This article is from Sep 07, 2019

ஆச்சி மசாலாவிற்கு கேரளாவில் தடை விதிக்கப்பட்டதா ? உண்மை என்ன ?

பரவிய செய்தி

பூச்சிக்கொல்லி மருந்து இருப்பதால் ஆச்சி மிளகாய் பொடிக்கு கேரளா அரசு தடை.

மதிப்பீடு

விளக்கம்

பிரபல மசாலா தயாரிப்பு நிறுவனமான ஆச்சி மசாலாவின் தயாரிப்புகள் தமிழகம் மட்டுன்றி பிற மாநிலங்களிலும், வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டு விற்பனை செய்து வருகின்றனர். இந்நிலையில், கேரளாவில் ஆச்சி மசாலா நிறுவனத்தின் மிளகாய் பொடியில் பூச்சி மருந்துகள் அதிகம் இருப்பதாக தமிழ் செய்தித்தாளில் வெளியான தகவலால் சமூக வலைதளங்களில் அந்நிறுவனத்தின் மீது விமர்சனங்கள் எழுந்தன.

” கேரளாவின் திருச்சூரில் உள்ள நிறுவனத்தின் மசாலாப் பொருட்களை உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் கைப்பற்றி கொச்சியில் உள்ள உணவுப் பொருள் பரிசோதனை கூடத்திற்கு அனுப்பி வைத்தனர். அங்கு நடத்திய சோதனையில் ஆச்சி மசாலா நிறுவனத்தின் மிளகாய் பொடியில் பூச்சிக்கொல்லி மருந்துகளான இட்டியோன், புரபேனோபோஸ் ஆகியவற்றின் அளவு அதிகம் இருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டது. அவர்கள் அளித்த அறிக்கையின் அடிப்படையில் இந்த மிளகாய் பொடிக்கு தடை விதித்து கேரளா உணவுப் பாதுகாப்புத்துறை ஆணையர் உத்தரவு பிறப்பித்துள்ளார் ” என தினகரன் செய்தித்தாளில் வெளியாகி இருந்தது.

செய்தித்தாள் மட்டுமின்றி தினகரன் நிறுவனத்தின் இணைய செய்தியிலும் வெளியாகி இருக்கிறது. ஆனால், அந்த செய்தி இணையதளத்தில் இருந்து நீக்கப்பட்டு இருக்கிறது. ஆச்சி மசாலா நிறுவனத்தின் மிளகாய் பொடிக்கு கேரளாவில் தடை என செய்தித்தாளில் வெளியான தகவல் இணைதளங்கள், சமூக ஊடகங்களில் மீம்ஸ் வடிவில் வேகமாய் பரவியது.


பாஜக கட்சியின் தேசிய செயலாளர் ஹெச்.ராஜா அவர்களின் ட்விட்டர் பக்கத்தில், ” செக்கில் ஆட்டிய எண்ணெயும் வீட்டில் தயாரிக்கும் மசாலாப் பொடியுமே ஆரோக்கியமானது. எனவே இதுபோன்ற பொருட்களை தவிர்ப்பது நல்லது ” என ஆச்சி மசாலா செய்தி குறித்த செய்தித்தாளின் புகைப்படமும் பகிரப்பட்டு உள்ளது.

ஆனால், ஆச்சி மசாலா நிறுவனத்தின் தரப்பில் தினகரன் செய்திக்கு எதிராக மறுப்பு தெரிவித்து அறிக்கை வெளியிடப்பட்டது. செப்டம்பர் 6-ம் தேதி வெளியான மறுப்பு தெரிவிக்கும் அறிக்கையில், ” தற்பொழுது நாளிதழ் ஒன்றில் நமது ஆச்சி நிறுவனத்தைப் பற்றிய வதந்தி ஒன்று வேகமாக பரவி வருகிறது. இது முழுக்க முழுக்க தவறான தகவலாகும். இதனை யாரும் நம்ப வேண்டாம். இதில், சம்பந்தப்பட்டிருக்கும் அனைத்து அதிகாரிகள் மீதும் கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும் ” எனக் குறிப்பிட்டு இருந்தனர்.

மேலும், ஆச்சி மசாலா நிறுவனத்தின் தலைவர் பத்மசிங் ஐசக் அவர்களின் முகநூல் பக்கத்தில், ” ஆச்சி மசாலா என்றாலே தரத்திற்கு உத்தரவாதம், ஆச்சி தயாரிப்புகள் குறித்து வெளியான செய்திக்கு மறுப்பு ” என மறுப்பு செய்தி வெளியாகி இருக்கிறது.

கேரளா உணவு பாதுகாப்பு :

கேரளாவில் ஆச்சி மசாலா நிறுவனத்தின் மிளகாய் பொடிகள் மீது சோதனைகள் நடத்தப்பட்டதா என்பதை அறிந்து கொள்ள சம்பந்தப்பட்ட திருச்சூர் உணவு பாதுகாப்புத்துறையின் அசிஸ்டென்ட் கமிஷ்னர் சி.ஜெயஸ்ரீ அவர்களிடம் யூடர்ன் தரப்பில் இருந்து தொடர்பு கொண்டு ஆச்சி மசாலா பொருட்களுக்கு கேரளாவில் தடை விதிக்கப்பட்டுள்ளதா எனக் கேட்டு இருந்தோம்.

அதற்கு அளித்த பதிலில், ” இல்லை, ஆச்சி மசாலாவில் அனைத்து தயாரிப்புகளுக்கும் தடை விதிக்கவில்லை. ஜூன் மாதம் 4-ம் தேதி தயாரிக்கப்பட்ட பேட்ஜ் எண் B-FDS கொண்ட மிளகாய் பொடி தயாரிப்புகளின் மாதிரிகள் உணவு பாதுகாப்பு சோதனைகளில் ரிஜெக்ட் செய்யப்பட்டு உள்ளது. மாதிரிகளில் நிர்ணயிக்கப்பட்ட அளவை விட அதிகமாக பூச்சிக்கொல்லி மருந்து(Pesticide) இருப்பது சோதனையில் தெரிய வந்துள்ளது. அதன் பின்னர் அந்த குறிப்பிட்ட பேட்ஜ் எண் கொண்ட மிளகாய் பொடிகளை பயன்படுத்த வேண்டாம் எனக் கூறப்பட்டுள்ளது. முதல் சோதனையில் பூச்சிக்கொல்லி மருந்து குறித்து வெளியானதால் குறிப்பிட்ட பேட்ஜ் எண் கொண்ட தயாரிப்புக்கு மட்டும் தடை விதிக்கப்பட்டுள்ளது. அதே மாதிரிகளில் மற்றொரு சோதனையும் எடுக்கப்பட்டுள்ளது. அதன் முடிவிற்காக தான் நாங்களும் காத்திருக்கிறோம் ” எனக் கூறியுள்ளார்.

ஆச்சி மசாலா நிறுவனமும் கேரள உணவுப் பாதுகாப்புத் துறையின் இரண்டாம் முறையான(மற்றொரு) சோதனையை அடிப்படையாக கொண்டே தங்களின் தயாரிப்பில் பூச்சிக்கொல்லி மருந்துகள் இல்லை, தங்களின் தயாரிப்புகளின் மீது வதந்திகளை பரப்பி வருகின்றனர் என அறிக்கை வெளியிட்டு இருக்கக்கூடும் என்று அசிஸ்டென்ட் கமிஷ்னர் சி.ஜெயஸ்ரீ கூறியுள்ளார்.

ஆனால், தன் நிறுவனத்தின் தயாரிப்புகள் உணவு பாதுகாப்புத்துறையால் சோதனையிடப்பட்டு குறிப்பிட்ட பேட்ஜ் எண் கொண்ட மிளகாய் பொடி தயாரிப்புகளில் பூச்சிக்கொல்லி மருந்து இருப்பதாக சோதனை முடிவுகள் வெளியானதை மட்டும் அந்நிறுவனம் கூறாமல் இருப்பதேன் என்ற கேள்விகள் இங்குள்ளன.

முடிவு :

ஆச்சி மசாலா விவகாரம் சமூக ஊடகங்களில் சர்ச்சையாகிக் கொண்டிருக்கும் இவ்வேளையில் அந்நிறுவனம் தினகரன் செய்தியில் வெளியான தகவலுக்கு மறுப்பு செய்தி வெளியிட்டு வருகிறது. யூடர்ன் தரப்பில் ஆச்சி மசாலா நிறுவனத்தின் பல எண்களுக்கு தொடர்பு கொண்டோம், ஆனால் பதில் இல்லை.

இதன் உண்மைத்தன்மை அறிந்து கொள்ள நாம் மேற்கொண்ட முயற்சியில், திருச்சூர் உணவு பாதுகாப்புத்துறையின் அசிஸ்டென்ட் கமிஷ்னர் ஜூன் மாத தயாரிப்பில் குறிப்பிட்ட பேட்ஜ் எண் கொண்ட ஆச்சி மசாலாவின் மிளகாய் பொடிகள் உணவு பாதுகாப்பு சோதனையில் ரிஜெக்ட் செய்யப்பட்டுள்ளதாக உறுதிப்படுத்தி உள்ளார்.

கேரளாவில் ஆச்சி மசாலாவில் அனைத்து தயாரிப்புகளுக்கு தடை விதிக்கப்படவில்லை. ஜூன் மாதத்தில் தயாரிக்கப்பட்ட குறிப்பிட்ட பேட்ஜ் எண் கொண்ட மிளகாய் பொடி தயாரிப்புகளில் நிர்ணயிக்கப்பட்ட அளவை விட அதிகம் பூச்சிக்கொல்லி மருந்து இருப்பதாக சோதனை முடிவில் தெரிவித்து இருக்கின்றனர். மேலும், அதே மாதிரிகளில் மற்றொரு சோதனையின் முடிவிற்காக உணவுப் பாதுகாப்பு அதிகாரிகளும் காத்திருப்பதாக கூறியுள்ளனர்.

Please complete the required fields.




Back to top button
loader