நடிகர் சூர்யாவின் புதிய வீட்டில் இந்தி மொழியில் பெயர் பலகை எனப் பரப்பப்படும் வதந்தி !

பரவிய செய்தி
சூர்யாவின் வீட்டில் ஹிந்தியில் வீட்டின் பெயர். தனது பிள்ளைகள் அனைத்து மொழிகளை கற்றுக்கொள்ள வேண்டும், ஆனால் தமிழ்நாட்டு பிள்ளைகள் பிற மொழி கற்க கூடாது என்ற அவரின் போலி முகத்திரை கிழிந்தது.
மதிப்பீடு
விளக்கம்
நடிகர் சூர்யா தன்னுடைய வீட்டிற்கு ஹிந்தி மொழியில் பெயர் வைத்துள்ளார், தனது பிள்ளைகள் மட்டும் அனைத்து மொழிகளையும் கற்றுக்கொள்ள வேண்டும். ஆனால் தமிழ்நாட்டுப் பிள்ளைகள் பிற மொழி கற்கக்கூடாது எனக்கூறி ஹிந்தியில் பெயர் பலகை உள்ள கட்டிடத்தின் முன்புறம் நடிகர் சூர்யா நிற்பது போன்றப் புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் பரவலாகப் பரவி வருகிறது.
தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா @Suriya_offl Mass bro neanga 🤡🤡🤡 pic.twitter.com/DYVd2G29Ts
— குறுநில மன்னன்😎👑 (@Narenkumar_Ravi) April 9, 2023
நாலடியான் வீட்டில் ஹிந்தியில் வீட்டின் பெயர்.
தனது பிள்ளைகள் அனைத்து மொழிகளை கற்றுக்கொள்ள வேண்டும், ஆனால் தமிழ்நாட்டு பிள்ளைகள் பிற மொழி கற்க கூடாது என்ற குள்ளனின் போலி முகத்திரை கிழிந்தது. pic.twitter.com/h0JsL9Ttsd— Common Citizen 🇮🇳 (@LawAcademics) April 9, 2023
உண்மை என்ன:
நடிகர் சூர்யா மும்பையில் வாங்கி உள்ள புதிய வீடு எனப் பரப்பப்படும் புகைப்படத்தை, அவரின் அதிகாரப்பூர்வ சமூக வலைத்தளப் பக்கங்களில் தேடினோம். அப்படி எந்த புகைப்படமும் அவரது பக்கத்தில் பதிவிடப்படவில்லை.
மேற்கொண்டு அப்படத்தைக் கூகுளில் ரிவர்ஸ் இமேஜ் சேர்ச் மூலம் ஆய்வு செய்ததில், இது மும்பையின் பாந்த்ரா நகரில் உள்ள பிரபல Mizu என்கிற ஜப்பானிய உணவகத்தின் முன்பாக எடுக்கப்பட்ட புகைப்படம்.
கடந்த மார்ச் மாதம் 5 ஆம் தேதி சூர்யா மிஜு உணவகத்தில் தன் குடும்பத்தினருடன் உணவருந்த சென்றிருப்பதும், உணவகத்தில் இருந்து வெளிவரும் காட்சி Movified என்ற யூடியூப் சேனல் வெளியிட்டுள்ள வீடியோவில் இடம்பெற்று இருக்கிறது.
நடிகர் சூர்யாவிற்கு பின்னால் உள்ள பெயர் பலகையில் உள்ள வார்த்தையை மொழிப்பெயர்ப்பு செய்து பார்கையில், அந்த உணவகத்தின் பெயரையே காண்பிக்கிறது. இதையே சூர்யாவின் புதிய வீடு எனத் தவறாகப் பரப்பி வருகின்றனர்.
இதேபோன்று நடிகர் சாருக்கான் மனைவி கெளரி, நடிகை ஜான்வி கபூர் , நடிகை பட்ரலேகா மற்றும் நடிகை அனன்யா பாண்டே போன்ற பிரபலங்கள் மிஜு உணவகத்திற்கு வந்து சென்றுள்ள புகைப்படமும், வீடியோவும் நமக்கு கிடைத்துள்ளன.
முடிவு:
நம் தேடலில், மும்பையில் நடிகர் சூர்யாவின் புதிய வீட்டில் ஹிந்தியில் பெயர் பலகை உள்ளதாக பரப்பப்படும் புகைப்படம் தவறானது. அது மும்பையின் பாந்த்ரா நகரில் உள்ள மிஜு உணவகக் கட்டிடத்தின் புகைப்படம் என்பதை அறிய முடிகிறது.