இந்திய விமானப்படை வீரர் அபிநந்தன் பாஜகவில் இணைந்ததாகப் பரவும் வதந்தி !

பரவிய செய்தி
எவ்வளவு பெரிய டகால்டி வேலை பாத்துருகானுங்க…Twitter Link | Archive Link
மதிப்பீடு
விளக்கம்
2019 பிப்ரவரி 27 அன்று தன்னுடைய விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதையடுத்து பாகிஸ்தானில் பாராசூட் மூலம் தரையிறங்கிய இந்திய விமானப்படை வீரர் அபிநந்தன், அப்பகுதி மக்களால் தாக்கப்பட்ட வீடியோ இந்தியா முழுவதும் வைரலானது. இதனையடுத்து பாகிஸ்தானிய இராணுவத்தால் சிறைபிடிக்கப்பட்ட அவர், 2019 மார்ச் 01 அன்று விடுவிக்கப்பட்டார்.
இந்நிலையில், அபிநந்தன் பாஜகவில் இணைந்ததாகக் கூறி புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது. மேலும் அந்த புகைப்படத்தில் உள்ள நபர் கழுத்தில் பாஜக கொடியுடன் இருப்பதையும் பார்க்க முடிகிறது.
உண்மை என்ன ?
பரவி வரும் புகைப்படத்தினை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் சேர்ச் மூலம் ஆய்வு செய்து பார்த்ததில், இந்த புகைப்படம் கடந்த 2019-இல் இருந்தே சமூக வலைதளங்களில் பரவி வருகிறது என்பதை அறிய முடிந்தது.
அபிநந்தன் குறித்து தேடுகையில், 2019ல் அவரது பெயரில் பல ட்விட்டர் பக்கங்கள் உருவாக்கப்பட்டன. அதில், அவருடைய புகைப்படங்கள் பலவும் தொடர்ச்சியாக பதிவிடப்பட்டன.
அபிநந்தனின் புகைப்படத்தையும், பரவி வரும் புகைப்படத்தையும் ஒப்பீடு செய்து பார்த்ததில், பரவி வரும் புகைப்படத்தில் இருப்பவருக்கு வலது கண்ணுக்கு கீழே மச்சம் இருப்பதையும், அதே போன்று அபிநந்தனுக்கு உதட்டிற்கு கீழ் மச்சம் இருப்பதையும் காண முடிந்தது.
இவை ஒன்றுக்கு ஒன்று முரணாக காணப்படுகிறது என்பதை அவருடைய மற்ற புகைப்படங்களையும் ஆய்வு செய்ததில் இருந்து உறுதிப்படுத்த முடிந்தது. இதே போன்று அபிநந்தனின் நாடி ஒரு சிறிய கோடு போன்ற அமைப்புடன் மடங்கி காணப்படுகிறது. ஆனால் பரவி வரும் புகைப்படத்தில் இருப்பவருக்கு நாடி வேறு வடிவில் காணப்படுகிறது.
அதேபோன்று, பரவி வரும் படம் ஆனது 2019 ஏப்ரல் 13 அன்று நடந்த லோக் சபா தேர்தலின் போது இவர் பாஜகவிற்கு ஓட்டு செலுத்தியதாகக் கூறி பரப்பப்பட்டுள்ளது. ஆனால், அபிநந்தன் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர். தமிழ்நாட்டில் நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 18ம் தேதி நடைபெற்றது.
மேலும் பரவி வரும் புகைப்படத்தின் பின்புறம் உள்ள கடையில், ஹிந்தியில் “சமோசா கடை” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்த புகைப்படம் தமிழ்நாட்டில் எடுக்கப்பட்டதல்ல என்பதையும் அறிய முடிகிறது.
முடிவு:
நம் தேடலில், இந்திய விமானப்படை விங் கமாண்டர் அபிநந்தன் பாஜகவில் இணைந்ததாகக் கூறி சமூக ஊடகங்களில் பரவும் புகைப்படம் அவருடையது அல்ல, அவர் தோற்றத்தில் பாஜகவிற்கு வாக்கு சேகரித்த வேறொரு நபர் என்பதை அறிய முடிகிறது.