கர்நாடகாவில் சிம்புவின் Unite for Humanity-க்கு பெருகும் ஆதரவு..!

பரவிய செய்தி
நடிகர் சிம்புவின் பேச்சுக்கு கர்நாடகாவில் பெருகியது ஆதரவு. சமூக வலைத்தளங்களில் UnityforHumanity என்ற ஹாஷ்டக் மூலம் கன்னட மக்கள் தமிழர்களுக்கு தண்ணீர் வழங்கும் வீடியோக்கள் வைரலாகி வருகிறது.
மதிப்பீடு
சுருக்கம்
தண்ணீர் பிரச்சனையில் இரு மாநிலங்களுக்கு இடையே நடப்பது அரசியல் விளையாட்டு மட்டுமே கன்னட மக்கள் தமிழர்களுக்கு தண்ணீர் தர கடுமையாக எதிர்க்கிறார்கள் என்ற பிம்பத்தை உடைத்துள்ளது Unity for Humanity .
விளக்கம்
காவிரி நீர் விவகாரத்தில் தமிழகத்தில் போராட்டங்கள் தீயாய் பரவிக் கொண்டிருக்கும் நேரத்தில் தமிழக நடிகர்கள் சங்கத்தின் சார்பில் மௌன போராட்டம் நடைபெற்றது. இதில், நடிகர் சிம்பு பங்கேற்காமல் ஏப்ரல் 8-ம் தேதி ஊடகங்களுக்கு தனியாக ஒரு பேட்டியை அளித்தார். அதில் அவர் பேசிய வார்த்தைகளுக்கு கன்னட மக்களிடையே பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.
நடிகர் சிம்பு காவிரி நீர் பற்றி கூறியதாவது, “ காவிரி நதிநீர் பிரச்சனை நீண்ட நாட்களாக இருந்து வருகிறது. நமக்கு தண்ணீர் தேவை என்ற உணர்வு இருப்பது போன்று அங்குள்ள மக்களுக்கும் அத்தகைய உணர்வு இருக்கும்தானே. எதற்காக உச்ச நீதிமன்றத்தை கேட்க வேண்டும், எதற்காக அரசியல் தலைவர்களிடம் கேட்க வேண்டும். அங்கேயும், இங்கேயும் தண்ணீர் பிரச்சனையை வைத்து மக்களை பிரித்து ஆட்சியை பிடிப்பதே அரசியல்வாதிகளின் திட்டம். இதுவே தமிழ்நாடு அவர்களது இடத்தில் இருந்தால் தண்ணீர் கொடுத்திருப்போமா ?
காவிரி நதியை நாம் தாயாக நினைப்பதால் கர்நாடகாவில் உள்ள கன்னட மக்கள் மற்றும் தாய்மார்களிடம் ஒரு கேள்வியை முன் வைக்கிறேன். உங்கள் வீட்டில் நீங்கள் சாப்பிட்டது போக மீதி இருக்கும் உணவை உங்களின் வீடு தேடி பசி என்று வருபவனுக்கு கொடுப்பீர்களா அல்லது குப்பையில்தான் கொட்டுவேன் என்று சொல்வீர்களா ? பக்கத்தில் இருப்பவர்கள் கொடுக்க கூடாது என சொல்லலாம். ஆனால், நான் தாயாகிய உங்களிடம்தான் கேட்கிறேன். சத்தியமாக எந்தவொரு தாயும் கொடுக்கமாட்டேன் என கூறமாட்டர்கள். நாங்கள் உங்களிடம் பிச்சை கேட்கவில்லை, உங்கள் வயிற்றில் பிறக்காத மகனா கேட்கிறேன் ” என்று உணர்ச்சி மேலோங்க பேசி இருப்பார்.
இறுதியாக, உச்ச நீதிமன்றத்தையோ, அரசியல்வாதிகளிடமோ கேட்கப் போவதில்லை. அங்குள்ள தாய்மார்களிடம், உடன் பிறக்காத சகோதர, சகோதரிகளிடம் ஒரு வேண்டுகோளை வைக்கிறேன். ஏப்ரல் 11-ம் தேதி கர்நாடகாவில் உள்ள மக்கள் அங்குள்ள தமிழர்களுக்கு ஒரு டம்ளர் தண்ணீரை கொடுத்து நம்மிடம் மனிதாபிமானம் இன்றளவும் உள்ளது என்பதை நிரூபிக்க வேண்டும் என்று கூறினார். மேலும், அதை ஃபோட்டோ, வீடியோ எடுத்து UniteforHumanity என்ற ஹாஷ்டக் மூலம் சமூக வலைத்தளத்தில் பதிவிடுமாறு உணர்ச்சிகரமாக பேசியிருந்தார்.
நடிகர் சிம்புவின் பேச்சுக்கு பிறகு ஏப்ரல் 10-ம் ஐ.பி.எல் போட்டிக்கு எதிராக போராட்டம் என காவிரி பிரச்சனை வேறு பாதையில் செல்ல பார்த்த நேரத்தில், தண்ணீர் பிரச்சனையில் மக்களுக்கு இருக்கும் உணர்வை வெளிப்படுத்தும் வகையில் ஒரு நிகழ்வு கர்நாடகாவில் நடந்துள்ளது.
தமிழர்களுக்கு கர்நாடக மக்கள் தண்ணீர் வழங்க விரும்பவில்லை என்ற எண்ணத்தை உடைக்கும் வகையில், தமிழர்களும் நம் சகோதரர்கள்தான் என்றும், எங்களிடமும் மனிதாபிமானம் உள்ளது என்பதை நிரூப்பித்துள்ளனர் கன்னட மக்கள். ஏப்ரல் 11-ம் தேதி கர்நாடகாவில் உள்ள பெண்கள், இளைஞர்கள், பெரியவர்கள் என பலரும் தமிழர்களுக்கு தண்ணீர் தருவதாகவும், நாங்கள் நண்பேண்டா என்று கூறியும் வீடியோக்களையும், புகைப்படங்களையும் வெளியிட்டு வந்தனர். இந்த வீடியோக்கள் Unite for Humanity என்ற ஹாஷ்டக் மூலம் பிரமலமாகி வருகிறது.
அது மட்டுமின்றி சில கன்னட அமைப்புகளும் கர்நாடகா எல்லை பகுதியில் வாகனங்களில் செல்லும் மக்களுக்கு தண்ணீர் பாட்டில்களை வழங்கி ஆதரவு அளித்தனர். சிம்புவின் பேச்சுக்கு கன்னட எழுத்தாளர்கள், பொதுமக்கள், ஊடகங்கள் என பலரும் ஆதரவு அளித்தது தமிழகத்திலும் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. மேலும், கர்நாடகாவின் ஊடகத்திலும் கூட சிம்பு கர்நாடகாவிற்கு ஆதரவு அளிப்பதாக செய்திகளும், விவாத நிகழ்ச்சிகளும் வெளியாகியுள்ளது.
தனது பேச்சுக்கு மதிப்பளித்து தங்களிடமும் மனிதாபிமானம் இருப்பதையும், நாம் அனைவரும் ஒன்றாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்திலும் தமிழர்களுக்கு தண்ணீர் கொடுத்த அனைத்து நெஞ்சங்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன் என்று நடிகர் சிம்பு கூறியுள்ளார்.
இந்தியா இன, மத, மொழி, நிற வேறுபாடற்ற தேசம். ஆனால், இங்குள்ளவர்கள் தங்களின் லாபத்திற்காக மட்டுமே மக்களை பிரிக்கும் செயலில் ஈடுபடுகின்றனர். தேசிய கட்சிகளும் கூட தங்களின் ஆட்சியை நிலைநாட்ட தண்ணீர் பிரச்சனையை பயன்படுத்தி வருகின்றனர். கர்நாடகாவில் தண்ணீர் தர மாட்டேன் என்று கூறும் கட்சிகளே ஆட்சியை பிடிக்கின்றனர். இனி தண்ணீர் தரும் கட்சிக்கே ஓட்டு என்ற நிலை கர்நாடகாவில் உருவாகும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார் சிம்பு.
சிம்புவின் UniteforHumanity என்ற பேச்சை பலர் கிண்டல் செய்து கருத்துகளை பதிவிட்டிருந்தாலும், சிறிய தாக்கம் எனினும் நேர்மறையான ஒரு தாக்கம் . இது கர்நாடகாவில் மனிதாபிமானம் கொண்ட உள்ளங்கள் இருக்கிறது என்பதை வெளிப்படுத்தியதற்கு கருவியாக அமைந்ததில் மகிழ்ச்சி. எனினும், தங்களது போக மீதி தண்ணீரை வழங்க வேண்டும் என்ற எண்ணத்தில் கன்னட மக்கள் ஆதரவு அளித்திருக்கலாம். இதையேதான் சிம்புவின் பேச்சும் வெளிப்படுத்தி உள்ளது. இருப்பினும், இந்த நிகழ்வால் கர்நாடகா மக்களுக்கும் தமிழக மக்களுக்கும் ஒரு பிணைப்பு ஏற்பட்டுள்ளது. காவிரி நீரை வைத்து அரசியல் செய்வதை அங்குள்ள சிலர் விரும்பவில்லை என்பதை UniteforHumanity வெளிப்படுத்தி உள்ளது. ஆனால், காவிரி பிரச்சனையில் இது நிரந்தர தீர்வாகுமா? ஒற்றுமை என்ற விஷயத்தை யாரும் பேசாத நிலையில் இது ஒரு வரவேற்கத்தக்க முயற்சியே!