பாகிஸ்தானைச் சேர்ந்த முஸ்லிம் மோடிக்கு வாக்களிக்கக் கூறியதாகப் பரவும் தவறான தகவல்!

பரவிய செய்தி

அஸ்லாம் அலைக்கும். நான் பாகிஸ்தானில் இருந்து ஆசிப் சர்தாரி பேசுகிறேன். எனது இனிய இந்திய இஸ்லாமியர்களே…. நீங்கள் இந்தியாவில் நல்ல உணவுகள், பழங்கள், இனிப்புகள் சாப்பிடுகிறீர்கள். ( இப்பொழுது அழுகைக்கு மாறுகிறார்). எங்கள் வீட்டில் உணவில்லை. எங்கள் வாகனங்களுக்கு பெட்ரோலில்லை. கையில் செலவுக்கு பணமில்லை… பஞ்சமும் பசிப் பட்டினியும் பாகிஸ்தானில் தலை விரித்தாடுகிறது.  பாக்கிஸ்தான் சீரடையும் நிலையில் எங்கள் தேசம் இல்லவே இல்லை. இந்திய இஸ்லாமியர்களே … திருந்துங்கள்… உங்கள் தேச சூழல் அற்புதமாக உள்ளது. உங்கள் பிரதமர் மோடி அவர்களின் ஆட்சிக்கு ஆதரவு அளியுங்கள்.  

X link 

மதிப்பீடு

விளக்கம்

பாகிஸ்தான் பல மாதங்களாகக்  கடுமையான பொருளாதார சவால்களைச் சந்தித்து வருகிறது. இதன் காரணமாக உணவு, பெட்ரோல் மற்றும் எண்ணெய் விலை உயர்ந்துள்ளது. 

இந்நிலையில் இந்தியாவில் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், பாகிஸ்தானைச் சேர்ந்த ஆசிப் சர்தாரி என்ற முஸ்லிம் மோடிக்கு ஆதரவாகப் பேசி இருப்பதாக வீடியோ ஒன்று வலதுசாரிகளால் சமூக வலைத்தளங்களில் பரப்பப்படுகிறது. 

அந்த வீடியோவில், நான் பாகிஸ்தானைச் சேர்ந்த ஆசிப் சர்தாரி பேசுகிறேன். நான் ஒரு முஸ்லிம். எங்கள் நாட்டில் (பாகிஸ்தானில்)  பஞ்சமும் பட்டினியும் தலைவிரித்தாடுகிறது. இந்தியாவில் நல்ல உணவு கிடைக்கிறது. நீங்கள் உங்கள் பிரதமர் மோடியின் ஆட்சிக்கு ஆதரவு அளியுங்கள் என ஒருவர் பேசுகிறார். 

உண்மை என்ன?

பரவி வரும் வீடியோவில் ’dhirendra_raghav_79’ என்ற பெயர் இருப்பதைப் பார்க்க முடிந்தது. அதைக் கொண்டு இன்ஸ்டாகிராமில் தேடினோம். ’திரேந்திர ராகவ்’ என்னும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பரவக்கூடிய வீடியோ கடந்த மார்ச் 23ம் தேதி பதிவிடப்பட்டுள்ளது.

இவர் இதேபோல் இந்து, முஸ்லிம் என வேடமிட்டு ரீல்ஸ் செய்து அப்பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அவருடைய சுயவிவரத்தில் கலைஞர் (Artist) என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் அவருடைய  பேஸ்புக் பக்கத்தையும்  ஆய்வு செய்தோம். 

அதிலும் டிஜிட்டல் கிரியேட்டர் எனக் குறிப்பிட்டுள்ளார். அதுமட்டுமின்றி அவர் உத்திரப் பிரதேசத்தில் உள்ள ஆக்ராவை சேர்ந்தவர் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. தன்னை ஒரு நடிகன் எனக் கூறி இதுபோன்ற பல்வேறு வீடியோக்களை அவர் பதிவிட்டு வருகிறார். இவர் பாஜகவிற்குப் பிரச்சாரம் செய்யும் வகையிலும் வீடியோ வெளியிட்டு உள்ளார். 

இவற்றிலிருந்து பரவக் கூடிய வீடியோவில் இருப்பவர் பாகிஸ்தானைச் சேர்ந்தவர் அல்ல என்பதையும் உத்திரப் பிரதேசத்தைச் சேர்ந்த நடிகர் என்பதையும் அறிய முடிகிறது.

முடிவு:

மோடியின் ஆட்சிக்கு ஆதரவு அளியுங்கள் என்று பாகிஸ்தானைச் சேர்ந்த முஸ்லிம் பேசுவதாகப் பரவும் வீடியோ குறித்த தகவல் தவறானது. அவர் இந்தியாவைச் சேர்ந்த ஒரு நடிகர். பாஜகவிற்குப் பிரச்சாரம் செய்யும் வகையிலான வீடியோக்கள் அவரது பக்கத்தில் உள்ளது.

Please complete the required fields.
Back to top button
loader