ஆசிர்வாத் கோதுமை மாவில் பிளாஸ்டிக் கலக்கப்பட்டதாகப் பரவும் வதந்தி !

பரவிய செய்தி
ரப்பர் போன்ற பொருள் மாவில் இருப்பதை வீடியோவில் காணலாம். ஆனால் 0% மைதா & 100% ஆட்டா உள்ளதாக நிறுவனம் கூறுகிறது. இது நமக்கும் நம் குழந்தைகளுக்கும் மிகவும் தீங்கு விளைவிக்கும்.
மதிப்பீடு
விளக்கம்
ஆசிர்வாத் கோதுமை மாவில் ரப்பர் கலந்திருப்பதாகக் கூறி வீடியோ ஒன்று சமீபத்தில் சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது. மேலும், பெண் ஒருவர் ஆசிர்வாத் மாவை பிசைந்து, பின்பு ரப்பர் போல மாவை இழுப்பதையும், மாவில் ரப்பர் இருப்பதாக ஹிந்தியில் கூறுவதையும் அந்த வீடியோவில் பார்க்க முடிகிறது.
@ITCCorpCom
As we can see that in video ,that rubber like substance is present in Flour,while company is complaining that 0% Maida & 100% AATA,This is very injurious for Us & Our children pic.twitter.com/xzDdLjuDuy— Abdul (@alok6467) August 24, 2023
இதேபோன்று மற்றொரு வீடியோவில் பெண் ஒருவர், ஆசிர்வாத் மாவை பிசைந்து, பின்பு குழாய் தண்ணீரில் அந்த மாவை கழுவுவது போன்றும், ஆனால் அந்த மாவு கரையாமல் இருப்பதை தெலுங்கில் விவரிப்பதையும் பார்க்க முடிந்தது.
ஆனால் இந்த வீடியோ கடந்த 2018-இல் இருந்தே சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வருகிறது.
உண்மை என்ன ?
பரவி வரும் செய்திகள் குறித்து தேடியதில், ஆசிர்வாத் குழுமத்தின் அதிகாரப்பூர்வ நிறுவனமான ITC Cares, Abdul என்பவரது வீடியோவைக் குறிப்பிட்டு தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் அதற்கு பதில் அளித்திருந்தது.
Some malicious videos are circulating on social media suggesting that Aashirvaad Atta contains plastic / rubber. This is blatantly false. It is a mischievous attempt to destroy your trust in us. What is being called plastic/rubber is in fact wheat protein, which is found (1/5)
— ITC Cares (@ITC_Cares) August 25, 2023
அதில், “ஆசிர்வாத் அட்டாவில் பிளாஸ்டிக்/ரப்பர் இருப்பதாக சமூக ஊடகங்களில் சில வீடியோக்கள் பரவி வருவதாக சிலர் குறிப்பிட்டுள்ளனர். இது அப்பட்டமான பொய். எங்கள் மீது நீங்கள் வைத்திருக்கும் நம்பிக்கையை அழிக்கும் தவறான முயற்சி இது. பிளாஸ்டிக்/ரப்பர் என்று அழைக்கப்படுவது உண்மையில் கோதுமையின் புரதம்தான்.” என்று குறிப்பிட்டுள்ளது.
மேலும் அதில் தன்னுடைய விளக்கங்களை ஐந்து பகுதிகளாக பதிவிட்டுள்ளதையும் காண முடிந்தது.
இந்த கோதுமை புரதம் குளூடன் (Gluten) என்று அழைக்கப்படுகிறது, இது கோதுமை மாவை ஒன்றாக இணைப்பதோடு, பிசையும்போது மாவுக்கு நெகிழ்ச்சியையும் அளிக்கிறது. உணவுப் பாதுகாப்பு மற்றும் தரநிலைச் சட்டம் 2006-இன் கீழ், கட்டாயப்படுத்தப்பட்ட தரநிலைகள், உலர் நிறை அடிப்படையில் கோதுமை மாவில் குறைந்தபட்சம் 6% குளூடன் (Gluten) இருக்க வேண்டும்.
மேலும் அந்தப் பதிவில், ஆசிர்வாத் கோதுமை மாவு முற்றிலும் பாதுகாப்பானது என்றும், அதில் கலப்படம் எதுவும் இல்லை என்றும் நுகர்வோருக்கு உறுதியளித்துள்ளனர். சட்டத்தின் படி, மிகவும் கவனமாக தயாரிக்கப்படுவதற்கு அனைத்து முயற்சிகளையும் எடுத்து வருவதாகவும் அதில் குறிப்பிட்டுள்ளது.
” இதுபோன்ற தவறான வீடியோக்கள்/செய்திகளைக் காணும் பொது மக்கள், தயவுசெய்து itccares@itc.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புவதன் மூலமோ அல்லது எங்கள் கட்டணமில்லா எண்ணான 1800 425 444 444 என்ற எண்ணில் தொடர்பு கொள்வதன் மூலமோ அதை எங்கள் கவனத்திற்குக் கொண்டு வருமாறு கேட்டுக்கொள்கிறோம். ஆசிர்வாத் கோதுமை மாவைப் பற்றி இதுபோன்ற தவறான செய்திகளைப் பரப்பும் எந்தவொரு பதிவு, படம் அல்லது வீடியோக்களை பகிர்வோர் அல்லது பரப்புவோர் எவர் மீதும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் ” என்றும் அதில் விளக்கியுள்ளது.
மேலும் இவ்வாறு பரப்பப்படுவது பற்றியும், குளூடன் (Gluten) பற்றிய முக்கியத்துவம் பற்றியும், இந்திய புரத உணவுகள் மற்றும் ஊட்டச்சத்து மேம்பாட்டு சங்கத்தின் நிர்வாக இயக்குநர் டாக்டர். ஜகதீஷ் பை பேசியுள்ள வீடியோவைக் கண்டோம். அதில், “இந்த கூற்று முற்றிலும் தவறானது மற்றும் சமூக வலைதளங்களில் பரவி வரும் இந்த வீடியோக்கள் தவறான தகவல்களை பரப்புகின்றன.” என்று அவர் தெளிவாக விளக்கியுள்ளார்.
இதே போன்று கோதுமை மாவில் பிளாஸ்டிக் இருப்பது குறித்து FSSAI தன்னுடைய பக்கத்தில் விளக்கம் அளித்துள்ளது. அதில் “கோதுமையில் இரண்டு விதமான புரதங்கள் உள்ளன. ஒன்று குளூடனின் (Glutenin). மற்றொன்று கிளாடின் (Gliadin). குளூடனின் பசை போன்ற நெகிழ்வுத் தன்மையைக் கொடுக்கக் கூடியது. கிளாடின் மாவை பிசைவதற்கு (Dough) தகுந்த பக்குவத்தை அளிக்கக் கூடியது. இதையே பிளாஸ்டிக் என்று தவறாகக் கூறப்படுகிறது” என்று அதில் குறிப்பிட்டுள்ளது.
முடிவு:
நம் தேடலில், கோதுமையில் பிளாஸ்டிக் இருப்பதாகப் பரவி வரும் தகவல்கள் தவறானவை என்பதையும், கோதுமையில் உள்ள ‘குளூடனின்’ (Glutenin) என்ற புரதத்தின் காரணமாகவே கோதுமை மாவு, பசை போன்ற நெகிழ்வுத் தன்மையைக் கொண்டுள்ளது என்பதையும் அறிய முடிகிறது.