This article is from Oct 23, 2019

777888999 என்ற அழைப்பை எடுத்தால் செல்போன் வெடிக்குமா ?| உண்மை என்ன ?

பரவிய செய்தி

777888999, 13 எண்கள் , 6 எண்களில் இருந்து உங்கள் செல்போனிற்கு அழைப்பு வந்து அதை எடுத்தால் செல்போன் வெடிப்பதாக கூறப்படுகிறது. இந்த தகவலை செல்போன் பயன்படுத்தும் அத்தனை பேரும் , உங்கள் நண்பர்கள் என அனைவருக்கும் சொல்லுங்கள். முடிந்தவரை இந்த தகவலை உடனே பரப்புங்கள்.

 

மதிப்பீடு

விளக்கம்

777888999 என்ற எண்களில் இருந்து செல்போனிற்கு வரும் அழைப்புகளை எடுத்தால் செல்போன் வெடிப்பதாக ஒரு வீடியோ உடன் , ஆடியோ பதிவு ஒன்று வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வைரலாகிக் கொண்டிருக்கிறது.

அந்த வீடியோவில், 777888999 என்ற எண்ணில் இருந்து வரும் அழைப்பை எடுத்த உடன் செல்போன் வெடிப்பது போன்று , அதன் பிறகு வாய் கிழிந்த நிலையில் முகத்தில் இரத்த காயத்துடன் இருக்கும் ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கும் காட்சி வரும். அதன் பிறகு ஹிந்தியில் ஒருவர் 777888999 எண் குறித்து விவரித்து இருப்பார். இதுவே வைரலாகும் வீடியோவில் இடம்பெற்று இருக்கிறது.

குறிப்பிட்ட எண்களில் இருந்து அழைப்புகளை எடுத்தால் செல்போன்கள் வெடிப்பதாக சமூக வலைதளங்களில் பரவும் செய்திகள் மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி வருகின்றனர். இதன் உண்மைத்தன்மையை ஆராயத் தீர்மானித்தோம்.

உண்மை என்ன ?

முதலில் 777888999 என்ற 9 இலக்க எண்கள் இந்தியாவை சேர்ந்தவை அல்ல. இந்தியாவில் உள்ள செல்போன் எண்கள் 10 இலக்கத்தில் இருக்கும். மேலும் , இந்தியாவின் சர்வதேச செல்போன் குறியீடான +91 என்ற எண்ணும் இடம்பெறவில்லை. அதேபோன்று, சர்வதேச எண்ணாகவும் இருக்க வாய்ப்பில்லை , அந்த எண்களுக்கு முன்பாக சர்வதேச குறியீடும் இல்லை(Country code).

அடுத்ததாக, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கும் நபர். 777888999 என்ற எண்ணில் இருந்து அழைப்பை எடுத்து செல்போன் வெடித்து இருந்தால் கையில் காயம் இருக்க வேண்டும். ஆனால் , வீடியோவில் இருப்பவருக்கு வாய் பகுதி மட்டுமே வெடித்து சிதறி இருக்கிறது , கையில் காயமே இல்லை.

Youtube video archived link 

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கும் நபரின் விவரங்கள் குறித்து ஆராய்ந்த பொழுது 2018 ஜனவரி 15-ம் தேதி யூடியூப் தளத்தில் பதிவான வீடியோவில் உடன் எலெக்ட்ரானிக் சிகரெட் பயன்படுத்தும் பொழுது வாய் மற்றும் தாடை கிழிந்து உள்ளதாக கூறப்பட்டு இருக்கிறது”.

ஆனால், இந்த பதிவையும் உறுதியான ஆதாரமாக எடுத்துக் கொள்ள முடியவில்லை. இருப்பினும் , செல்போன் வெடிப்பிற்கும் , மருத்துவமனையில் காயத்துடன் ஒருவர் இருப்பவருக்கும் தொடர்பில்லை என்பதை புரிந்து கொள்ள முடிந்தது.

இதற்கு முன்பாக 2017-ம் ஆண்டில் இருந்தே , குறிப்பிட்ட எண்களில் இருந்து வரும் அழைப்புகளை எடுத்ததால் செல்போன் வெடித்து பாதிக்கப்பட்டவர்கள் என வீடியோக்கள், புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி இருந்தன.

மேலும் படிக்க : 13 இலக்க எண் அழைப்புகளால் செல்போன்கள் வெடிக்குமா ?

2018-ல் 13 இலக்க எண்களில் இருந்து வரும் அழைப்புகளால் செல்போன்கள் வெடிப்பதாக செய்திகள் பரவி இருந்தன. அதை யூடர்ன் வதந்தி என்பதை நிரூபித்து இருந்தோம்.

இதற்கு முன்பாக 2017-ம் ஆண்டிலும் 777888999 என்ற எண்களில் இருந்து அழைப்பு வந்தால் செல்போன் வெடிப்பதாக கூறுவதை வதந்தி என நாம் மீம்ஸ் வழியாக மக்களுக்கு தெரிவித்து இருந்தோம்.

தற்பொழுது பரவும் வீடியோவில் , மக்களுக்கு 777888999 என்ற எண்களில் இருந்து அழைப்பு வந்தால் செல்போன் வெடிப்பதாக கூறுவதற்கு பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட காட்சிகளாக இருக்கலாம். ஏனெனில், செல்போன் வெடிக்கும் பொழுது நிகழ்வதை பார்த்தால் கிராஃபிக்ஸ் போன்று இருக்கிறது .

முடிவு : 

நம்முடைய தேடலில் , 777888999 என்ற எண்களில் இருந்து வரும் அழைப்புகளை எடுத்தால் செல்போன் வெடிப்பதாக பரவும் ஃபார்வர்டு செய்திகள் வதந்திகளே. அதனுடன் இணைக்கப்பட்டு இருக்கும் வீடியோ சம்பந்தமில்லாதவை என்பதை நாம் அறிந்து கொண்டோம்.

777888999 , 6 இலக்கம் , 13 இலக்க எண்களில் இருந்து வரும் அழைப்புகளை எடுத்து செல்போன் வெடித்ததாக எந்தவொரு சம்பவமும் பதிவாகவில்லை. மக்களுக்கு ஆபத்தான நிகழ்வு என்றால் நெட்வொர்க் நிறுவனங்கள் மற்றும் அரசாங்கம் மக்களுக்கு எச்சரிக்கை செய்து இருக்கும். ஆனால் , அப்படி எதுவும் நிகழவில்லை.

கடந்த பல ஆண்டுகளாகவே இவ்வாறான வதந்திகள் பரவி வருகின்றன என்பதை நம் பதிவுகளில் இருந்து அறிந்து கொண்டு இருப்பீர்கள். மக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தும் இதுபோன்ற ஃபார்வர்டு செய்திகளை பகிர வேண்டாம் எனக் கேட்டுக் கொள்கிறோம்.

Please complete the required fields.




Back to top button
loader