ஒடிசா இரயில் விபத்து : ஜூனியர் என்ஜினியர் அமீர்கான் தலைமறைவு எனத் தவறான செய்தியை வெளியிட்ட ஊடகங்கள் !

பரவிய செய்தி
ஒடிசா கோர ரயில் விபத்து தொடர்பான சிபிஐ விசாரணை வளையத்தில் இருந்த ஜூனியர் என்ஜினியர் அமிர்கான் என்பவர் குடும்பத்துடன் தலைமறைவு!
மதிப்பீடு
விளக்கம்
ஜூன் 2ம் தேதி ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டம், பஹானாகா பஜார் இரயில் நிலையம் அருகில் 3 ரயில்கள் விபத்துக்குள்ளானது. இதில், சுமார் 300 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் படுகாயம் அடைந்தனர்.
இந்த சம்பவம் குறித்து சிபிஐ விசாரித்து வரும் நிலையில் அமீர்கான் எனும் இளநிலை பொறியாளர் (Junior Engineer) குடும்பத்துடன் தலைமறைவாகிவிட்டார் என்றும், அவரது வீட்டிற்கு சிபிஐ அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர் என்றும் சன் நியூஸ், தினகரன், ABP நாடு, நியூஸ் 18 தமிழ்நாடு, மீடியான், தினசேவல் போன்ற ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.
சமீபத்தில் வந்தே பாரத் ரயில் மீது தாக்குதல் நடத்தியுள்ளார்கள் சமூக விரோதிகள்.
ஒரிசா ரயில் விபத்து விசாரணையின் போது துணைப் பொறியாளர் அமீர்கான் குடும்பத்துடன் தலைமறைவாகியுள்ளார். இஸ்லாமிய அடிப்படைவாத சக்திகள் இந்த சதியில் மிகப்பெரிய அளவில் அந்நிய நாடுகள் துணையோடு ரயில் பெட்டிகளை… pic.twitter.com/RXzPUz5pAC
— Hindu Munnani (@hindumunnani_tn) June 20, 2023
இதே தகவலை பாஜகவைச் சேர்ந்த மீஞ்சூர் சலீம், வலதுசாரி சரவண பிரசாத், இந்து முன்னணி ஆகியோர் தங்களது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளனர்.
உண்மை என்ன ?
ஒடிசாவில் இரயில் விபத்து நடந்த நிலையத்தின் இளநிலை உதவியாளர் அமீர்கான் குடும்பத்துடன் தலைமறைவு என வெளியான செய்திகள் மற்றும் சமூக வலைத்தள பதிவுகள் குறித்துத் தேடினோம்.
தமிழில் மட்டுமின்றி ஆங்கில ஊடகங்களான IndiaToday, Business Standard, Zee News, Wionews, Swarajya போன்றவற்றிலும் செய்திகள் வெளியாகியுள்ளது. இது குறித்து மேற்கொண்டு தேடியதில், தென் கிழக்கு இரயில்வே நிர்வாகம் அளித்த விளக்க வீடியோ ஒன்று ‘ஆல் இந்தியா ரேடியோ நியூஸ்’ டிவிட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்று கிடைத்தது.
CPRO South Eastern Railway (Balasore Train accident) rejects Media reports that one of staff is missing, absconding; clarifies all staff are part of CBI and CRS enquiry. None of the staff are missing or absconding. pic.twitter.com/ptJcH2S1NC
— All India Radio News (@airnewsalerts) June 20, 2023
அதில், “CPRO தென்கிழக்கு இரயில்வே (பாலாசோர் ரயில் விபத்து) ஊழியர்களில் ஒருவர் தலைமறைவாக இருப்பதாக ஊடகங்களில் வெளியான செய்தி உண்மை அல்ல. அனைத்து ஊழியர்களும் சிபிஐ மற்றும் சிஆர்எஸ் விசாரணைக்கு உட்பட்டுள்ளனர். ஊழியர்கள் யாரும் தலைமறைவாகவில்லை” எனக் கூறப்பட்டுள்ளது.
#Clearification | “ஒடிசா பாலாஷோரில் ஏற்பட்ட ரயில் விபத்து தொடர்பாக விசாரணைக்கு அழைக்கப்பட்ட ஊழியர் தலைமறைவு என ஊடகங்களில் வெளியான செய்திகள் உண்மையில்லை”
– தென்கிழக்கு ரயில்வே நிர்வாகம் மறுப்பு தெரிவித்து விளக்கம்!#SunNews | #BalasoreTrainAccident | #Odisha pic.twitter.com/uTenoie60K
— Sun News (@sunnewstamil) June 20, 2023
இந்த செய்தி வெளியானதும் சன் நியூஸ் தாங்கள் வெளியிட்ட நியூஸ் கார்டுக்கு மறுப்பு தெரிவித்து இரயில்வே அதிகாரி வெளியிட்ட விளக்க வீடியோவினை பதிவிட்டுள்ளது. இதே போன்று ஆங்கில ஊடகங்கள் சிலவும் அந்த தவறான செய்தியை நீக்கியுள்ளன. ஆனால், ஊடகங்கள் வெளியிட்ட தவறான செய்தியைப் பலரும் உண்மை எனப் பரப்பி வருகின்றனர்.
மேலும் படிக்க : ஒடிசாவில் விபத்து நடந்த இரயில் நிலையத்தின் ஸ்டேஷன் மாஸ்டர் பெயர் முகமது ஷெரீப் எனப் பரப்பப்படும் வதந்தி !
இதற்கு முன்னரும் இதே போன்று ஒடிசா இரயில் விபத்துடன் இஸ்லாமியர்களைத் தொடர்புப்படுத்திப் பல வதந்திகள் பரப்பப்பட்டன. அவற்றின் உண்மைத் தன்மை குறித்தும் யூடர்னில் கட்டுரைகள் வெளியிடப்பட்டுள்ளது.
மேலும் படிக்க : ஒடிசாவில் ரயில் விபத்து நடந்த இடத்திற்கு அருகே இருந்த இஸ்கான் கோவிலை மசூதி என வதந்தி பரப்பிய வலதுசாரிகள் !
முடிவு :
நம் தேடலில், ஒடிசா ரயில் விபத்து தொடர்பான சிபிஐ விசாரணை வளையத்திலிருந்த இளநிலை பொறியாளர் அமீர்கான் தலைமறைவு என ஊடகங்கள் வெளியிட்ட செய்திகள் உண்மை அல்ல. அனைத்து ஊழியர்களும் விசாரணைக்கு ஒத்துழைத்து வருவதாகத் தென்கிழக்கு இரயில்வே விளக்கம் அளித்துள்ளது.