ஆவின் பால் லிட்டருக்கு ரூ.5 உயர்த்தியதாகத் தவறான தலைப்பிட்டு செய்தி வெளியிட்ட தினமலர் !

பரவிய செய்தி
பால் விலை 5 ரூபாய் உயர்ந்தது. தகுதியுள்ள மகளிருக்கு மட்டும் 1000 உரிமை தொகை. தகுதி இல்லாதவர்களுக்கும் சேர்த்து 5 ரூபாய் பால் விலை உயர்வு. நீங்க மாஸ் தலைவரே மு.க.ஸ்டாலின்
மதிப்பீடு
விளக்கம்
ஆவின் பால் விலை லிட்டருக்கு 5 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளதாக பாஜகவினரால் சமூக வலைத்தளங்களில் ஓர் தகவல் பரப்பப்பட்டு வருகிறது. மேலும் இதனை மகளிர் உரிமை தொகை திட்டத்துடன் தொடர்புப்படுத்தி ஒரு கோடி பேருக்கு 1000 ரூபாய் அளித்து விட்டு 8 கோடி பேருக்கு 5 ரூபாய் அதிகரித்துள்ளனர் எனக் குறிப்பிட்டு மீம்ஸினை பரப்பி வருகின்றனர்.
நல்ல தீட்டம் pic.twitter.com/suWHtJlosV
— 🌷மினி மோகன்🌷 (@Mini52614198) September 25, 2023
தகுதியுள்ள மகளிருக்கு மட்டும் 1000 உரிமைத் தொகை…
தகுதி இல்லாதவர்களுக்கும் சேர்த்து 5 ரூபாய் பால் விலை உயர்வு #தளபதி…😎#இன்னமும்_எவ்வளவு_தான்டா_உயர்த்த_போரிங்க pic.twitter.com/fdo0T3qTHw
— Sivashankar (@ShivaMmv) September 25, 2023
இதுகுறித்து தினமலர் இணையதளத்தில் ‘பால் விலையை லிட்டருக்கு ரூ.5 உயர்த்திய ஆவின்’ என்ற தலைப்பில் செய்தி வெளியிட்டுள்ளதாகவும் சில படங்கள் பரப்பப்படுகிறது.
உண்மை என்ன ?
ஆவின் பால் விலை ரூ.5 உயர்த்தப்பட்டுள்ளதாகப் பரவும் செய்தி குறித்து தேடுகையில், கடந்த (செப்) 22ம் தேதி தினத் தந்தி இணையதளத்தில் வெளியான செய்தி ஒன்று கிடைக்கப்பெற்றது.
அதன் முதல் வரியிலேயே ‘சேலம் ஆவினில் புதிய வகை பால் பாக்கெட் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் அச்செய்தியில் ‘டிலைட் என்ற செறிவூட்டப்பட்ட பால் (வைட்டமின் ஏ மற்றும் டி) 500 மில்லி புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது’ என்றுள்ளது.
அது மட்டுமின்றி நுகர்வோர்களின் வேண்டுகோளுக்கு இணங்க ரூ.11-க்கு விற்கப்பட்ட 250 மில்லி எடை கொண்ட பாலின் அளவு 50 மி.லி. குறைத்து 200 மில்லி எடை கொண்ட பால் பாக்கெட் ரூ.10-க்கு விற்பனை செய்யப்பட்டது என ஆவின் பொது மேலாளர் ராஜசேகர் எஸ்.கரிசெட்டி தெரிவித்ததும் அச்செய்தியில் உள்ளது.
ஆனால், அரை லிட்டர் மற்றும் ஒரு லிட்டர் பால் விலையில் எந்த மாற்றமும் இல்லை என்றும் அதில் கூறப்பட்டுள்ளது. சேலம் பகுதியில் மட்டும் 200 மில்லி பால் பாக்கெட் ரூ.10க்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி ஒரு லிட்டர் ரூ.50 என கணக்கிடப்பட்டு பால் விலை உயர்வு என பொத்தாம்பொதுவாக செய்தி வெளியிட்டுள்ளது.
தினமலர் வெளியிட்ட செய்தியில் ஒட்டு மொத்தமாக ஆவின் பால் உயர்த்தப்பட்டுள்ளது போல் தவறாகப் பொருள் கொள்ளும் வகையில் தலைப்பிடப்பட்டுள்ளது. அதனைக் கொண்டு தமிழ்நாட்டில் பால் விலை லிட்டருக்கு ரூ.5 உயர்த்தப்பட்டுள்ளதாக பாஜக ஆதரவாளர்கள் சமூக வலைத்தளங்களில் தவறான செய்தியைப் பரப்பி வருகின்றனர்.
மேலும் படிக்க : ஈரோடு மாவட்டத்திற்கு மட்டும் ஆவின் பால் விலை 3 ரூபாய் குறைக்கப்பட்டதா ?
இதற்கு முன்பும், ஆவின் குறித்துப் பரப்பப்பட்ட போலி செய்திகள் பற்றிய உண்மைகள் யூடர்னில் கட்டுரையாக வெளியிடப்பட்டுள்ளது.
மேலும் படிக்க : திமுக ஆட்சியில் ஆவின் பொருட்களில் ஹலால் சான்றிதழ் கொண்டு வந்ததாக வதந்தி பரப்பும் பாஜகவினர்
முடிவு :
நம் தேடலில், ஆவின் பால் லிட்டருக்கு ரூ.5 உயர்த்தப்பட்டுள்ளதாகப் பரவும் செய்தி உண்மை அல்ல. சேலம் பகுதியில் மட்டும் 200 மில்லி பால் பாக்கெட் ரூ.10க்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி ஒரு லிட்டர் ரூ.50 எனக் கணக்கிட்டு விலை உயர்வு என்று பரப்புகின்றனர். அரை லிட்டர் மற்றும் ஒரு லிட்டர் பால் பாக்கெட் விலைகளில் எந்த மாற்றமும் இல்லை என்பதை அறிய முடிகிறது.