This article is from Sep 15, 2020

நடிகர் சூர்யா வெளியிட்டது நீட் ஆதரவு புத்தகமில்லை| புத்தகத்தை படிக்காமல் தவறாக பரப்புவதேன் ?

பரவிய செய்தி

வரலாற்றில் என்றோ. நீட் ஆதரித்துப் புத்தகம் எழுதி வெளியிட்ட சூர்யாவின் அகரம் அறக்கட்டளை. (வீடியோ இணைப்பு மறுமொழியில்) #TNagainstNEET

மதிப்பீடு

விளக்கம்

நீட் தேர்வு அச்சத்தால் ஒரே நாளில் மூன்று மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டது மனதை உலுக்குகிறது என நடிகர் சூர்யா வெளியிட்ட அறிக்கை தமிழகத்தில் பெரிய அளவில் பேசு பொருளாக மாறியது. சூர்யாவின் பேச்சிற்கு ஆதரவும், எதிர்ப்பும் தெரிவிக்கப்பட்டு வருகின்றன.

Twitter link | archive link

இந்நிலையில், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பாக நடிகர் சூர்யா நீட் தேர்வை ஆதரித்து நுழைவுத் தேர்விற்கான புத்தகத்தை வெளியிட்டார் என்றும், தற்போது நீட் தேர்விற்கு எதிராக பேசி வருவதாகவும் ஒருசாரார் குற்றம் சுமத்தி பதிவிட்டு வருகின்றனர்.

Twitter link | archive link 

உண்மை என்ன ? 

2017-ம் ஆண்டு ஜனவரியில் கலாட்டா தமிழ் எனும் யூடியூப் சேனலில், முன்னாள் நீதிபதி சந்துரு, தற்போதைய விசிக எம்பி ரவிக்குமார், சூர்யா உள்ளிட்டோர் கலந்து கொண்ட நீட் புத்தக வெளியிட்டு வீடியோவின் ஸ்க்ரீன்ஷார்ட் புகைப்படமே தற்போது பரப்பப்பட்டு வருகிறது. அகரம் அறக்கட்டளை சார்பாக நடிகர் சூர்யா வெளியிட்ட புத்தகத்தின் தலைப்பே ” நீட் தேர்வு சவால்களும் பயிற்று மொழி சிக்கல்களும் ” என்பதாகும்.

இந்த நூலில் ஏன் இந்த வெளியீடு எனும் தலைப்பில் ” அகரம் அறக்கட்டளையில் மாணவர் தேர்வு குழுவை வழிநடத்தும் பேராசிரியர் பிரபா கல்விமணி (கல்யாணி) என்பவர், நீட் தேர்வு தொடர்பாக பல்வேறு அறிஞர்கள் ஊடகங்களில் வெளியிட்டிருந்த கட்டுரைகளைத் தொகுத்து இந்த நூலை உருவாக்கியுள்ளார். நீட் தேர்வை முன்வைத்து, கல்விசூழலில் நாம் சந்திக்கின்ற சவால்களையும், பயிற்று மொழியில் உள்ள சிக்கல்களையும் புரிந்துகொள்ள இது உதவும் ” என சூர்யா கூறியுள்ளார்.

அதே பகுதியில், ” ஓட்டப் பந்தயத்தில் சிலரின் கை கால்களை மட்டும் கட்டிப் போட்டுவிட்டு முதலில் வந்தவர்களுக்கே பரிசுகள் என அறிவிப்பது எத்தகைய அபத்தமோ, அதைவிட அபத்தமாகப் பலவிதமான தடைகளைக் கல்விச்சூழலில் ஏற்படுத்திவிட்டு, அனைவருக்கும் ஒரேவிதமான தேர்வுமுறையினை வைக்கிறோம்.

புரிந்து கொள்ளப்பட வேண்டிய முக்கிய விஷயங்களைப் பற்றி எவ்விதமான உரையாடலோ, விவாதமோ செய்யாமல் மெளனமாக இருப்பது மிகவும் ஆபத்தில் கொண்டுபோய்விடும். அமெரிக்காவில் டொனால்டு ட்ரம்ப் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டது குறித்து, நம்மிடையே நடந்த விவாதங்கள், உரையாடல்களில் ஒரு சதவீதம்கூட, லட்சக்கணக்கான மாணவர்களின் வாழ்வைத் தீர்மானிக்கப்போகிற ” நீட் தேர்வு ” பற்றி நடைபெறவில்லை ” என்றும் குறிப்பிட்டு இருக்கிறார்.

இந்த வாக்கியங்களை முன்னிறுத்தி புத்தக வெளியிட்டு நிகழ்ச்சியிலும் சூர்யா பேசி இருக்கிறார். மேற்காணும் வீடியோவில் 7வது நிமிடத்தில் அதை பார்க்கலாம். நீட் தேர்வின் சவால்களும், பயிற்று மொழியில் உள்ள சிக்கல்கள் குறித்து பல அறிஞர்கள் வெளியிட்ட கட்டுரை தொகுப்பு புத்தகத்தின் மூலம் நீட் தொடர்பான உரையாடல்களும், புரிதலும் உருவாக வேண்டும் என்ற எண்ணத்தில் அந்த புத்தகத்தை வெளியிட்டு இருக்கிறார்கள். ஆனால், அந்த புத்தகம் நீட் ஆதரவு புத்தகம் எனவும், நீட் நுழைவுத் தேர்விற்கான புத்தகம் எனவும் தவறாக பரப்பி வருகிறார்கள்.

புத்தகத்தின் பிடிஎஃப் லிங்க் : நீட் தேர்வு சவால்களும் பயிற்று மொழி சிக்கல்களும்

update : 

2017-ல் அகரம் அறக்கட்டளை சார்பில் சூர்யா வெளியிட்ட ” நீட் தேர்வு சவால்களும் பயிற்று மொழி சிக்கல்களும் ” எனும் புத்தகம் நீட் தேர்வு தொடர்பாக நீதிபதி, எழுத்தாளர்கள், அரசியல் தலைவர்கள் உள்பட பல அறிஞர்கள் வெளியிட்ட கட்டுரைகளின் தொகுப்பே. நீட் தொடர்பான உரையாடலுக்காகவும், மத்திய மாநில அரசின் செயல்பாடு தொடர்பான புரிதலுக்குமே வெளியிட்டு இருக்கிறார்கள் எனக் கூறி இருந்தோம்.

எனினும், ஒரு சாரார் நடிகர் சூர்யா வெளியிட்ட புத்தகம் நீட் ஆதரவு புத்தகமே என வாதிடத் தொடங்கி இருந்தனர். முன்பே கூறியது போன்று, ” நீட் தேர்வு சவால்களும் பயிற்று மொழி சிக்கல்களும் ” எனும் புத்தகத்தை முழுமையாக படித்து பார்க்கையில் நீட் தேர்வு தொடர்பாக ஆதரவும், எதிர்ப்பும் கொண்டவர்களின் கட்டுரைகள் மட்டுமின்றி இரண்டு பக்கமும் உள்ள நிறை, குறைகளை பேசியவர்களின் கட்டுரைகளும் இடம்பெற்று இருக்கிறது.

உதாரணத்திற்கு, முன்னாள் நீதிபதி கே.சந்துரு, ப.தமிழ்க்குரிசில் ஆகியோர் நீட் ஆதரவு நிலைப்பாட்டைக் கொண்டு கட்டுரையை எழுதி இருக்கிறார்கள். ஆனால்,  பிரபா கல்விமணி, தொல்.திருமாவளவன், டி.ஜெ.ஞானவேல் போன்றவர்கள் நீட் தேர்வுக்கு எதிரான நிலைப்பாட்டைத் தெரிவித்து இருக்கிறார்கள். நீட் தேர்வு வேண்டாம் எனக் கூறும் மாநிலங்களுக்கு விலக்கு அளிக்கும் வகையில் சட்டம் கொண்டு வர வேண்டும் எனக் கேட்டுக் கொண்டுள்ளார் திருமாவளவன். எம்.பி ரவிக்குமார் போன்றவர்கள் தனியார் மருத்துவக் கல்லூரிகள், தமிழக அரசின் செயல்பாடு, நீட் தேர்வு என இரண்டு பக்கமும் உள்ள நிறை, குறைகளை விரிவாக பேசி இருக்கிறார்கள்.

” ஐ.ஐ.டி நுழைவு தேர்வுகளில் தமிழக மாணவர்கள் தேர்ச்சி பெறாதது குறித்தும், பல பள்ளிகளில் 12ஆம் வகுப்பு பொது தேர்வு தேர்ச்சி மதிப்பெண்களை மட்டும் கணக்கில் கொண்டு 11ஆம் வகுப்பு பாடங்களை நடத்தாமல் 12ஆம் வகுப்பு செல்லுவதை கண்காணிக்க வேண்டும் என்பது குறித்து ராமதாஸ் அவர்கள் 2014-ல் வெளியிட்ட அறிக்கையும் இடம்பெற்று இருக்கிறது “.

பள்ளி கல்வி மட்டுமின்றி இளநிலை, முதுநிலைப் பட்ட படிப்பிலும் அனைத்து துறையிலும் தமிழ் வழிக் கல்வி எவ்வாறு கொண்டுவந்தால் தமிழை பாதுகாக்கலாம் என்று கலாம் ஐயா கூறிய வழிமுறைகளை ” தமிழ் செழிக்க 6 அம்ச திட்டம்” எனும் தலைப்பில் இதில் தொகுத்து உள்ளனர்.

மேலும் புதியதலைமுறை கல்வி, ஆனந்த விகடன், தி ஹிந்து, தினமணி ஆகிய இதழ்களில் பல கல்வியாளர்கள் குறிப்பிட்டு உள்ள வழிமுறைகளையும் இதில் தொகுத்து இணைத்து உள்ளனர்.

இப்படி ஒவ்வொருவரின் பார்வையில் நீட் தேர்வு, மருத்துவக் கல்வி குறித்தும், தமிழக மாணவர்களின் கல்வி குறித்தும் தனித்தனி தலைப்பில் கட்டுரைகள் வெளியாகி இருக்கின்றன. மீண்டும், மீண்டும் தவறாக புரிந்து கொள்ள வேண்டாம் எனக் கேட்டுக் கொள்கிறோம்.

Please complete the required fields.
ஆதாரம்

Back to top button
loader