நடிகர் ரஜினிகாந்த் மயில்சாமிக்கு வட்டிக்கு பணம் கொடுத்ததாகப் பரப்பப்படும் போலிச் செய்தி !

பரவிய செய்தி
“மயில்சாமி எனது நீண்ட கால நண்பர்’ கடந்த 12 ஆண்டுகளாக எனக்கு வாங்கிய கடனுக்கு வட்டி கட்டி வந்தார் இனி அந்த கடனை எப்படி அடைப்போம் என அவரது குடும்பத்தினர் கவலையடைய வேண்டாம்,அதை நான் முழுமையாக தள்ளுபடி செய்கிறேன். ‘இது என் கடமை’
மதிப்பீடு
விளக்கம்
திரைப்பட நகைச்சுவை நடிகர் மயில்சாமி சிவராத்திரி அன்று உயிரிழந்த சம்பவம் தமிழ்நாடு முழுவதிலும் சோகத்தை ஆழ்த்தியது. நடிகர்கள், அரசியல் கட்சியினர் என பலரும் மயில்சாமியின் உடலுக்கு அஞ்சலி செலுத்தி சென்றனர்.
இந்நிலையில், மயில்சாமி குறித்து பேசிய நடிகர் ரஜினிகாந்த், மயில்சாமி தன்னிடம் 12 ஆண்டுகளுக்கு முன் வாங்கிய கடனுக்கு வட்டி கட்டி வந்ததாகவும், அதை தள்ளுபடி செய்வதாகவும் கூறியதாக நக்கீரன் செய்தியின் கார்டு ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
எச்ச என்பதற்கு முழு அர்த்தம் ரஜினிகாந்த். இவனை வெள்ளை மனசு, ஆன்மீகவாதி, நல்லவன், பணம் மேல ஆசை இல்லாதவன்னு சொல்லிக் கிட்டு எவனாவது வந்தா செருப்படி நிச்சயம். pic.twitter.com/sjuTMwOJgs
— Priya Thangavel (@priya_0706) February 20, 2023
உண்மை என்ன ?
நடிகர் மயில்சாமியின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய பின் செய்தியாளர்களை சந்தித்த நடிகர் ரஜினிகாந்த், ” சிவ பக்தரான மயில்சாமி சிவராத்திரி அன்று இறந்தது தற்செயலான நிகழ்வு அல்ல, அவரின் கடைசி ஆசையை நிறைவேற்றுவேன் ” என்றெல்லாம் பேசி இருக்கிறார். அவர் கடன் வாங்கியதாக எங்கும் குறிப்பிடவில்லை.
நடிகர் ரஜினிகாந்த் பேசியதாக பரப்பப்படும் நியூஸ் கார்டு குறித்து நக்கீரன் செய்தி பக்கத்தில் தேடுகையில், “மயில்சாமி என்னுடைய நீண்டகால நண்பர்; அவர் திருவண்ணாமலை கோயிலுக்குச் சென்றிருந்தபோது எனக்கு 3 முறை போன் செய்திருந்தார்; என்னால் எடுக்க முடியாமல் போனதற்கு அவரிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றிருந்தேன், அதற்குள் மறைந்துவிட்டார்; சிவன் கோயிலில் நான் பாலபிஷேகம் செய்ய வேண்டும் என்ற அவரின் கடைசி ஆசையை நிச்சயம் நிறைவேற்றுவேன்” என்ற நியூஸ் கார்டே பிப்ரவரி 20ம் தேதி வெளியாகி இருக்கிறது.
மேற்காணும் நியூஸ் கார்டில் நடிகர் ரஜினிகாந்த் மயில்சாமிக்கு பணம் கொடுத்ததாகப் போலியான செய்தியை எடிட் செய்து தவறாக சமூக வலைதளங்களில் பரப்பி வருகின்றனர்.
மேலும் படிக்க : அசைவ உணவு சாப்பிடுபவர் ஒழுக்கம் இல்லாதவர் என ரஜினிகாந்த் பேசினாரா ?| Fact Check
மேலும் படிக்க : ரஜினிகாந்த் மீண்டும் அரசியல் குறித்து மன்ற நிர்வாகிகளை சந்திப்பதாகப் பரவும் பழைய செய்தி !
இதற்கு முன்பாக, நடிகர் ரஜினிகாந்த் குறித்து பரப்பப்பட்ட தவறான செய்திகள் குறித்தும் கட்டுரைகள் வெளியிட்டு இருக்கிறோம்.
முடிவு :
நம் தேடலில், மறைந்த நடிகர் மயில்சாமி 12 ஆண்டுகளாக என்னிடம் வாங்கிய கடனுக்கு வட்டி கட்டி வந்தார், அதை தள்ளுபடி செய்வதாக நடிகர் ரஜினிகாந்த் கூறியதாக பரப்பப்படும் நியூஸ் கார்டு போலியானது என அறிய முடிகிறது.
YouTurn உண்மையை சொல்லும் பணி முக்கியம் என நினைக்கின்றீர்களா? நன்கொடை அளித்து நீங்களே மக்கள் பத்திரிகையாக இயங்க வழி செய்யுங்கள்.