ஈரோடு தேர்தல் முடிந்தவுடன் ஆவின் தயிர் விலையை உயர்த்தியதாக அதிமுகவினர் பரப்பும் பழைய செய்தி !

பரவிய செய்தி
1 லிட்டர் தயிருக்கு 6 ரூபாய் ஏற்றம் – இன்னும் முட்டு கொடுப்பவர்களை காணோம். உங்களை யார் தயிர் வாங்க சொல்வது என உருட்ட ஒரு கூட்டம் வரும்
மதிப்பீடு
விளக்கம்
ஆவின் நிறுவனத்தின் தயிர் விலை லிட்டருக்கு 6 ரூபாய் உயர்த்தப்பட்டு உள்ளதாகவும், ஈரோடு இடைத்தேர்தலுக்கு பிறகு மக்களுக்கு அளிக்கப்படும் பரிசு என்றும் தந்தி டிவி நியூஸ் கார்டு ஒன்றை அதிமுகவைச் சேர்ந்தவர்கள் சமூக வலைதளங்களில் பரப்பி வருகின்றனர்.
சமூக வலைதளங்களில் பரப்பப்படும் தந்தி டிவி நியூஸ் கார்டில், ” உயர்கிறது ஆவின் பொருட்களின் விலை. தமிழக அரசின் ஆவின் பொருட்களின் விலை இன்று முதல் உயர்வு. நெய், தயிர், பாதாம் பவுடர், குல்பி உள்ளிட்ட ஆவின் பொருட்களின் விலை இன்று முதல் உயர்வு. 1 லிட்டர் ஆவின் நெய் ரூ515ல் இருந்து ரூ535 ஆக உயர்வு : அரை லிட்டர் தயிர் ரூ27ல் லிருந்து 30 ஆக உயர்வு ” என வெளியாகி இருக்கிறது.
1 லிட்டர் தயிருக்கு 6 ரூபாய் ஏற்றம் – இன்னும் முட்டு கொடுப்பவர்களை காணோம். உங்களை யார் தயிர் வாங்க சொல்வது என உருட்ட ஒரு கூட்டம் வரும். 🤦 pic.twitter.com/YUMFBrHr5N
— Real Pix (@RealPix10) March 4, 2023
உண்மை என்ன ?
பரப்பப்படும் தந்தி டிவி நியூஸ் கார்டின் கீழே, ” 04.03.2022 “ என்ற தேதி இடம்பெற்று இருக்கிறது. இதை வைத்து தந்தி டிவி முகநூல் பக்கத்தில் தேடுகையில், கடந்த ஆண்டு ஆவின் விலை உயர்வு குறித்து தந்தி டிவி வெளியிட்ட நியூஸ் கார்டின் பதிவு கிடைத்தது.
இதன் பிறகு கடந்த ஆண்டு பாக்கெட்களில் அடைக்கப்பட்டு விற்பனை செய்யப்படும் பால் சார்ந்த பொருட்களுக்கு ஜிஎஸ்டி 5% விதிக்கப்பட்ட பிறகு 2022 ஜூலை 21-ம் தேதி ஆவினின் திருத்தி அமைக்கப்பட்ட விலைப் பட்டியலில், ஒரு கிலோ தயிர்(ப்ரீமியம்) 120 ரூபாய், லெஸ்சி 30 ரூபாய், மோர் 12 ரூபாய்க்கு விற்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. அதுகுறித்தும் நாம் கட்டுரை வெளியிட்டு இருந்தோம்.
மேலும் படிக்க : விலையேற்றம், ஜி.எஸ்.டி பற்றி நிர்மலா சீதாராமன் பேசியது சரியா ?
இதைத் தவிர்த்து ஆவின் நிறுவனத்தின் தயிர் விலை உயர்ந்ததாக எந்த தகவலும் இல்லை. ஆவின் நிறுவனத்தின் இணையதளத்திலும் பழைய விலையே உள்ளது.
மேலும் படிக்க : ஈரோடு மாவட்டத்திற்கு மட்டும் ஆவின் பால் விலை 3 ரூபாய் குறைக்கப்பட்டதா ?
இதற்கு முன்பாக, ஈரோடு இடைத்தேர்தலின் போது ஈரோடு மாவட்டத்திற்கு மட்டும் ஆவின் பால் விலை ரூ.3 குறைக்கப்பட்டதாக தவறான தகவல்கள் பரப்பப்பட்டது. அதுகுறித்தும் கட்டுரை வெளியிட்டு இருக்கிறோம்.
முடிவு :
நம் தேடலில், ஈரோடு தேர்தலுக்கு பிறகு ஆவின் நிறுவனம் 1 லிட்டர் தயிருக்கு 6 ரூபாய் விலை ஏற்றியதாகப் பரப்பப்படும் செய்தி தவறானது. அந்த செய்தி கடந்த ஆண்டு மார்ச் மாதம் வெளியானது. அதை தற்போது நிகழ்ந்தது போல் தவறாக பரப்பி வருகின்றனர் என்பதை அறிய முடிகிறது.
YouTurn உண்மையை சொல்லும் பணி முக்கியம் என நினைக்கின்றீர்களா? நன்கொடை அளித்து நீங்களே மக்கள் பத்திரிகையாக இயங்க வழி செய்யுங்கள்.