மூளையை பாதிக்கும் 7 பழக்கங்கள் என WHO வெளியிட்ட பட்டியலா ?

பரவிய செய்தி
மூளையை பாதிக்கும் 7 முக்கிய பழக்கங்கள். 1. காலை உணவை தவிர்ப்பது 2. தாமதமாக தூங்குவது 3. அதிகளவு சர்க்கரையை எடுத்துக் கொள்ளுவது 4. அதிகநேரம் தூங்குவது, குறிப்பாக காலையில் 5. டிவி அல்லது கணினியை பார்த்துக் கொண்டே உணவு உண்பது 6. தூங்கும் போது தொப்பி /ஸ்கார்ஃப் அல்லது சாக்ஸ் அணிவது 7. சிறுநீரை அடக்கி வைக்கும் பழக்கம்
மதிப்பீடு
விளக்கம்
உலக சுகாதார அமைப்பு மனித மூளையை பாதிக்கும் 7 முக்கிய பழக்கங்களை வரிசைப்படுத்தி வெளியிட்டதாக தகவல் ஒன்று சமூக வலைதளங்களில் பரப்பப்பட்டு வருகிறது. இதன் உண்மைத்தன்மை குறித்து வாசகர் தரப்பிலும் கேட்கப்பட்டது.
அதிலுள்ள 7 பழக்கங்களும் தற்போது பெரும்பாலான மக்களால் செய்யக்கூடியவையாக இருக்கிறது. ஆகையால், பரவும் தகவல் குறித்து தேடுகையில், இதே தகவல் பல நாடுகளில் பரவிக் கொண்டிருந்த போது நைஜீரியா நாட்டைச் சேர்ந்த ஐசிஐஆர் எனும் இணையதளம் உலக சுகாதார அமைப்பின் நைஜீரியா பிரிவை அணுகிய போது, ” இந்த பட்டியலை உலக சுகாதார அமைப்பு வெளியிடவில்லை ” என மறுத்ததாக வெளியிட்டு இருக்கிறது.
1. காலை உணவை தவிர்ப்பது : தேசிய சுகாதார நிறுவனம்(NIH) வெளியிட்ட ஆய்வுகளின்படி, காலை உணவிற்கும், மூளை பாதிப்பிற்கும் இடையே நேரடி தொடர்பு இல்லை. காலை உணவை தவிர்ப்பதால் பசியின்மையை வழிவகுக்கும்.
2. தாமதமாக தூங்குவது : ஹார்வர்ட் ஆய்வின்படி, “மனிதனின் சரியான அறிவாற்றல் செயல்பாடுகளுக்கு தினமும் இரவில் 7-9 மணிநேரம் தூக்கம் தேவை. அதிக அளவில் அல்லது மிகக் குறைந்த அளவிலான தூக்கம் நினைவாற்றல் மற்றும் சிந்தனை பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும். தூக்கமின்மை ஆனது மன அழுத்தம், இதய நோய், பக்கவாதம் மற்றும் டைப் 2 நீரிழிவு நோய் ஆகியவற்றுடன் தொடர்புடையது ” எனக் கூறப்பட்டுள்ளது
3. அதிகளவு சர்க்கரையை எடுத்துக் கொள்ளுவது : உலக சுகாதார அமைப்பின் பரிந்துரைப்படி, நமது உணவில் ஒரு நாளைக்கு 25 கிராம் சர்க்கரை தேவைப்படுகிறது. அதிக அளவிலான சர்க்கரை எடுத்துக் கொள்வது அறிவாற்றல் செயல்பாடு, இன்சுலின் எதிர்ப்பு ஆகியவற்றை குறைக்க வழிவகை செய்கிறது என ஆய்வுகள் கூறுகின்றன.
4. அதிகநேரம் தூங்குவது, குறிப்பாக காலையில் : காலையில் தூங்குவதற்கும் மூளை பாதிக்கப்படுவதற்கும் நேரடி தொடர்பு இல்லை. இருப்பினும், பகல்நேர தூக்கத்தினால் இரவில் சரியான தூக்கமின்மைக்கு வழிவகுக்கும். இது ஒழுங்கற்ற தூக்க முறைகளுக்கு வழிவகுக்கும்.
5. டிவி அல்லது கணினியை பார்த்துக் கொண்டே உணவு உண்பது : ஹார்வர்ட் அறிக்கையின்படி, நாம் உணவு உண்பதில் கவனம் செலுத்த வேண்டும் மற்றும் நன்றாக மென்று உண்ண வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது. ஆனால், அறிவாற்றல் செயல்பாடு மற்றும் உணவு இடையே எந்தத் தொடர்பையும் காணவில்லை. எனினும், டிவி மற்றும் கணினியை பார்த்துக் கொண்டே உணவு உண்ணும் போது உணவின் மீதான கவனம் சிதறுகிறது.
6. தூங்கும் போது தொப்பி /ஸ்கார்ஃப் அல்லது சாக்ஸ் அணிவது : பெரும்பாலான குளிர் நிறைந்த நாடுகளில் மக்கள் உடல் வெப்பநிலையை சாதாரணமாக வைக்க தொப்பி மற்றும் சாக்ஸ் போன்றவற்றை அணிந்து கொண்டே தூங்குகிறார்கள். இதற்கும் மூளை பாதிப்பிற்கும் இடையே தொடர்பு இருப்பதாக எந்த ஆய்வுகளும் இல்லை.
7. சிறுநீரை அடக்கி வைக்கும் பழக்கம் : சிறுநீரை அடக்கி வைக்கும் பழக்கத்தை ஏற்படுத்தினால் சிறுநீர்ப்பை தசைகள் பலவீனமடையும். இதனால் சிறுநீர் பாதை தொற்று மற்றும் சிறுநீரக கற்கள் போன்ற பிரச்சனைகளே ஏற்படும்.
முடிவு :
நம் தேடலில், மூளையை பாதிக்கும் 7 முக்கிய பழக்கவழக்கங்களை உலக சுகாதார அமைப்பு வெளியிடவில்லை. மேற்கண்ட 7 பழக்கங்கள் நேரடியாக மூளை பாதிப்பிற்கு வழிவகுக்காது என்றாலும், அவற்றை அதிகமாக செய்கையில் உடலுக்கு ஆபத்தான பாதிப்புகள் ஏற்படுத்தும் என அறிய முடிகிறது.