அப்துல் கலாமிற்கு சாதாரண ரயில், ராம்நாத் கோவிந்துக்கு சிறப்பு ரயில் பயணமா ?

பரவிய செய்தி
மதிப்பீடு
விளக்கம்
மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் சாதாரண ரயிலில் நிற்கும் புகைப்படமும், தற்போதைய இந்திய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் சிறப்பு ரயிலில் இருந்து பாதுகாப்பு அதிகாரிகள் உடன் இறங்கும் புகைப்படமும் இணைக்கப்பட்டு வித்தியாசம் தெரிகிறதா சமூக வலைதளங்களில் இப்புகைப்படம் பகிரப்பட்டு வருகிறது.
எதற்காக இந்த ஒப்பீட்டு புகைப்படங்கள் பகிரப்படுகின்றன என்பதை வெளிப்படையாக கூறவில்லை. எனினும், அப்துல் கலாம் அவர்கள் எளிமையாக செல்வதற்கும் தற்போதுள்ள குடியரசுத் தலைவர் சிறப்பு ரயிலில் பாதுகாப்பு உடன் செல்வதாக பலரும் கமெண்ட்களில் பதிவிட்டு வருகிறார்கள்.
உண்மை என்ன ?
குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அவர்களின் சிறப்பு ரயில் பயணம் குறித்து தேடுகையில், டெல்லி சப்தார்ஜுங் ரயில் நிலையத்தில் இருந்து கான்பூருக்கு சிறப்பு ரயிலில் பயணம் மேற்கொண்டதாக 2021 ஜூன் 25-ம் தேதி President of India யூடியூப் சேனலில் வீடியோ வெளியாகி இருக்கிறது.
லக்னோவில் அம்பேத்கர் கலாச்சார மையத்திற்கு அடிக்கல் நாட்ட குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் லக்னோ வந்ததாக ஜூன் 28-ம் தேதி வெளியான ஹிந்துஸ்தான் டைம்ஸ் செய்தியில் வைரல் செய்யப்படும் புகைப்படம் வெளியாகி இருக்கிறது.
மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் சிறப்பு ரயிலில் பயணம் எனத் செய்தாரா எனத் தேடுகையில், 2003-ல் பாட்னாவிற்கு குடியரசுத்தலைவர் சிறப்பு ரயிலில் அப்துல் கலாம் பயணித்ததாக 2016-ல் இந்தியா டுடே செய்தியில் வெளியாகி இருக்கிறது.
2004 ஜனவரியில் சண்டீகரில் இருந்து டெல்லிக்கு சிறப்பு ரயிலில் சென்ற புகைப்படம் tribuneindia இணையதளத்தில் வெளியாகி இருக்கிறது.
வைரல் செய்யப்படும் அப்துல் கலாம் அவர்கள் சாதாரண ரயிலில் பயணிக்கும் புகைப்படத்தை ரிவர்ஸ் இமேஜ் சேர்ச் செய்கையில், நியூஇந்தியன்எக்ஸ்பிரஸ் இணையதளத்தில் அப்துல் கலாம் அவர்களின் புகைப்படத் தொகுப்பில் இப்புகைப்படமும் இடம்பெற்று இருக்கிறது.
2010-ல் ரூர்கேலாவிற்கு ரயிலில் பயணம் மேற்கொண்டதா குறிப்பிடப்பட்டுள்ளது. அப்துல் கலாம் அவர்கள் 2007 வரையே குடியரசுத் தலைவர் பதவியில் இருந்தார்.
முடிவு :
நம் தேடலில், அப்துல் கலாம் சாதாரண ரயிலில் செல்லும் புகைப்படம் அவர் குடியரசுத் தலைவராக இருந்த போது எடுக்கப்பட்டது அல்ல. குடியரசுத் தலைவர் பதவி காலம் முடிந்த பிறகு 2010ல் ரயிலில் சென்ற போது எடுக்கப்பட்டது.
குடியரசுத் தலைவராக இருப்பவர்களுக்கு சிறப்பு ரயில் பயணம் ஏற்பாடு செய்வது வழக்கமாக உள்ளதே. அப்துல் கலாம் அவர்கள் குடியரசுத் தலைவராக இருந்த போதும் சிறப்பு ரயிலில் பயணம் செய்திருக்கிறார்.
ஆக, பதவியில் இருந்து ஓய்வுபெற்ற பிறகு அப்துல் கலாம் ரயிலில் பயணித்த போது எடுக்கப்பட்ட புகைப்படத்தையும், தற்போதைய குடியரசுத் தலைவர் சிறப்பு ரயிலில் பயணிக்கும் புகைப்படத்துடன் தவறாக ஒப்பிடப்பட்டு பகிரப்பட்டு வருகிறது என அறிய முடிகிறது.
YouTurn உண்மையை சொல்லும் பணி முக்கியம் என நினைக்கின்றீர்களா? நன்கொடை அளித்து நீங்களே மக்கள் பத்திரிகையாக இயங்க வழி செய்யுங்கள்.
ஆதாரம்
Presidential saloon unused since 2004, may go off track
Kalam leaves by special saloon
remembering-dr-apj-abdul-kalam-on-his-birth-anniversary-here-are-some-rare-photos-of-peoples-presi
President Kovind boards a special Presidential train from Safdarjung railway station to Kanpur.
President to lay foundation stone of Dr Ambedkar Cultural Centre in Lucknow today