ஆஸ்திரியாவில் 800 ஆண்டுகள் பழமையான மொபைல் வடிவ பொருள் கிடைத்ததா ?| உண்மை என்ன ?

பரவிய செய்தி

நோக்கியா மாடலில் 800 ஆண்டுகளுக்கு முந்தைய மொபைல், ஏலியன் கருவியா ?

Facebook link | archive link 

மதிப்பீடு

விளக்கம்

ஆஸ்திரியா நாட்டில் 800 ஆண்டுகளுக்கு முன்பு பயன்படுத்தப்பட்ட நோக்கியா செல்போன் வடிவிலான பொருளை தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்ததாகவும், இது வேற்றுக்கிரகவாசிகளின் தொடர்புக் கருவியாகப் பயன்படுத்தப்பட்டதா மற்றும் டைம் ட்ராவல் சாத்தியமா எனக் கூறி பகிர்ந்து வருகிறார்கள். இப்பதிவுகள் கடந்த 6ஆண்டுகளுக்கு முன்பிருந்தே தமிழில் பரப்பப்பட்டு வருகிறது.

Advertisement

Facebook link | archive link 

முகநூல் பதிவின் நிலைத்தகவலில், ” ஆஸ்திரியா நாட்டில் 800 வருடங்களுக்கு முன்னால் பயன்படுத்தப்பட்ட கைப்பேசி போன்ற ஒருபொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து அதனை வேற்றுக்கிரகவாசிகள் பயன்படுத்தியுள்ளனரா என சந்தேகங்கள் எழுந்துள்ளன.
ஆஸ்திரியாவில் தொல்பொருள் துறையை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் சில தினங்களுக்கு முன்னர் பூமியிலிருந்து மர்மமான பொருள் ஒன்றை தோண்டி எடுத்துள்ளனர்.


தற்போதைய நவீன காலத்தில் பயன்படுத்தப்படும் கைப்பேசியை போல் அது காணப்படுவதால் ஆராய்ச்சியாளர்கள் மத்தியில் பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளது. களிமண் மாதிரி காணப்படுவதுடன் அதன் மீது ஒரு கைப்பேசியில் என்னென்ன குறியீடுகள் இருக்குமோ அவை அனைத்தும் பழங்கால மொழி வடிவத்தில் பொறிக்கப்பட்டுள்ளது.


13 நூற்றாண்டை சேர்ந்த பொருளாக கருதப்படும் இவற்றின் மீது உள்ள எழுத்துக்கள் குறியீடுகள் தற்போது ஈரான் அல்லது இராக் நாட்டிலும் வழக்கத்தில் இருந்து வருகிறது. இந்த கண்டுபிடிப்பு குறித்து ஆய்வு செய்துவரும் ஆராய்ச்சியாளர்களில் சிலர், வேற்றுக்கிரகவாசிகள் இதனை பயன்படுத்தி இருக்கலாம் என்றும், பல நூறு ஆண்டுகளுக்கு பிறகு எதிர்காலத்தில் கைப்பேசி எவ்வாறு இருக்கும் என்பதை முன்கூட்டியே கணித்து அவர்கள் இதனை வடிவமைப்பு செய்தி இருக்கலாம் என கருதுகின்றனர்.

Advertisement
இவர்களில் சில ஆராய்ச்சியாளர்கள், இந்த மர்மமான பொருள் கண்டுபிடித்துள்ளதன் மூலம் காலப்பயணம்(Time Travel) ஒருவகையில் சாத்தியமாக இருந்துள்ளது என கேள்வி எழுப்பியுள்ளனர். எனினும், 800 வருடங்களுக்கு முன்னர் இருந்துள்ளதாக கருதப்படும் இந்த மர்ம கண்டுபிடிப்பு தொடர்பான விரிவான தகவல்கள் மற்றும் ஆதாரங்கள் கிடைக்கப்பெறாததால் இது குறித்து தொல்பொருள் துறையினர் தீவிரமாக ஆய்வு செய்து வருகின்றனர் ” என கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பே பரவி இருக்கிறது.
6 ஆண்டுகளுக்கு முன்பு பரவிய தகவலை அடிப்படையாகக் கொண்டு 2020 செப்டம்பர் 26-ம் தேதி GizBot Tamil எனும் முகநூல் பக்கத்தில் ஓர் கட்டுரையை பதிவிட்டு இருந்தனர். அந்த கட்டுரையிலும், ” சதி ஆலோசனை கோட்பாட்டாளர்கள் தங்களின் கருத்துக்களை வலுவாக முன்வைப்பதாகவும், சில இணையதளங்களில் வெளியான தகவல்களையும் இணைத்து இருந்தனர். இருப்பினும், ஆதாரமாக அளிக்கப்பட்ட டு தி டெத் மீடியா எனும் இணையதளத்தில், இது சார்ந்த தெளிவான விளக்கம் அளிக்கப்படவில்லை என்பதால், துரதிஷ்டவசமாக இந்த பரபரப்பான கண்டுபிடிப்பு பற்றிய மேலும் பல தகவல்கள் இல்லை எனக் கூறியுள்ளதாக ” குறிப்பிட்டு இருக்கிறார்கள்.


உண்மை என்ன ? 
“ஆஸ்திரியா நாட்டில் 800 ஆண்டுகளுக்கு முந்தைய செல்போன் வடிவ பொருளை அகழ்வாராய்ச்சியாளர்கள் கண்டெடுக்கப்பட்டதாக ” பரவும் கதை வைரலாக காரணமாகியது சதிக் கோட்பாடுகளை பேசும் இணையதளங்களான Conspiracy club, To the death Media, UFO Sighting daily உள்ளிட்டவையாகும். ஆனால், ஆதாரங்கள் இல்லாமல் புகைப்படத்துடன் கூடிய கதையை மட்டுமே பகிர்ந்து இருந்தனர்.
2016-ம் ஆண்டிலேயே சில இணையதளங்கள் ஆஸ்திரியாவில் 800 ஆண்டுகள் பழமையான பொருள் கிடைத்ததாக பரவும் தகவல் இணைய வதந்தி என வெளியிட்டு இருந்தனர். 2016-ம் ஆண்டு ஜனவரி 21-ம் தேதி huffingtonpost எனும் இணையதளம் ” Ancient Babylonian Cellphone Isn’t Ancient, Babylonian Nor A nokia ” என்கிற தலைப்பில் வெளியிட்ட கட்டுரையில்,


” இந்த சர்ச்சைக்குரிய கதைக்கு பின்னால் இருக்கும் உண்மை : ஜெர்மன் கலைஞர் கார்ல் வீங்கார்ட்னர் என்பவர் 2012-ம் ஆண்டு இந்த களிமண் பொருளை, பண்டைய சுமேரியன் காலத்து எழுத்துக்களுடன் இருப்பது போன்று உருவாக்கி இருக்கிறார். கார்ல் வீங்கார்ட்னர் இதுபோன்ற பொருட்களை இணையத்தின் மூலம் விற்பனை செய்து வருகிறார். இதனை முகநூலில் “Babylonokia” என அழைக்கின்றனர். எதற்காக சில இணையதளங்கள் தவறான செய்திகளை பரப்பின என்பது அவருக்கு தெரியவில்லை. இதுகுறித்து அவர் கோபமடைந்து இருக்கிறார்.


இந்த புகைப்படத்தை எனக்கு தெரியாமல், என்னுடைய அனுமதி இல்லாமலேயே பயன்படுத்தப்பட்டுள்ளது. எனக்கு யுஎஃப்ஓ மற்றும் வேற்றுக்கிரகவாசிகள் மீது எல்லாம் நம்பிக்கை இல்லை ” என huffingtonpost-க்கு கார்ல் வீங்கார்ட்னர் கூறியதாக வெளியாகி இருக்கிறது.
2018-ல் robscholtemuseum.nl எனும் இணையதளம் டச்சு மொழியில் வெளியிட்ட கட்டுரையில், கார்ல் வீங்கார்ட்னர் கலைப் பொருளை செய்தது குறித்த பேட்டி வெளியாகி இருக்கிறது. அதில், உருவாக்கப்படும் கலைப்படைப்புகளை புகைப்படம் எடுத்து தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டு வந்துள்ளார். இது ஒரு தொல்பொருள் கண்டுபிடிப்பு போல இருக்க வேண்டும், அதேநேரத்தில் நகைச்சுவையானது என அனைவருக்கும் புரிந்து கொள்ளவார்கள் என நினைத்தேன் எனக் கூறி இருந்தார்.


அவர் நோக்கியாவின் மார்க்கெட்டிங் மேலாளருக்கு அப்புகைப்படத்தை அனுப்பி இருந்துள்ளார், ஆனால் அவர்கள் அதை மறுத்துவிட்டார்கள். சில காலத்திற்கு பிறகு கார்ல் வீங்கார்ட்னர் கலைத் தொழிலை நிறுத்திக் கொண்டு, நிறுவனத்தில் இருந்து விலகினார். இணையத்தில் இருந்து தன்னுடைய படைப்புகளின் புகைப்படங்களை நீக்கியும் உள்ளார் ” என வெளியாகி இருக்கிறது. அதனுடன் கார்ல் வீங்கார்ட்னர் புகைப்படத்துடன் வெளியான கட்டுரை பக்கம் இடம்பெற்று இருக்கிறது. வைரலாகும் கலைப்படைப்பு நோக்கிய செல்போன் மாடலில் உருவாக்கவில்லை. மாறாக, எரிக்சன் எஸ்எச் 888 மாடலின் அச்சு எடுத்து செய்துள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
சில இணையதளங்களில் ஆதாரமாக வழங்கப்பட்ட கார்ல் வீங்கார்ட்னர் முகநூல் பதிவுகள் தற்போது நீக்கப்பட்டு உள்ளதாக காண்பித்தன. காரணம், அப்பதிவுகளை அவரே நீக்கி இருக்கிறார். இருப்பினும், Art Replik உடைய கலைப் படைப்புகளின் புகைப்படங்கள் Flickr இணையதளத்தில் வெளியாகி இருக்கின்றன என்பதை கண்டறிய முடிந்தது.
2017-ம் ஆண்டு ஜனவரி 17-ம் தேதி ஒளிபரப்பு செய்யப்பட்ட பிபிசியின் ஒன் ஷோ நிகழ்ச்சியில் ” Babylonphone ” காண்பிக்கப்பட்டு உள்ளதாக Karl Weingaertner எனும் யூடியூப் சேனலில் 1 நிமிட வீடியோ வெளியாகி இருக்கிறது. அந்த நிகழ்ச்சியில் அந்த செல்போனின் புகைப்படமும், கார்ல் வீங்கார்ட்னர் புகைப்படமும் காண்பிக்கப்பட்டு உள்ளன.
அடுத்ததாக, ஆஸ்திரியாவின் பழங்கால செல்போன் கதையை வெளியிட்ட பதிவுகளில் இடம்பெற்று இருக்கும் லேப்டாப் பயன்படுத்துவது போன்ற புகைப்படங்கள் குறித்து யூடர்ன் முன்பே கட்டுரை வெளியிட்டு இருக்கிறோம்.


முடிவு : 
நம் தேடலில், ஆஸ்திரியா நாட்டின் அகழ்வாராய்ச்சியின் போது நோக்கியா மாடலில் 800 ஆண்டுகளுக்கு முந்தைய மொபைல் வடிவிலான பொருள் கிடைத்ததாக பரப்பப்படும் கதை வதந்தியே. அப்புகைப்படத்தில் இருப்பது கார்ல் வீங்கார்ட்னர் உடைய கலைப்படைப்பு என அறிந்து கொள்ள முடிகிறது.

Do you think Youturn’s fact-checking is important? Donate and make it your own people's newspaper!
YouTurn உண்மையை சொல்லும் பணி முக்கியம் என நினைக்கின்றீர்களா? நன்கொடை அளித்து நீங்களே மக்கள் பத்திரிகையாக இயங்க வழி செய்யுங்கள்.

Ask YouTurn

Please complete the required fields.
ஆதாரம்

Back to top button