890 அரசு பள்ளிகள் மூடல், 815 மதுக்கடைகள் திறப்பு என 2018ன் செய்தியைப் பரப்பும் பாமகவினர் !

பரவிய செய்தி
மூட வேண்டியதை திறப்பதும் திறக்க வேண்டியதை மூடுவதும் தான் திராவிட மாடல்
மதிப்பீடு
விளக்கம்
’10-க்கும் குறைவான மாணவர்களைக் கொண்ட 890 அரசு பள்ளிகள் மூடப்படும்’ என்றும், ‘ஊரகப்பகுதிகளில் 815 மதுக்கடைகளை திறக்கலாம்: தமிழக அரசுக்கு, சுப்ரீம் கோர்ட்டு அனுமதி’ என்றும் குறிப்பிடப்பட்ட இரண்டு வெவ்வேறு செய்திகளைக் கொண்ட தினத்தந்தி நாளிதழின் புகைப்படங்கள் தற்போது சமூக ஊடகங்களில் அதிமுக மற்றும் பாமக கட்சியினரால் வைரலாகப் பரப்பப்பட்டு வருகின்றன.
மூட வேண்டியதை திறப்பதும் திறக்க வேண்டியதை மூடுவதும் தான்?? pic.twitter.com/QqrDW3A8Qk
— suresh kumar (@sureshk08121131) August 28, 2023
மேலும் அப்பதிவுகளில் “மூட வேண்டியதை திறப்பதும், திறக்க வேண்டியதை மூடுவதும் தான் திராவிட மாடல்” என்றும், கிறிஸ்தவ முஸ்லீம் பள்ளிகள் நிறைய திறக்கப்படுகிறது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
உண்மை என்ன ?
பரவி வரும் புகைப்படத்தில் உள்ள தலைப்புகள் மூலம் ஆய்வு செய்து பார்த்ததில், தினத்தந்தியின் இணையதளத்தில் இந்த இரண்டு செய்திகளின் கட்டுரையும் கிடைத்தது.
ஊரகப்பகுதிகளில் 815 மதுக்கடைகளை திறக்கலாம் என்ற செய்தியில், 2018 மே 24 என்று குறிப்பிடப்பட்டிருந்தன. அதே போன்று 890 அரசு பள்ளிகள் மூடப்படும் என்ற செய்தியில் 2018 மே 22 என்று குறிப்பிடப்பட்டிருந்தன.
மேலும் பரவி வரும் தினத்தந்தி நாளிதழின் புகைப்படங்களிலும், இவை 2018-இல் வெளியிடப்பட்டதாக தேதிகள் இடம்பெற்று உள்ளன.
மேலும் தேடியதில், இதே புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் கடந்த 2018-இல் இருந்தே பரவி வந்துள்ளன என்பதையும் உறுதிப்படுத்த முடிந்தது.
இதை உறுதிப்படுத்த மற்ற செய்திதளங்களின் பக்கங்களிலும் இந்த செய்திகள் குறித்து தேடினோம். பள்ளிகள் மூடப்படுவது குறித்து மாலைமலர் தமிழின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்திலும் கடந்த 2018 மே 22 அன்று இந்த செய்தி வெளியிடப்பட்டிருந்தது.
10-க்கும் குறைவான மாணவர்களைக் கொண்ட 890 அரசு பள்ளிகள் மூடப்படும்: தமிழக அரசு தீவிர பரிசீலனை#GovernmentSchool https://t.co/U4c18OPOep
— Maalai Malar தமிழ் (@maalaimalar) May 21, 2018
மேலும் படிக்க: திமுக ஆட்சியில் கயிற்றால் கட்டப்பட்ட அரசு பேருந்து எனப் பரப்பப்படும் பழைய புகைப்படம் !
மேலும் படிக்க: திமுக ஆட்சியில் போடப்பட்ட ஆபத்தான சாலை எனப் பரப்பப்படும் 2015ல் பரவிய பழைய வீடியோ !
முடிவு:
நம் தேடலில், 890 அரசு பள்ளிகள் மூடுவதாகவும், 810 டாஸ்மாக் கடைகள் திறக்கப்படுவதாகவும் பரவும் செய்தித்தாள்கள் கடந்த 2018-இல் அதிமுக ஆட்சியில் வெளியிடப்பட்ட தினத்தந்தி நாளிதழின் புகைப்படங்கள். அவை தற்போது நடந்தது போல் தவறாகப் பரப்பி வருகின்றனர் என்பதை உறுதிப்படுத்த முடிகிறது.