இல்லாத அறக்கட்டளைக்கு ஒரு கோடி ரூபாய் கொடுத்தாரா நடிகர் சூர்யா?

பரவிய செய்தி

நடிகர் சூர்யா அவர்கள் சமீபத்தில் இருளர் பழங்குடியினரின் கல்விக்காக ஒரு கோடி ரூபாய் கொடுப்பதாகச் சொல்லி , இல்லாத ஒரு அறக்கட்டளையின் (பழங்குடி இருளர் கல்வி அறக்கட்டளை) பேரில் ஒரு கோடி ரூபாய் கொடுத்தாக ஏமாற்றி உள்ளார்.

Youtube Link

மதிப்பீடு

சுருக்கம்

“இருளர் பழங்குடியினரின் கல்விக்காக , ‘பழங்குடி இருளர் கல்வி அறக்கட்டளை’ என்ற அறக்கட்டளைக்கு நடிகர் சூர்யா ஒரு கோடி ரூபாய் அகரம் சார்பில் கொடுத்தார். ஆனால் ‘பழங்குடி இருளர் கல்வி அறக்கட்டளை’ என்ற பெயரில் எந்த ஒரு சங்கமும் அரசாங்கத்தில் பதிவு செய்யப்படவில்லை. இல்லாத அறக்கட்டளைக்கு நடிகர் சூர்யா ஒரு கோடி ரூபாய் கொடுத்துள்ளார். அந்த அறக்கட்டளை உள்ளது உண்மை என்றாலும் அரசாங்கத்தில் பதிவு செய்யப்படாத அறக்கட்டளைக்கு ஏன் பணம் கொடுக்க வேண்டும்? இவையெல்லாமும் தமிழ்நாட்டு முதல்வர் முன்னிலையிலேயே நடக்கிறது. பொதுமக்களின் பணத்தை சூர்யா எப்படி இன்னொரு அறக்கட்டளைக்கு கொடுக்கலாம்? நம் கண்முன்னே மிகப்பெரிய அநியாயம் நடக்கிறது.” போன்ற குற்றசாட்டுகளை முன்வைத்து ஒரு வீடியோ ஒன்று வைரலானது.

விளக்கம்

உண்மை என்ன?

Advertisement

‘ஜெய் பீம்’ திரைப்படம் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றதைத் தொடர்ந்து நடிகர் சூர்யா , இருளர் பழங்குடியினரின் கல்விக்காக, தமிழ்நாட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் ரூபாய் ஒரு கோடியை ‘பழங்குடி இருளர் கல்வி அறக்கட்டளை’ என்ற அறக்கட்டளைக்கு கொடுத்தார். இந்த செய்தி அனைத்து நாளிதழ்கள் உட்பட அனைத்து பத்திரிகைகளிலும் வெளியானது. உண்மையில் சூர்யா இல்லாத அறக்கட்டளைக்கு ஒரு கோடி ரூபாய் கொடுத்தாரா? என்பதைத் தெளிவுபடுத்த யூ டர்ன் தரப்பில் ஆய்வில் இறங்கினோம்.

இது தொடர்பாக அகரம் அறக்கட்டளையைத் தொடர்புகொண்டு பேசினோம். அவர்கள் தரப்பில் கூறியதாவது:-

“முதலில் ஒரு விஷயத்தை தெளிவுப்படுத்த விரும்புகிறேன். அகரம் அறக்கட்டளையிலிருந்து இருளர் மக்களுக்கு வழங்கப்படும் ஒரு கோடி ரூபாய் பணம் என்பது பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட பணம் அல்ல. நடிகர் சூர்யா அவருடைய 2டி நிறுவனத்திலிருந்து அகரம் அறக்கட்டளைக்கு கொடுத்த பணம் இது. மற்றுமொரு விஷயம் அகரம் ஒருபொழுதும் நிர்வாகத்திற்காக பொதுமக்களின் பணத்திலிருந்து ஒரு ரூபாயைக் கூட எடுத்தது கிடையாது, நிர்வாக செலவுகள் அனைத்தும் நடிகர் சூர்யா தான் தருவார். இந்த ‘பழங்குடி இருளர் கல்வி அறக்கட்டளை’ என்ற ஒன்று இருப்பதற்கான அனைத்து ஆதாரங்களையும் ஆவணங்களையும் நாங்கள் பார்த்துள்ளோம்.

பழங்குடி இருளர் கல்வி அறக்கட்டளை பதிவு செய்யப்பட்டதற்கான ஆதாரம்:-

Advertisement

அந்த அறக்கட்டளை 80G சான்று பெற்ற அறக்கட்டளை இல்லை என்பதால் அது ஒரு அறக்கட்டளையே இல்லை என்றாகிவிடாது. 80G சான்று பெறாத அறக்கட்டளைக்கு ஒரு அசல் காசோலையை கொடுக்க முடியாது என்பது எங்களுக்கு நன்றாகவே தெரியும். இருளர் மாணவர்கள் தங்கிப்படிக்கும் வகையில் விடுதி ஒன்றை கட்டுவதற்காக ‘பழங்குடி இருளர் கல்வி அறக்கட்டளை’ முடிவு செய்தது. அதற்காக அந்த அறக்கட்டளையின் பெயரில் அவர்கள் நிலம் வாங்கி வைத்துள்ளார்கள். அந்த நிலத்தில் விடுதி கட்டுவதற்காக பழங்குடி இருளர் கல்வி அறக்கட்டளை எங்களை கேட்டுக்கொண்டது. அதனால் நாங்கள் பழங்குடி இருளர் கல்வி அறக்கட்டளை சார்பில் பழங்குடி இருளர் மக்களுக்கு விடுதி ஒன்றை கட்டிக் கொடுக்க இருக்கிறோம். அகரம் அறக்கட்டளை, 2டி நிறுவனம், பழங்குடி இருளர் கல்வி அறக்கட்டளை ஆகிய மூன்றுக்கும் இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்று போட இருக்கிறோம். இவை அனைத்தும் ஆவணமாக்கல் நிலையின் ஆரம்பக்கட்டத்தில் உள்ளது. ‘பழங்குடி இருளர் கல்வி அறக்கட்டளை’ தங்கள் நிலத்தில் கட்டிடம் கட்டுவதற்கான முறையான ஒப்புதலை வாங்கிய பிறகு , அகரம் அறக்கட்டளை பொறுப்பெடுத்து அங்கே அவர்களுக்கு ஒரு விடுதி கட்டித்தர இருக்கிறோம்.” என்றார்.

இது தொடர்பாக ‘பழங்குடி இருளர் கல்வி அறக்கட்டளை’யின் அறங்காவலர்களில் ஒருவரான சமூக செயற்பாட்டாளர் பேராசிரியர் பிரபா கல்விமணி அவர்களைத் தொடர்பு கொண்டோம்:-

“எங்களுடைய சங்கம் இருளர் பழங்குடி மக்களின் கல்விக்காகவே துவங்கப்பட்ட ஒரு அறக்கட்டளை. 2007ஆம் ஆண்டு மார்ச் மாதம் முறையாக பத்திரப்பதிவு மூலம் பதிவு செய்து இந்த அறக்கட்டளையை ஆரம்பித்தோம். இருளர் பழங்குடி மாணவர்களுக்காக ஒரு விடுதியை கட்டுவதற்கு முடிவு செய்தோம். எங்களுடைய அறக்கட்டளை உறுப்பினர்கள் மற்றும் சில தன்னார்வலர்கள் மூலம் பணம் திரட்டி விடுதி கட்டுவதற்காக விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வட்டத்தில் உள்ள அனந்தபுரம் எனும் ஊரில் 28 சென்ட் நிலம் ஒன்றை வாங்கினோம். இந்த நிலத்தில் மாணவர்களுக்கான விடுதியைக் கட்ட உள்ளோம். இதற்காகவே நடிகர் சூர்யா அகரம் சார்பில் எங்களுக்கு ஒரு கோடி ரூபாய் வழங்கினார்.

இன்னும் தெளிவாகச் சொல்லவேண்டுமானால் நடிகர் சூர்யா அவர்களிடமிருந்தோ அகரம் அறக்கட்டளையிடமிருந்தோ நாங்கள் எந்தப் பணமும் வாங்கவில்லை. எங்கள் அறக்கட்டளை ’80G/12A’யின் கீழ் பதிவு செய்யப்படவில்லை. அதனால் நாங்கள் அவ்வளவு பெரிய தொகையை நன்கொடையாகவோ காசோலையாகவோ வாங்க முடியாது. எனவே, எங்கள் அறக்கட்டளை கட்ட இருந்த விடுதியை அகரம் அறக்கட்டளையையே நேரடியாக கட்டி தந்துவிடுமாறு கேட்டுக்கொண்டுள்ளோம். அவர்களும் அவ்வாறே செய்வதாக ஒப்புக்கொண்டு எங்களுக்கு உதவ இருக்கிறார்கள்.

எங்கள் அறக்கட்டளை 80G/12Aயின் கீழ் பதிவு செய்யப்படாததால் இது இல்லாத அறக்கட்டளை என்றாகிவிடாது. முறையாக பத்திரப்பதிவு செய்துள்ள சிறிய அறக்கட்டளை எங்களுடையது.80G/12A சான்று வாங்குவதற்கான முயற்சிகளை எடுத்துக்கொண்டிருக்கிறோம்” என்றார்.

முடிவு:

நமது ஆய்வில் ‘பழங்குடி இருளர் கல்வி அறக்கட்டளை’ எனும் அறக்கட்டளை முறையாக பதிவு செய்யப்பட்ட அறக்கட்டளை என்பது தெரியவந்துள்ளது. ஆனால் அந்த அறக்கட்டளை 80G/12A சான்று பெறாத அறக்கட்டளையாக இருப்பதால் இருளர் மாணவர்களுக்காக அவர்கள் கட்டி கொடுக்கவிருந்த விடுதியை அகரம் அறக்கட்டளை நடிகர் சூர்யாவிடமிருந்து பெற்ற ஒரு கோடி ரூபாய் மூலம் கட்டித்தர இருக்கிறது என அறிய முடிகிறது.

அரசியல் கட்சி, பெரு நிறுவனங்களின் துணை இன்றி இயங்கும் நிறுவனம் , உண்மை கண்டறிதல் செய்வது எத்தனை சிக்கலான பணி என்பது மக்களுக்கு தெரியும். எங்கள் துணையாக உங்களை அழைக்கிறோம் சந்தா கட்டி தொடர்ந்து YouTurn மக்களின் பத்திரிகையாக இயங்க உறுப்பினர் ஆகுங்கள்.

Join Membership

Ask YouTurn

Please complete the required fields.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button