நடிகை ஸ்ரீதேவி போதைப்பொருள் கொடுத்து கொலை எனப் பரவும் போலியான உடற்கூறாய்வு அறிக்கை !

பரவிய செய்தி
ஸ்ரீதேவி கொலை ரிப்போர்ட் அவுட். ரெண்டு வருஷம் கழிச்சு உண்மைகள் வெளியே வருது. பாலிவுட் போதைப்பொருள் மாபியாக்களின் ராஜ்ஜியம் தான் என்பது உறுதியாகிறது. கங்கனா குறிபார்த்து சரியாகவே அடித்துள்ளார்.
மதிப்பீடு
விளக்கம்
பாலிவுட் திரையுலகில் போதைப்பொருள் புழக்கம், பிரச்சனை இருப்பதாக தொடர் குற்றச்சாட்டுகள் எழுந்து வருவதையும், அது அரசியல்ரீதியாகவும் பேசும் பொருளாக மாறி வருவதையும் கண்டு வருகிறோம். இந்நிலையில், 2 ஆண்டுகளுக்கு முன்பு துபாயில் இறந்த நடிகை ஸ்ரீதேவி கொக்கெயின் எனும் போதைப்பொருள் பயன்படுத்தி இருந்ததாக துபாய் சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட உடற்கூறாய்வு அறிக்கையில் இடம்பெற்று இருக்கிறது என இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தேதியிட்ட அறிக்கையொன்று தற்போது பரவி வருகிறது.
2018-ம் ஆண்டில் பிப்ரவரி 24-ம் தேதி துபாய் ஹோட்டல் அறையில் நடிகை ஸ்ரீதேவி இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டார். நடிகை ஸ்ரீதேவி சுயநினைவை இழந்து ஹோட்டல் அறையில் இருந்த குளியல்தொட்டியில் எதிர்பாராதவிதமாக விழுந்து உயிரிழந்தார் என துபாய் அரசு அளித்த தகவல் அனைத்து செய்திகளிலும் வெளியாகின. அச்சமயத்தில் கூட, ஸ்ரீதேவியின் மரணம் கொலையா அல்லது பிற காரணங்கள் இருக்குமா என பல சந்தேகங்கள் எழுப்பப்பட்டன. ஆனால், துபாய் அரசு ஸ்ரீதேவியின் இறந்த உடலை உடற்கூறாய்வு செய்து அறிக்கையை வெளியிட்டனர்.
ஆனால், தற்போது பரவும் 2018 பிப்ரவரி 26-ம் தேதியிட்ட அறிக்கையானது செய்திகளிலோ அல்லது துபாய் அரசின் அதிகாரப்பூர்வ தரப்பிலோ வெளியானது இல்லை. மேலும், அந்த அறிக்கையில் பல்வேறு எழுத்துப்பிழைகள் இருப்பதையும் காணலாம். பிப்ரவரி 26-ம் தேதியில் கூட துபாய் மீடியா ஆபீஸ் ட்விட்டர் பக்கத்தில், எதிர்பாராதவிதமாக தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தார் என்றே உடற்கூறாய்வு அறிக்கை மூலம் துபாய் போலீஸ் தெரிவித்ததாக வெளியிட்டனர்.
Following the completion of post-mortem analysis, @DubaiPoliceHQ today stated that the death of Indian actress Sridevi occurred due to drowning in her hotel apartment’s bathtub following loss of consciousness.
— Dubai Media Office (@DXBMediaOffice) February 26, 2018
இதையடுத்து, நடிகை ஸ்ரீதேவியின் உடற்கூறாய்வு அறிக்கை குறித்து தேடிய போது, இந்தியா டுடே உள்ளிட்ட செய்திகள் பலவும் 2018 பிப்ரவரி 26-ம் தேதி குறிப்பிட்ட அறிக்கையை வெளியிட்டு இருந்தனர். அதேபோல், அவரது உடலை Embalming செய்தது குறித்து துபாய் சுகாதார ஆணையம் வெளியிட்ட அறிக்கையும் வெளியாகி இருக்கிறது. இவற்றில் எதிலும் போதைப்பொருள் பயன்படுத்தியதாக குறிப்பிடவே இல்லை.
மேலும் படிக்க : தாவூத் இப்ராஹிம் உடன் அமிதாப் பச்சன் இருப்பதாக வதந்தி| புகைப்படத்தில் இருப்பவர் யார் ?
முடிவு :
நம் தேடலில், நடிகை ஸ்ரீதேவி கொக்கெயின் போதைப்பொருள் பயன்படுத்தி இருந்ததாக கூறி பரவும் அறிக்கை துபாய் சுகாதார அமைச்சகத்தின் தரப்பில் வெளியானவை அல்ல என்பதையும், அது போலியான அறிக்கை என்பதையும் அறிய முடிகிறது.
YouTurn உண்மையை சொல்லும் பணி முக்கியம் என நினைக்கின்றீர்களா? நன்கொடை அளித்து நீங்களே மக்கள் பத்திரிகையாக இயங்க வழி செய்யுங்கள்.