ஆவின் நெய் விலை உயர்வு பிராமணர்களையே பாதிக்கும் என செந்தில் வேல் கூறியதாகப் பரவும் வதந்தி !

பரவிய செய்தி
நெய் வெண்ணெய் அவாள் சாப்பிடும் உணவு வகை ஆவின் விலை உயர்வு பணக்கார பிராமணரையே பாதிக்கும். ஏழைகளுக்கு இதனால் பாதிப்பில்லை..
மதிப்பீடு
விளக்கம்
‘ஆவின் நெய்’ விலை லிட்டருக்கு ரூ.70ம், அரை லிட்டருக்கு ரூ.50ம் உயர்த்தப்படுவதாக ஆவின் நிர்வாகம் அறிவித்தது. இந்த அறிவிப்பு நேற்று முதல் அமலுக்கு வந்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் “நெய், வெண்ணெய் என்பது பிராமணர்கள் சாப்பிடும் உணவு வகை. ஆவின் விலை உயர்வு பணக்கார பிராமணர்களையேப் பாதிக்கும். எனவே ஏழைகளுக்கு இதனால் பாதிப்பில்லை” என்பது போல ஊடகவியலாளர் செந்தில்வேல் கூறியதாகக் கூறி அவருடைய முகநூல் பதிவு ஒன்று சமூக ஊடகங்களில் தற்போது வலதுசாரிகளால் வைரலாகப் பரப்பப்பட்டு வருகிறது.
உண்மை என்ன ?
பரவி வரும் முகநூல் பதிவு குறித்து அவருடைய அதிகாரப்பூர்வ முகநூல் பக்கத்தில் ஆய்வு செய்ததில், அப்படி எந்த பதிவும் அவர் பதிவிடவில்லை என்பதை அறிய முடிந்தது. மேலும் நேற்று (செப் 14) அவர் பதிவிட்டிருந்த மூன்று பதிவுகளுமே அம்பேத்கர் குறித்து தவறாக பேசிய விஷ்வ ஹிந்து பரிசத் அமைப்பின் முன்னாள் தலைவரும், பேச்சாளருமான ஆர்பிவிஎஸ் மணியன் கைது செய்யப்பட்டது குறித்தே அவருடைய பக்கத்தில் பதிவிடப்பட்டிருந்தன.
எனவே யூடர்ன் தரப்பிலிருந்து அவரைத் தொடர்பு கொண்டு பேசுகையில், “அப்படி எந்த பதிவும் தான் பதிவிடவில்லை. என் பெயரில் தவறாக பரப்பப்படுகின்றன” என்று உறுதிப்படுத்தினார்.
இதன் மூலம் இது ஒரு எடிட் செய்யப்பட போலி பதிவு என்பதை அறிந்து கொள்ள முடிகிறது. பலரும் இதன் உண்மைத் தன்மையை அறியாமல் தங்களுடைய சமூக ஊடகப் பக்கங்களில் தவறாக பதிவிட்டு வருகின்றனர்.
மேலும் படிக்க: பிக் பாஸ் வாக்கை மறுகூட்டல் செய்ய சட்டம் வேண்டும் என செந்தில்வேல் கூறியதாகப் பரவும் போலி ட்வீட் !
இதற்கு முன்பும் ஊடகவியலாளர் செந்தில்வேல் பெயரில் பல போலிப் பதிவுகள் சமூக ஊடகங்களில் பரப்பப்பட்டன. அதனையும் ஆய்வு செய்து நம் பக்கத்தில் கட்டுரையாக வெளியிட்டிருக்கிறோம்.
மேலும் படிக்க: குஜராத்தில் பாஜக வென்றால் தற்கொலை செய்வேன் என செந்தில்வேல் கூறியதாக பாஜகவினர் பரப்பும் போலி ட்வீட்
மேலும் படிக்க: உதயநிதி வடிவத்தில் பெரியாரை பார்க்கிறேன் எனச் செந்தில்வேல் கூறியதாகப் பரவும் போலி ட்வீட் !
முடிவு:
நம் தேடலில், ஊடகவியலாளர் செந்தில்வேல் ஆவின் நெய் பிராமணர்கள் மட்டுமே உண்ணும் உணவு என்று பதிவிட்டதாகக் கூறி பரவி வரும் முகநூல் பதிவு போலியானது என்பதை உறுதிப்படுத்த முடிகிறது.