ஜெயலலிதா தெலுங்கு நடிகர் சோபன் பாபுவிற்கு சென்னையில் சிலை வைத்தாரா ?

பரவிய செய்தி
மதிப்பீடு
விளக்கம்
மறைந்த முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியின் நினைவாக சென்னை மெரினா கடற்கரையையொட்டி கடலுக்குள் ரூ.81 கோடி செலவில் பேனா நினைவுச் சின்னம் அமைப்பது சர்ச்சையாகி உள்ளது.
இது தொடர்பாக, தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரியம் தரப்பில் நடத்தப்பட்ட கருத்துக் கேட்பு கூட்டத்தில் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், கடலுக்குள் நினைவுச்சின்னம் வைக்கக்கூடாது, அது சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பு தரும் என்றும், பேனா சின்னம் வைத்தால் ஒருநாள் நான் வந்து உடைப்பேன் என்றும் பேசியது பெரும் அரசியல் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில், கலைஞரின் பேனா சின்னம் வைக்கக்கூடாது எனப் பேசும் சீமான், தெலுங்கு நடிகர் சோபன் பாபுவிற்கு சென்னையில் ஏன் சிலை என கேள்வி கேட்பாரா என்று சமூக வலைதளங்களில் திமுகவினர் இப்பதிவை வைரல் செய்து வருகின்றனர்.
தெலுங்கு துணை நடிகனுக்கு சென்னையில் ஏன் சிலைன்னு ஆமையன் @SeemanOfficial மட்டும் 2016க்கு முன்ன கேட்டு இருந்தா… ஒத்த ரோசா அவனை உசுரோட நிக்க வச்சு பொதைச்சுருக்கும் pic.twitter.com/aUHkpzQthE
— Senthil Thangavel (@Senthilthanavel) February 1, 2023
ஆமா யாரு இவர் இவருக்கு ஏன் ஊழல் மகாராணி ஜெயலலிதா சிலை வச்சுச்சு pic.twitter.com/mjEFevjWSj
— ஜெயசந்திரன் திமுக 🖤♥️ (@jaya2016maha) February 18, 2021
கடந்த சில ஆண்டுகளாகவே எதற்காக சோபன் பாபுவிற்கு ஜெயலலிதா சிலை வைத்தார் என சமூக வலைதளங்களில் பதிவுகள் வைரல் செய்யப்பட்டு வந்துள்ளன. தற்போது கலைஞர் பேனா சின்னம் தொடர்பான விவாதம் எழுவதால் சோபன் பாபு சிலை மீண்டும் பேசு பொருளாக பரவி வருகிறது.
உண்மை என்ன ?
சென்னையில் அமைந்துள்ள சோபன் பாபு சிலை குறித்து தேடிய போது, ” சோபன்பாபு சிலையை அகற்றக்கோரி சென்னையில் போராட்டத்தில் ஈடுபட முயன்ற தமிழர் முன்னேற்ற படையின் நிறுவனர் கி.வீரலட்சுமியை போலீசார் கைது செய்தனர் ” என 2015 ஜூன் 15ம் தேதி ஒன் இந்தியா தமிழ் செய்தி வெளியிட்டு இருந்தது.
சோபன்பாபு சிலை அகற்றும் போராட்டம்.. கி.வீரலட்சுமி கைது http://t.co/l0X8VEIl14 #Veeralakshmi
— Oneindia Tamil (@thatsTamil) June 15, 2015
அந்த செய்தியில், ” சென்னை மேத்தா நகர், நெல்சன் மாணிக்கம் சாலையில் உள்ள தனியார் இடத்தில் தெலுங்கு நடிகர் சோபன் பாபுவின் சிலை அவரது குடும்பத்தாரால் வைக்கப்பட்டுள்ளது. தெருக்களின் சந்திப்பில் சிலை இருந்தாலும், சிலை அமைந்திருக்கும் இடம் சோபன்பாபு குடும்பத்தாரின் சொந்த இடம். ஆனால், சிலை அமைக்கப்பட்டுள்ள பீடத்தின் பகுதி பொதுமக்களின் நடைபாதையை ஆக்கிரமித்து நீட்டிக்கொண்டு உள்ளது. இது பொதுமக்களுக்கு இடையூறாக உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது ” என இடம்பெற்று இருக்கிறது.
சோபன் பாபு சிலை திறக்கப்பட்ட ஆண்டு குறித்து தேடுகையில், ” 2009ம் ஆண்டு ஆகஸ்ட் 6ம் தேதி ” Statue that juts into the footpath ” எனும் தலைப்பில் தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் வெளியிட்ட செய்தி கிடைத்தது.
செய்தியின்படி, ” நடிகர் சோபன் பாபுவின் குடும்பத்தினரால் அவர்களது சொந்த நிலத்தில் நிறுவப்பட்ட சிலைக்கு பொது இடத்தை ஆக்கிரமித்து உள்ளதாகவும், பாதசாரிகளுக்கு இடையூறாக உள்ளதாகவும் புகார்கள் எழுந்தன.
ஆனால், மாநகராட்சி அதிகாரிகள், ” சிலையானது அவர்களின் சொந்த நிலத்தில் உள்ளது. எந்த பொது இடமும் ஆக்கிரமிக்கப்படவில்லை ” எனக் கூறியுள்ளதாக ” செய்தியில் வெளியாகி உள்ளது.
1937ம் ஆண்டு ஜனவரி 14ம் தேதி ஆந்திராவில் பிறந்த சோபன்பாபு 2008ம் ஆண்டு மார்ச் 20ம் தேதி சென்னையில் உயிரிழந்தார். அவரின் இறப்பிற்கு பிறகு அவரது குடும்பத்தினர் சென்னையில் அவர்களுக்கு சொந்தமான இடத்தில் சிலை அமைத்துள்ளனர். 2009ல் சோபன் பாபு சிலை தொடர்பான செய்தி வெளியாகி இருக்கிறது. அப்போது ஆட்சியில் இருந்தது கலைஞர் கருணாநிதி தலைமையிலான திமுக அரசு, ஜெயலலிதா அல்ல.
முடிவு :
நம் தேடலில், தெலுங்கு நடிகர் சோபன் பாபுவிற்கு சென்னையில் சிலை வைத்தது மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா எனப் பரப்பப்படும் தகவல் தவறானது. சோபன் பாபு குடும்பத்தினர் அவர்களுக்கு சொந்தமான இடத்தில் சிலையை அமைத்துள்ளனர். சோபன் பாபு சிலை அமைக்கப்பட்ட போது ஆட்சியில் இருந்தது திமுக என அறிய முடிகிறது.