இளம்பெண்ணுடன் திருப்பதியில் உல்லாசம் என சிவகுமார் பற்றி அவதூறு தலைப்பால் வதந்தி !

பரவிய செய்தி

இளம்பெண்ணுடன் திருப்பதியில் உல்லாசம்… கைதாகிறாரா சிவகுமார்.? சென்னை விரைகிறது ஆந்திர போலீஸ்..!

Facebook link | Archive link

மதிப்பீடு

விளக்கம்

நடிகர் சிவகுமார் பற்றி தினசேவல் எனும் இணைய பக்கம் ஒன்று, ” இளம்பெண்ணுடன் திருப்பதியில் உல்லாசம்… கைதாகிறாரா சிவகுமார்.? சென்னை விரைகிறது ஆந்திர போலீஸ்..! ” எனும் தலைப்பில் வெளியிட்ட கட்டுரை குழப்பத்தையும், சிவகுமாரை சமூக வலைதளங்களில் தவறாக சித்தரிக்கவும் காரணமாகி இருக்கிறது.

Archive link

உண்மை என்ன ?

2020 ஜூன் மாதம் நடிகர் சிவகுமார் திருப்பதி தேவஸ்தானம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதால் அவர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்ததாக செய்திகளில் வெளியாகி இருக்கிறது.

நிகழ்ச்சி ஒன்றில் கோவில்களில் தீண்டாமை இருப்பதாக பேசிய நடிகர் சிவகுமார், ” திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கோடிக்கோடியாக காணிக்கை கொட்டுகிறது எனக் கூறுகிறீர்கள். காட்பாடியில் இருந்து 48 நாட்கள் விரதம் இருந்து நடந்தே திருப்பதி கோவிலுக்கு செல்கிறான் ஒரு ஏழை பக்தன். நீண்ட வரிசையில் 4 நாட்கள் காத்திருந்து அந்த ஏழை பக்தன் சாமியை தரிசனம் செய்கிறான். அங்கு பெரிய மூங்கில் குச்சியால் “ஜருகண்டி ஜருகண்டி” என அடித்து அனுப்புறான். அதுவே ஒரு பணக்காரன் தன் மனைவிக்கு தெரியாமல் வேறு இளம் பெண்ணை அழைத்துக் கொண்டு திருமலைக்கு சென்று விடுதியில் தங்கி, தண்ணி அடித்து, சந்தோசமாக இருந்து விட்டு காலையில் குளிக்காமல் கோவிலுக்குள் சென்றால் அவனுக்கு பூரண கும்ப மரியாதை அளிக்கப்படுகிறது. நான் கண்ணால் பார்த்ததை சொல்கிறேன் ” எனப் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது.

2021 அக்டோபர் 16-ம் தேதி தினசேவல் இணைய பக்கத்தில் வெளியான செய்தியில்,” நடிகர் சிவகுமார் அவரது மகன் சூர்யா, மருமகள் ஜோதிகா ஆகிய சிவகுமார் குடும்ப உறுப்பினர்கள் தொடர்ந்து ஏதவாது ஒரு சர்ச்சையில் சிக்கி வருவது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் கடந்த வருடம் நடிகர் சிவகுமார் திருப்பதி கோவில் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியது பெரும் சர்ச்சையானது. பின் அவர் மீது திருப்பதி தேவஸ்தானம் தரப்பில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. தற்போது அந்த வழக்கு மீண்டும் விஸ்வரூபம் எடுத்துள்ளது. ” என இடம்பெற்று இருக்கிறது.

2020ல் தொடங்கப்பட்ட தினசேவல் பாஜக ஆதரவு நிலைப்பாட்டுடன் மற்றும் திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளை கிண்டல் செய்யும் வகையில் பல செய்திகளை வெளியிட்டு இருக்கிறது என்பதை அந்த இணையபக்கத்தில் வெளியான செய்தி கட்டுரைகளின் வாயிலாக அறிய முடிகிறது. இதை யார் நிர்வகிக்கிறார்கள் என்கிற எந்த தகவலும் அந்த பக்கத்தில் வெளியிடவில்லை.

முடிவு : 

நம் தேடலில், திருப்பதி தேவஸ்தானம் குறித்து நடிகர் சிவகுமார் பேசியது தொடர்பாக வெளியிட்ட செய்தியில் தவறான தலைப்பை வைத்ததால் குழப்பம் ஏற்பட்டு சிவகுமார் பற்றி அவதூறாக பதிவிட்டு வருகிறார்கள் என அறிய முடிகிறது.

Please complete the required fields.




Back to top button
loader