புதுக்கோட்டை அருகே 7 வயது சிறுமி பாலியல் வன்புணர்வு செய்து கொலை!

பரவிய செய்தி
தமிழ்நாட்டில் 7 வயது சிறுமியை 3 பேர் சேர்ந்து பாலியல் வன்புணர்வு செய்து கொன்றுள்ளனர். சிறுமியின் உடல் புதுக்கோட்டை அருகே உள்ள ஆவுடையார்கோவில் பகுதியில் கண்டெடுக்கப்பட்டது.
மதிப்பீடு
விளக்கம்
கொரோனா பாதிப்பு மற்றும் பிற பிரச்சனைகளுக்கு மத்தியில் தமிழகத்தில் 7 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்ட செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கொலை செய்யப்பட்ட சிறுமியின் இறப்பிற்கு நீதிக் கேட்டு ஹாஷ்டக் சமூக வலைதளத்தில் ட்ரெண்ட் செய்யப்பட்டு வருகிறது. மீம்ஸ் பதிவுகளும் பகிரப்பட்டு வருகிறது.
புதுக்கோட்டை மாவட்டம் ஏம்பல் கிராமப் பகுதியைச் சேர்ந்த 7 வயது சிறுமி விளையாடிக் கொண்டிருந்த போது காணவில்லை. சிறுமியின் பெற்றோர்கள் அருகே உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றிருப்பார் என நினைத்த போது இரவு ஆகியும் குழந்தையை காணவில்லை. இது தொடர்பாக ஏம்பல் காவல் நிலையத்தில் சிறுமியின் பெற்றோர் புகார் அளித்து தேடி வந்தனர்.
இந்நிலையில், ஏம்பல் பகுதியில் உள்ள குளத்திற்கு தண்ணீர் செல்லும் வழியில் கருவேல மரங்கள் சூழ்ந்த பகுதியில் சிறுமி சடலமாய் கண்டெடுக்கப்பட்டார். உடலில் பல இடங்களில் காயங்கள் இருந்ததாகக் கூறப்படுகிறது. இதுதொடர்பாக வழக்கு பதிந்து போலீசார் விசாரித்து வந்தனர். உடற்கூராய்விற்காக சிறுமியின் உடன் புதுக்கோட்டை மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்து கொலை செய்திருக்கலாம் என சந்தேகம் இருந்தது. அதன் அடிப்டையில் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. பின்னர், உடற்கூராய்வில் சிறுமி பாலியல் வன்புணர்வு செய்து கொலை செய்யப்பட்டது உறுதி செய்து உள்ளதாக செய்திகளில் வெளியாகி வருகிறது. மாவட்ட எஸ்.பி அருண்சக்திகுமார் தலைமையில் நடத்தப்பட்ட விசாரணையில் அப்பகுதியை சேர்ந்த ஒருவனை போலீசார் கைது செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதில், மேலும் சிலருக்கு தொடர்பு இருக்கலாம் எனவும், தொடர்புடையவரை தேடி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மேலும் படிக்க : உன்னாவ் மாவட்டத்தில் பதிவான பாலியல் வன்கொடுமை வழக்குகள் எத்தனை ?
7 வயது சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்து கொலை செய்தவர்களை உடனடியாக கைது செய்து உரிய தண்டனை வழங்க வேண்டும் என நெட்டிசன்கள் தொடர்ந்து பதிவிட்டு வருகிறார்கள். பெண் குழந்தைகளுக்கு பாதுகாப்பு இல்லாத சமூகம் உருவாகிக் கொண்டே வருகிறது என்பதை தொடர்ந்து இதுபோல் வரும் செய்திகளின் நாம் மூலம் அறிகிறோம். இந்நிலை எப்போது மாறும் என்பது பதில் அறியா கேள்வியாக அமைந்துள்ளது.