்குள் புகுந்த 63 ரோஹிங்கியா முஸ்லீம்கள் பிடிபட்டதாகப் பரவும் வதந்தி !

பரவிய செய்தி
63 ரோஹிங்கியாக்கள் மேற்கு வங்கம் வந்து அங்கிருந்து லாரி மூலம் மஹாராஷ்டிர கோல்காபுர் வரும் பொழுது பிடிபட்டனர். மிகப் பெரிய சதிவலை திட்டமிட்டு செய்யப் படுகிறது.
மதிப்பீடு
விளக்கம்
மியான்மரில் இருந்து ரோஹிங்கியா முஸ்லீம்கள் 63 பேர் மேற்கு வங்கம் வந்து, அங்கிருந்து லாரி மூலம் மகாராஷ்டிரா மாநிலத்தின் கோல்காபூர் வரும்போது பிடிபட்டதாக வீடியோ ஒன்றினை சமூக வலைத்தளங்களில் பரப்பி வருகின்றனர்.
உண்மை என்ன ?
பரப்பப்படும் வீடியோ கீஃப்ரேம்களை கொண்டு இணையத்தில் தேடுகையில், கடந்த 18ம் தேதி ‘IANS TV’ என்னும் யூடியூப் பக்கத்தில் இது குறித்த செய்தி வெளியிடப்பட்டுள்ளது. அதன் தலைப்பில் பீகார் மற்றும் மேற்கு வங்காளத்தில் இருந்து மதராஸாவில் படிப்பதற்காக 63 சிறுவர்கள் அழைத்து வரப்பட்டதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிகழ்வு பற்றி மேற்கொண்டு தேடியதில், ‘TV9 Hindi’ இணையதளத்தில் செய்தி வெளியிடப்பட்டுள்ளதைக் காண முடிந்தது. இந்தியில் உள்ள அச்செய்தியை ஆங்கிலத்தில் மொழிப்பெயர்த்துப் படிக்கையில், மகாராஷ்டிரா மாநிலம் கோல்காபூர் ரயில் நிலையத்தில் அதிக அளவிலான முஸ்லீம் சிறுவர்களை லாரியில் ஏற்றிச் செல்வது குறித்து இந்து அமைப்பினர் காவல் துறைக்குத் தகவல் அளித்துள்ளனர்.
அதனைத் தொடர்ந்து காவல் துறையினர் அந்த வாகனத்தில் இருந்தவர்களிடம் விசாரணை செய்ததில், அந்த சிறுவர்கள் அருகில் உள்ள மதரஸாவில் படிப்பவர்கள். அவர்கள் கோடை விடுமுறைக்கு தங்களின் வீடுகளுக்குச் சென்றுவிட்டு, விடுமுறை முடிந்து மீண்டும் மதரஸாவிற்கு வருவதற்காக ரயில் மூலம் கோல்காபூர் வந்தவர்களை, லாரியில் அழைத்துச் சென்றதாகக் கூறியுள்ளனர்.
மேற்கொண்டு அச்சிறுவர்களின் ஆதார் மற்றும் அடையாள அட்டைகளை ஆய்வு செய்துள்ளனர். பின்னர் மதரஸாவிலிருந்து மௌலானா வரவழைக்கப்பட்டு, குழந்தைகளின் பெயர், அவர்களின் குடும்ப விவரம் மற்றும் பிற தகவல்களைக் காவல் துறையினர் ஆய்வு செய்து மதரஸாவிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இது பற்றி கோல்காபூர் துணை காவல் கண்காணிப்பாளர் மங்கேஷ் சவான் விளக்கம் அளித்துள்ளார். இந்நிகழ்வு குறித்த தகவலினை ‘India TV’ இணையதளத்தில் வெளியான செய்தியிலும் உறுதி செய்ய முடிகிறது.
ரோஹிங்கியா மக்கள் 2015ம் ஆண்டு மியான்மரில் நிகழ்ந்த மதக் கலவரத்தையொட்டி அண்டை நாடுகளுக்கு இடம் பெயர்ந்தனர். அப்படி இந்தியாவிலும் உள்ள ரோஹிங்கியா மக்களை அகதிகளாகவே கருதப்படுகின்றனர். இவற்றிலிருந்து 63 ரோஹிங்கியாக்கள் லாரி மூலம் அழைத்து வரப்பட்ட போது காவல் துறையால் பிடிக்கப்பட்டதாகப் பரவும் செய்தி உண்மை அல்ல என்பதை அறிய முடிகிறது.
மேலும் படிக்க : மேற்கு வங்கத்தில் இந்து பெண்களின் நிலை எனப் பரவும் உத்தரப் பிரதேசத்தின் பழைய வீடியோ!
இதற்கு முன்னர் மேற்கு வங்காளத்தில் ரோஹிங்கியா மக்கள் இந்து பெண்களை பாலியல்ரீதியாக தாக்குவதாகப் பரப்பப்பட்ட செய்தி குறித்த உண்மைத் தன்மையினை யூடர்ன் வெளியிட்டுள்ளது.
முடிவு :
நம் தேடலில், 63 ரோஹிங்கியாக்கள் மேற்கு வங்கம் வந்து அங்கிருந்து லாரி மூலம் மகாராஷ்டிரா கோல்காபூர் வரும் பொழுது பிடிபட்டனர் எனப் பரவும் தகவல் உண்மை அல்ல. அவர்கள் கோல்காபூரில் உள்ள மதரஸாவில் படிக்கும் பீகார் மற்றும் மேற்கு வங்க சிறுவர்கள் என காவல்துறையினர் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது என்பதையும் அறிய முடிகிறது.