ஏவுகணை சோதனையில் கலாம் ஐயா | இளமைக்கால அரியப் படம்.

பரவிய செய்தி
படத்தில் இருப்பது யார் தெரியுமா ? தும்பாவில் இந்தியாவின் ஏவுகணை பாகங்களைப் பொருத்தும் ஆர்.ஆராவமுதன் மற்றும் ஐயா அப்துல் கலாம்.
மதிப்பீடு
சுருக்கம்
1960- களில் தும்பா எனும் கிராமத்தில் கிறிஸ்துவ தேவாலயம் அமைந்த இடத்தில் “ Thumba Equatorial Rocket Launch station “ அமைக்கப்பட்டது. அங்கு விஞ்ஞானிகள் ஏ.பி.ஜே அப்துல் கலாம் மற்றும் ஆர்.ஆராவமுதன் பணியாற்றிய போது இப்படம் எடுக்கப்பட்டுள்ளது .
விளக்கம்
மறைந்த முன்னாள் இந்தியக் குடியரசு தலைவரும், ஏவுகணை நாயகன் என இளைஞர்களால் அழைக்கப்படும் ஏ.பி.ஜே அப்துல் கலாம் இளமையில் ஏவுகணை சோதனையில் இருக்கும் அரியப் புகைப்படம் ஒன்று சமீபத்தில் வைரலாகி வருகிறது.
தும்பா ஏவுகணை சோதனை தளம் :
திருவனந்தபுர நகருக்கு அருகே உள்ள சிறிய மீனவ கிராமமே தும்பா. 1960-களில் இந்தியாவின் விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் தும்பா பகுதி அபூர்வமாக பூமியின் கந்தபுல பூமத்தியரேகைப் பகுதிக்கு அருகே அமைந்துள்ளதை அறிந்தனர்.
தும்பா கிராமத்தில் அமைந்து இருந்த மிகப்பெரிய கிறிஸ்துவ தேவாலயத்தின் பிஷப் பீட்டர் பெர்னட்-ஐ விக்ரம் சாராபாய் அவர்கள் சந்தித்து விவரித்த பின் அங்கு ஆராய்ச்சி மையம் அமைய ஒப்புக் கொண்டார். அங்குள்ள மீனவர்களும் அதற்கு ஒத்துழைப்பு வழங்கி இடம் பெயர்ந்தனர்.
1963 நவம்பர் 21-ம் தேதி நாசாவில் தயாரிக்கப்பட்டு இந்திய விஞ்ஞானிகள் பொருத்திய இந்தியாவின் முதல் ஒலி ஏவுகணை NIKE-Apache தும்பா சோதனை தளத்தில் இருந்து ஏவப்பட்டது. இந்த ஏவுகணை சோதனையின் விஞ்ஞானிகள் குழுவில் அப்துல் கலாம் அவர்களும் பணியாற்றி உள்ளார். அன்றைய காலத்தில் இந்திய பிரதமர் நேரு ஊக்குவித்து அமெரிக்காவிற்கு அனுப்பிய இளம் விஞ்ஞானிகள் குழுவில் அப்துல் கலாம் மற்றும் ஆர்.ஆராவமுதன் ஆகியோர் இருந்துள்ளனர்.
தும்பா ஏவுகணை சோதனைக்கு பிறகு 1964-ல் இந்தியா மற்றும் நாசா இடையே செயற்கைக்கோள் ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. தும்பாவில் இருந்த கிறிஸ்தவ தேவாலயம் இந்தியாவின் ஏவுகணை சோதனை மையமாக செயல்பட்டது.
” 1964-ல் தும்பாவில் ஏவுகணை சோதனைகள் குறித்த ஆராய்ச்சியில் ஆர்.ஆராவமுதன் மற்றும் அப்துல் கலாம் ஆகிய இருவரும் பணியாற்றிய போது எடுக்கப்பட்ட படமே இது ”
ஏவுகணை சோதனை நிகழ்ந்த தும்பா தேவாலயத்தை தற்போது விண்வெளி அருங்காட்சியகமாக மாற்றியுள்ளனர். இங்கு அப்துல் கலாம் அவர்கள் பயன்படுத்திய அறை, பயன்படுத்திய ஏவுகணை மாதிரிகள் மற்றும் பலவற்றை மக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன.
தும்பா தேவாலயம் பற்றியும், அங்கு பணியாற்றியவர்கள் பற்றியும் அப்துல் கலாம் அவர்கள் “ அக்னி சிறகுகள் “ நூலில் குறிப்பிட்டுள்ளார். இதே போன்று ஆர்.ஆராவமுதன் அவர்கள் வெளியிட்ட “ ISRO: A Personal Journey “ நூலிலும் தும்பா சோதனை தளம் பற்றி விவரித்துள்ளார்.
இந்தியாவின் ஏவுகணை சோதனைக்கு எந்தவொரு கேள்வியும் கேட்காமல் தேவாலயத்தில் ஏவுகணை சோதனை மையம் அமைய ஒத்துழைப்பு வழங்கியதற்காக தும்பா அருகே இரு தேவாலயங்களை இஸ்ரோ கட்டினர் என்பது குறிப்பிடத்தக்கது.