அபுதாபியில் இந்து கோயில் திறப்பிற்கு முன் மழை.. முதல் முறையாக மழை பெய்ததாகப் பரவும் பொய் !

பரவிய செய்தி

அபுதாபியில் கோவில் திறப்பு விழாவுக்கு சற்று முன் பெய்து வரும் மழை குறித்து அங்குள்ள நிர்வாகம் இது அடர்ந்த பாலைவனப் பகுதி இதுவரை இங்கு மழை பெய்ததில்லை எனகூறுகிறது கடவுளின் நித்திய கலாச்சாரத்தின் மகிமை ஆச்சரியமானது எந்த யாகத்திலும் மழை மிகவும் மங்களகரமானதாக கருதப்படுகிறது. 

X post link | Archive link 

மதிப்பீடு

விளக்கம்

க்கிய அரபு அமீரகத்தின் அபுதாபியில் 27 ஏக்கர் நிலப்பரப்பில் கட்டப்பட்டுள்ள முதல் இந்து கோயில்(BAPS Hindu Mandir) இந்தியப் பிரதமர் மோடியால் பிப்ரவரி 14ம் தேதி திறந்து வைக்கப்பட்டது. இதற்கு முன் பிப்ரவரி 13ம் தேதி துபாய் மற்றும் அபுதாபியில் பெருமழை பொழிந்தது செய்திகளில் வெளியாகின. இந்நிலையில், அபுதாபியில் இந்து கோயில் அமைந்துள்ள பகுதி அடர்ந்த பாலைவனப் பகுதி என்றும், இங்கு இதுவரை மழை பெய்ததில்லை என அங்குள்ள நிர்வாகம் கூறியதாக கோயிலில் மழைப் பொழியும் வீடியோ உடன் பாஜகவினரால் பரப்பப்படுகிறது.

உண்மை என்ன ?  

கடந்த 2023 ஜனவரியில் அபுதாபியில் மழைப் பொழிவு குறித்து யூடியூப் சேனலில் வீடியோ ஒன்று பதிவு செய்யப்பட்டது இருக்கிறது. அதில், அபுதாபியில் பொதுவாக டிசம்பர் முதல் மார்ச் வரையிலான மாதங்களிலேயே மழைப் பொழிவு அதிகம் நிகழ்கிறது என்றுள்ளது.

அபுதாபியின் அல் ரக்பா துபாய்- அபுதாபி ஷேக் சயீத் நெடுஞ்சாலை அருகே கட்டப்பட்டுள்ள இந்துக் கோயில் ஆனது அபுதாபியின் சயீத் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து 30கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. இக்கோயில் அமைந்துள்ள பகுதி அபுதாபியின் வானிலை ஆய்வு நிலையத்தின் கீழ் வருகிறது.

2010ம் ஆண்டு மார்ச் மாதம் வெளியான டைம்ஸ் ஆப் இந்தியா செய்தியில், ஐக்கிய அரபு அமீரகத்தில் திடீர் மழைப் பொழிவால் போக்குவரத்து நெரிசல், கார் விபத்துகள், வெள்ளம் உள்ளிட்டவை ஏற்பட்டுள்ளது. இதில், துபாயில் 22.2 மி.மீ மழையும், அபுதாபியில் 43.4 மி.மீ மழையும், ஷார்ஜாவில் 35.6 மி.மீ மழையும் செய்துள்ளதாக இடம்பெற்றுள்ளது.

uaestat.fcsc.gov.ae இணையதளத்தில், 2016 முதல் 2020 வரையில் அபுதாபியில் பதிவான மழையளவு பதிவாகி இருக்கிறது. அதன்படி பார்க்கையில், 2016 மார்ச் மாதம் 32 மி.மீ மழையும், 2017 மார்ச் மாதம் 34 மி.மீ மழையும், 2020 ஜனவரியில் அதிகபட்சமாக 60 மி.மீ மழையும் பதிவாகி இருப்பதாக இடம்பெற்றுள்ளது.

 

2020ல் அபுதாபி பகுதிகளில் மொத்த மழை நாட்களின் எண்ணிக்கை 28 ஆகவும், 2019ல் 38 ஆகவும் இருந்துள்ளது. அதேபோல், இந்து கோவில் அமைந்துள்ள அல் ரக்பா(Al Rahba) பகுதியில் சராசரியாக ஓர் ஆண்டிற்கு மழை பொழிவு நாட்கள் 11 நாட்கள் ஆக உள்ளது. இப்படி இருக்கையில், கோவில் அமைந்துள்ள பகுதியில் மழைப் பெய்ததில்லை எனத் தவறாகப் பரப்பப்படுகிறது.

மேலும் படிக்க : சவூதியில் அரசக் குடும்பத்தினர் திருவாசகத்தை தலையில் சுமந்து செல்வதாக வதந்தி !

மேலும் படிக்க : “ ஜெய் ஸ்ரீ ராம் ” என்று கூறி உரையைத் தொடங்கியது அமீரகத்தின் இளவரசரா ?

முடிவு: 

நம் தேடலில், அபுதாபியில் இந்து கோவில் அமைந்துள்ள பகுதியில் இதுவரை மழை பெய்ததில்லை எனப் பரப்பப்படும் தகவல் தவறானது. டிசம்பர் முதல் மார்ச் வரையிலான காலக்கட்டத்தில் தான் அபுதாபி பகுதிகளில் மழைப் பொழிவு நிகழ்வதுண்டு. 2020 ஜனவரியில் அபுதாபியில் 60 மி.மீ அளவிற்கு மழையளவு பதிவாகி இருக்கிறது. அதேபோல், கோயிலுக்கு அருகே உள்ள அல் ரக்பா பகுதியில் சராசரியாக ஆண்டுக்கு 11  நாட்கள் மழைப் பொழிவு நிகழ்கிறது என்பதையும் அறிய முடிகிறது.

Please complete the required fields.




ஆதாரம்

Sanmuga Raja

Sanmuga Raja working as Senior Sub-Editor at YouTurn since May 2017. He holds a Bachelor’s degree in Engineering. His role is to analyze and obtain valid proof for social media and other viral hoaxes, then write articles based on the evidence. In obtaining the proof for claims, he also interviews people to verify the facts.
Back to top button
loader